அசத்தும் அரசுப் பள்ளிகள்!



கல்வி ஸ்பெஷல்

சமீபத்திய +2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் அசத்தலான தேர்ச்சி விகிதத்தை எட்டியிருக்கின்றன அரசுப் பள்ளிகள். +2வில் 113 பள்ளிகளும், பத்தாம் வகுப்பில் 887 பள்ளிகளும் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வில் மட்டும் 23 ஆயிரத்து 445 மாணவ-மாணவிகள் 500க்கு 450க்கும் அதிகமான மதிப்பெண்ணை பெற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெற்றோரின் ‘குட் புக்’கில் இப்போது அரசுப் பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன.

+2 முடித்ததும் தங்கள் பிள்ளைகளை அரசு மருத்துவக் கல்லூரியிலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும், ஐ.ஐ.டி.யிலும் சேர்க்க அல்லாடும் பெற்றோரில் பலரும் தொடக்கக் கல்வி பயில அரசுப் பள்ளிகளை துளியும் நாடுவதில்லை. அதிகளவு பணம் பிடுங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை வீசும் பெற்றோர் கூட தனியார் பள்ளிக்கு மாற்றாக அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவ்வளவு ஏன்... அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. காரணம், அரசுப் பள்ளிகளில் போதுமான கல்வித் தரமும், அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை என்பதுதான்.

ஆனால், இந்தக் காரணங்களை எல்லாம் தற்போதைய ரிசல்ட் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. கூடவே, அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்து படிக்க வைக்கலாம் என்கிற புது நம்பிக்கையை பெற்றோரிடையே ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘இப்ப வந்திருக்கிற ரிசல்ட்டைப் பார்த்தே பல பெற்றோர் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வர்றாங்க சார். ஆனா, மெட்ரிக் பள்ளிகளில்தான் டி.சி தர மறுக்கிறாங்க’’ என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர்.

இந்த வெற்றிக்குப் பின்னே இருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு அளப்பரியது. ‘‘அரசுப் பள்ளியில படிக்கிற பெரும்பாலான மாணவ-மாணவிகள் ஏழைக் குடும்பத்திலிருந்து வர்றவங்க. அன்னைக்கு வேலைக்குப் போனாதான் குடும்பத்தைக் காப்பாத்த முடியும்ங்கிற சூழல்ல பல பெற்றோர் இருக்காங்க. அவங்கள்ல பலருக்கும் பிள்ளைகளுக்கு சொல்லித் தர்ற அளவுக்கு படிப்பு இல்ல. பெற்றோர் ஆசிரியர் கூட்டத்துக்குக் கூட வரமுடியாத நிலை. இதனால, ஆசிரியர்கள்தான் மாணவ-மாணவிகள்கிட்ட தனிக் கவனம் எடுத்து செயல்பட்டாங்க.

எங்க ஸ்கூல் மாநில அளவுல முதலிடம் பிடிச்சதுக்கு இதுதான் காரணம். அப்புறம், சிறப்பு வகுப்புகள் காலையிலயும், சாயங்காலமும் நடத்தினோம். தொடர்ந்து அவங்களுக்கு தன்னம்பிக்கை தந்துட்டே இருந்தோம். அந்த உழைப்பு வீண் போகலை’’ என நெகிழ்கிறார் பத்தமடை அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வைகுண்டராமன். பத்தாம் வகுப்பில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற ஒரே அரசுப்பள்ளி மாணவியான பாஷிரா பானு படித்தது இங்குதான்!

ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்படவிட்டால் இன்னும் கூட அரசுப் பள்ளிகளால் சாதிக்க முடியும் என்கிறார் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன். ‘‘அரசுப் பள்ளிகளை நூறு சதவீதம் நம்பி வரலாம். எப்போதுமே நாங்கள் சிறப்பான கோச்சிங் தந்துட்டுத்தான் இருக்கோம். முன்னாடி பத்தாம் வகுப்புல நல்ல மதிப்பெண் வாங்குன அரசுப் பள்ளி மாணவர்கள்தான் +1 படிக்க தனியார் பள்ளியை நோக்கிப் போயிருவாங்க. அங்க இன்னும் டிரையின் பண்ணி முதல் மார்க் வாங்க வைப்பாங்க. இப்ப, அரசுப் பள்ளிகளும் இதுல கூடுதல் கவனம் எடுத்திருக்கு’’ என்கிறார் அவர்.

ஆனால், ‘மனப்பாடம் செய்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கும் இந்நிலையை வைத்து அரசுப் பள்ளிகளை எடை போடக்கூடாது’ என்கின்றனர் கல்வியாளர்கள். கல்வித் தரம், பள்ளியின் அடிப்படை வசதிகள் என எல்லாவற்றிலும் அதிக மாற்றங்கள் தேவைப்படுகிறது என்கின்றனர் அவர்கள். ‘‘இதில் பெருமைப்பட எதுவுமில்லை. முன்பு இருந்ததைவிட இப்ப மாணவர்கள்கிட்ட மனப்பாடத் திறனை அதிகரிக்க வச்சு, தனியார் பள்ளிகளுக்கு சமமாக அரசுப் பள்ளிகளும் வந்திருக்காங்கன்னுதான் இதைச் சொல்ல முடியும். இதைவிட முக்கியம்...

தரமான கல்வியை எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கறதுதான். கல்வியறிவோடு பொது அறிவையும் கூட்ட வேண்டியிருக்கு. இந்த வருஷத்துல இருந்து எல்லாப் பள்ளியிலயும் ஆங்கில வழி ஒரு செக்ஷன் கொண்டு வரப் போறாங்க. ஆனா, ஆங்கிலத்தை தரமா சொல்லித் தர இங்க ஆசிரியர்கள் இருக்காங்களான்னு கேட்டா, அதுக்கு ‘இல்லை’ன்னு தலைகுனிய வேண்டியிருக்கும்.

நாங்க நடத்தின ஒரு ஆய்வுல 42 சதவீத பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பது தெரிந்தது. அடிப்படை வசதிகளோட தரமான கல்வியையும் கொடுத்தாதான், எதிர்கால தலைமுறையை சுயமாக சிந்திக்கிற அறிவுஜீவிகளாக வார்த்தெடுக்க முடியும்’’ என்கிறார் ‘தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆய்வகம்’ அமைப்பின் ஒருங்கமைப்பாளர் சண்முக வேலாயுதம்.   

இதுகுறித்து கல்வியாளர் ‘பாடம்’ நாராயணனிடம் பேசினோம். ‘‘தமிழக அரசு ஒவ்வொரு வருஷமும் பள்ளிக் கல்விக்கு அதிக தொகையை ஒதுக்குது. இந்த ஆண்டு 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கு. இது வரவேற்க வேண்டிய அம்சம். இருந்தும் இன்னும் தரத்தை மேம்படுத்த வேண்டியிருக்கு. அரசுப் பள்ளிகள்ல நல்ல நூலகத்தை உருவாக்கி, வாசிப்பை ஊக்கப்படுத்தணும்.

அப்பதான் சமூக அக்கறை அவர்களிடம் வளரும். அடுத்து, இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி ‘பள்ளி மேலாண்மைக் குழு’வை சீக்கிரமா ஆரம்பிக்கணும். இந்தக் குழுதான் பள்ளி மேம்பாட்டுக்கான பட்ஜெட்டை ரெடி பண்ணி மாவட்ட கல்வி அதிகாரிகிட்ட கொடுக்கும். பள்ளிகளின் வசதிகளைக் கண்காணிக்கவும் செய்யும். ஆனா, துரதிர்ஷ்டவசமாக எந்தப் பள்ளியிலும் இந்தக் குழு செயல்படல. இந்தக் குழுவை முறையா அமைச்சு நடத்தினாலே அரசுப் பள்ளிகளின் தரம் கூடிடும்.

ஏன்னா, இந்தக் குழு சட்ட அதிகாரம் பெற்றது. அடுத்ததா, தரமான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து ஆசிரியர் பற்றாக்குறையை போக்கணும். அப்போதுதான் தரமான மாணவர்களை உருவாக்குவது சாத்தியம். அதன்பின் முதலிடத்தில் அரசுப் பள்ளிகள் இருக்கும். பெற்றோரும் தனியாரை நாடாமல் அரசுப் பள்ளியை மட்டுமே நாடி வருவார்கள்’’ என்கிறார் அவர் முடிவாக.  இந்த வருஷத்துல இருந்து எல்லாப் பள்ளியிலயும் ஆங்கில வழி ஒரு செக்ஷன் கொண்டு வரப் போறாங்க. ஆனா, ஆங்கிலத்தை தரமா சொல்லித் தர இங்க ஆசிரியர்கள் இருக்காங்களா?

- பேராச்சி கண்ணன்
படங்கள்: பரமகுமார்