மருமகள்



பால்ய நண்பர் சிவராமனை வரவேற்ற சுந்தரேசன், தன் மூத்த மருமகள் விமலாவைக் கூப்பிட்டார்.‘‘சிவராமனுக்கு காபி கொண்டு வாம்மா... சர்க்கரை தூக்கலாவே இருக்கட்டும். இன்னைக்கு இங்க என்னோட தான் சாப்பிடப் போறான். அவனுக்காக மதியம் ஏதாவது ஸ்பெஷல் அயிட்டம் பண்ணும்மா!’’ என்றார்.‘‘சரி மாமா’’ என புன்னகையோடு சொல்லிவிட்டு அவள் நகர, இரண்டாவது மருமகள் உமாவை அழைத்தார்.

‘‘மூத்தவன் நேத்து சம்பளம் வாங்கிட்டான்மா. நேத்து உன் புருஷன் கொடுத்த பணத்தோட இதையும் சேர்த்து குடும்பச் செலவுக்கு வச்சிக்கம்மா!’’ என அவள் கையில் ஒரு கத்தையைத் திணித்தார்.சிவராமனுக்குக் குழப்பம்.‘‘சுந்தரேசா... சொல்லறேன்னு கோவிச்சுக்காதே... மூத்த மருமகளை வெறும் சமையல்கட்டில் மட்டும் விட்டுட்டு, வீட்டு நிர்வாகத்தை இளைய மருமகள்கிட்ட தர்றீயே... இதனால உன் மருமகள்களுக்குள்ள சண்டை வராதா?’’ என்றார் ஆச்சரியமாக!

‘‘சேச்சே... மூத்தவள் கேட்டரிங் படிச்சிருக்கா... இளையவள் பி.காம்... குடும்பம் கூட ஆபீஸ் மாதிரிதான். படிப்புக்கு ஏத்த பொறுப்பு தர்றேன். இதில் ஏன் சண்டை வருது?’’ என்றார் சுந்தரேசன் சிரித்தபடி! ரிட்டயர்மென்ட் வரை சுந்தரேசன் எப்படி வேலை செய்த இடத்தில் எல்லாம் பெரிய பொறுப்புகளை வகித்தார் என்பது சிவராமனுக்குப் புரிந்தது!       

வி.சிவாஜி