சிவகாசிக்கு வேட்டு வைக்கும் சீனப் பட்டாசு!



நான்காம் தர உற்பத்திகளைக் கொட்டி உலகத்தையே கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது சீனா. இந்தியாவும் விதிவிலக்கு இல்லை! 50 பைசா சாக்லெட் முதல் 500 ரூபாய் மொபைல் வரை... எல்லாவற்றிலும் சீனமயம்.

 இந்தியத் தொழில்துறையின் வேரை அசைத்துப் பார்க்கும் சீனா இப்போது கண் வைத்திருப்பது சிவகாசியின் மீது. 5 லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் பட்டாசுத் தொழிலை அழிக்கும் விதமாக கண்டெய்னர் கண்டெய்னராக அபாயகரமான மலிவு விலை பட்டாசுகளை இந்தியாவுக்குள் கொட்டுகிறது சீனா. லாபவெறி கொண்ட சிலர் விபரீதம் புரியாமல் அதற்குத் துணை போவதுதான் வேதனை!

இந்தியாவின் 90% பட்டாசு சிவகாசியில்தான் உற்பத்தியாகிறது. விருதுநகரைச் சுற்றி சிறிதும் பெரிதுமாக 780 பட்டாசுத் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.3000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் இங்கே தயாராகின்றன. ‘‘சிவகாசியில பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், காப்பர் போன்ற ரசாயனங்களை மட்டுமே பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கிறாங்க. இந்த ரசாயனங்கள் பாதுகாப்பானவை. தீ பட்டால் மட்டுமே வெடிக்கக் கூடியவை. இதோட விலையும் அதிகம்.

 125 டெசிபல் அளவுக்கு சத்தம் கிளப்பக் கூடிய, காதுகளை சேதமாக்காத பட்டாசுகள் மட்டுமே இங்கே தயாராகுது. சீனாவில நிலைமை வேற. லாபம் மட்டும்தான் அவங்க இலக்கு. பொட்டாசியம் குளோரேட், பெர் குளோரேட், சல்பர்னு அதிக வீரியமுள்ள ரசாயனங்களைப் பயன்படுத்துறாங்க. இந்த ரசாயனங்களோட விலை ரொம்ப மலிவு. சத்தம், கிளாரிட்டி, புகை எல்லாம் அதிகமா இருக்கும். லேசா கீழே போட்டாலே வெடிச்சுடும். இந்தியாவில இந்த ரசாயனங்களைப் பயன்படுத்த தடை விதிச்சிருக்காங்க.

சீன பட்டாசும் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியல்ல இருக்கு. ஆனா, பொம்மைகள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்னு கண்டெய்னர் மேல லேபிளை ஒட்டி அதிகாரிகளைச் சரிகட்டி இறக்குமதி பண்ணியிருக்காங்க’’ என்கிறார் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ள தமிழ்நாடு பட்டாசுத் தொழில், தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன்.

கடந்த வருடம் மட்டும் 600 கண்டெய்னர் சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக சொல்கிறார் முத்துகிருஷ்ணன். இவற்றின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய். ‘‘இந்த இறக்குமதியால சிவகாசிக்கு மட்டும் பாதிப்பில்லை. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பாதிப்பு. பொட்டாசியம் குளோரேட், பெர் குளோரேட் எல்லாம் வெடிகுண்டுகளுக்குப் பயன்படுத்துற ரசாயனங்கள். இந்தியாவில இதையெல்லாம் எளிதா வாங்கமுடியாது. ஆனா, 2 ஆயிரம் ரூபாய்க்கு சீனப்பட்டாசு வாங்கினா போதும்... வெடிகுண்டு தயாரிக்கிற அளவுக்கு ரசாயனங்கள் கிடைச்சிடும். இந்த விபரீதத்தை உணராத அதிகாரிகள், இறக்குமதிக்கு துணை போறதுதான் வேதனை’’ என்று வருந்துகிறார் இந்த இயக்கத் தலைவர் ராஜா.

‘‘சிவகாசியில பேப்பர் கண்டெய்னர் பயன்படுத்தி பட்டாசு செய்யிறாங்க. சீனாவில பிளாஸ்டிக் கண்டெய்னர் பயன்படுத்துறாங்க. சிவகாசி வெடி வெடிச்சா மருந்து வாசனை வரும். சீனப் பட்டாசு வெடிச்சா பிளாஸ்டிக் வாசனை வரும். நம்ம பட்டாசைவிட 30 மடங்கு சுற்றுச்சூழல் பாதிப்பை உருவாக்கும். 250 ஷாட் உள்ள சிவகாசி ஃபேன்ஸி பட்டாசு 4000 ரூபாய்னா, சீனப் பட்டாசு 600 ரூபாய்க்குக் கிடைக்கும். பேக்கிங் சின்னதா, டிசைனா இருக்கும்.

விளைவு தெரியாம மக்கள் அதை விரும்பி வாங்குறாங்க. ஆனா, சாதாரணமா கீழே விழுந்தாக்கூட சீனப்பட்டாசு வெடிச்சிடும். மதுரை உயர் நீதிமன்றத்துல சீனப் பட்டாசு பார்சலை நீதிபதிகள் பிரிக்கச் சொன்னப்போ ‘அதைப் பிரிச்சாலே வெடிச்சுடும்’னு வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் சொன்னார். ஆனா அதை சர்வசாதாரணமா இருப்பு வச்சு விற்பனை செஞ்சிருக்காங்க’’ என்கிறார் ராஜா.   
சீனப்பட்டாசு எப்படி இந்தியாவுக்குள் வருகிறது?

‘‘ரெண்டு விதமா இந்தப் பட்டாசுக் கடத்தல் நடக்குது. ஒண்ணு, லேபிள் ஒட்டாம தயாரிச்சு வர்ற பட்டாசு. இது நேரா சிவகாசி ஃபேக்டரிகளுக்குப் போகும். இங்கே உள்ளூர் லேபிளை ஒட்டி மார்க்கெட்டுக்கு அனுப்புவாங்க. ரெண்டாவது, நேரடியா சீன லேபிள் ஒட்டி வர்றது. இந்த கண்டெய்னர் நேரா மார்க்கெட்டுக்குப் போயிடும். சிவகாசி பட்டாசுக்கு வட மாநிலங்கள்ல பெரிய மார்க்கெட் இருக்கு. இங்குள்ள சில உற்பத்தியாளர்கள் இங்கே உற்பத்தி பண்றதை விட விலை குறைவாக கிடைக்கிறதால, சட்டத்துக்குப் புறம்பா சீனாவில உள்ள தொழிற்சாலைகள்ல இருந்து பட்டாசுகளை தருவிச்சு அனுப்பிக்கிட்டிருந்தாங்க. சில கம்பெனிக்காரங்க இங்கிருந்து சீனாவுக்குப் போய் பேக்டரியே ஆரம்பிச்சாங்க.
 
இந்தியாவுல இருக்கிற பல துறைமுகங்கள் வழியா சீனப்பட்டாசு வருது. இதுக்கு பல மட்டங்கள்ல அதிகாரிகளோட துணை இருக்கு. ‘இவ்வளவு வெளிப்படையா கடத்தல் நடக்கும்போது ஏன் நடவடிக்கை எடுக்கலே’ன்னு தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகள்கிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேட்டபோது, ‘ஒரு நாளைக்கு துறைமுகத்துக்கு 500 கண்டெய்னர்கள் வருது. அதுல 20 கண்டெய்னர்களை சோதனை பண்றதுக்கு மட்டுமே வசதி இருக்குன்னு அதிகாரிகள் சொன்னாங்க. துறைமுகத்தோட பாதுகாப்பு லட்சணம் இப்படி இருந்தா எப்படி? மீதமுள்ள 480 கண்டெய்னர்கள்ல ஆயுதங்களோ, ஆபத்தான பொருட்களோ இருந்தா என்ன ஆவது? இதை உடனடியா தடுத்து நிறுத்தலன்னா நாடு பெரிய சிக்கலை எதிர்கொள்ளும்’’ என்கிறார் ராஜா.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தின் (டான்பாமா) துணைத் தலைவர் மாரியப்பனிடம் பேசினோம். ‘‘லாபமே பிரதானமாகக் கருதக்கூடிய சிலர் இந்த சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபடுகிறார்கள். அவர்களைக் கண்காணித்து வருகிறோம். கடந்த நான்கைந்து வருடங்களாகவே சீனப் பட்டாசு பற்றிய புகார்கள் உண்டு. இப்போது சிவகாசியிலேயே சீனப் பட்டாசு பிடி பட்டிருக்கிறது. இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கனவே இங்குள்ள பல தொழிற்சாலைகளை மூடிவிட்டார்கள்.

சீனப்பட்டாசு சிவகாசியின் மொத்த தொழிலையும் அழித்து விடும் என்று அஞ்சுகிறோம். சீனப் பட்டாசுகளில் பல ஆபத்தானவை. பாசிட்டிவ்-நெகட்டிவ் மின்னோட்டம் மூலம் வெடிக்கும் பட்டாசுகள் கூட வருகின்றன. அம்மாதிரிப் பட்டாசுகள் செருப்பு போடாமல் நின்று தொட்டால்கூட வெடித்து விடும். இந்த விபரீதத்தை தடுக்க தொழிலாளர் அமைப்புகளோடு இணைந்து செயல்பட முடிவெடுத்திருக்கிறோம்’’ என்கிறார் மாரியப்பன். சீனப் பட்டாசை விட ஆபத்தானது, அதை அனுமதித்த அதிகாரிகளின் செயல். சீனப் பட்டாசோடு சேர்த்து அவர்களையும் அப்புறப்படுத்த வேண்டும். சிவகாசிக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் அதுதான் நல்லது.

வெ.நீலகண்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்