ஜனநாதன் புறம்போக்கு Talk



கார்த்திகாவையும் சேர்த்து நாலு ஹீரோ!

‘‘ ‘புறம்போக்கு’ன்னு கூகுளில் தேடினால் அது, ‘நோ மேன்ஸ் லேண்ட்’னு காட்டுது. ஆனால், அது உண்மையில்லை. அனை வருக்கும் பயன்படுவதுதான் ‘புறம்போக்கு’. என்னைப் பொறுத்தவரை அண்டவெளி முழுக்கவே ‘புறம்போக்கு’தான். கடல் கூட நிலத்திலிருந்து 28 கி.மீ வரைக்கும்தான் நமக்குச் சொந்தம். அதுக்குப் பிறகு அது சர்வதேச புறம்போக்கு. அண்டவெளியில் நிலா கூட புறம்போக்குதான். அதில் எனக்கும், உங்களுக்கும் கூட உரிமை இருக்கு.

எல்லோருக்கும் பாத்தியதை உள்ளதுதான் ‘புறம்போக்கு’!’’ - புறம்போக்கின் ஆதி அந்தம் பேசுகிறார் டைரக்டர் ஜனநாதன். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சிறந்த அடையாளங்களுள் ஒருவர். ‘‘உங்களின் படங்கள் ஒவ்வொண்ணும் வெவ்வேற தினுசு. எப்படி இருக்கும் இந்தப் படம்?’’

‘‘காதலோட சந்தோஷமும், வலியும் வாழ்க்கையுமா ‘இயற்கை’யை சொல்ல முடிஞ்சது. மனுஷங்களை சோதனை செய்து பார்க்க பயன்படுத்திக்கிட்டு அப்படியே விட்டுட்டு ஓடுகிற அந்நிய நாட்டு சதியை அடையாளம் சொன்னது ‘ஈ’. பொதுவுடமைதான் நமக்கு அற்புத வெளியா அமையும்னு சொல்ல வந்தது ‘பேராண்மை’. ‘புறம்போக்கில்’ கூட உலகளாவிய பிரச்னைதான் உள்ளே இருக்கும். அதில் அன்றாட வாழ்க்கையின் வெளிப்பாடு பின்னியிருக்கும். காலையில் நாம் எழுந்திருச்சு பேஸ்ட் வச்சு பல் துலக்குவதிலிருந்து சர்வதேசத்தோட சம்பந்தம் இருக்கும். அவர்கள் நம்மைக் குறி வைத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தப் பயன்பாட்டை வச்சுக்கூட தனியா படம் செய்ய முடியும்!’’

‘‘சீரியஸான கமர்ஷியலா கொடுக்கிறதால் ஆர்யா-விஜய்சேதுபதி டீம் வந்ததா?’’ ‘‘ஷாம் ‘இயற்கை’யில் அழகா வெளிவந்தார். ‘ஈ’ ஜீவாவுக்கு நல்ல இடத்தைக் கொடுத்தது. சாக்லேட் பாய் இமேஜில் இருந்த ஜெயம் ரவி, ‘பளிச்’ன்னு கோபமா, கம்பீரமா ‘பேராண்மை’யில் வெளி வந்தார். இப்படி எல்லோருக்கும் ஒரு இடம் கிடைச்ச காரணமா இருக்கலாம். இயல்பிலேயே அலட்டிக்காதவர் ஆர்யா. ‘ரெண்டு ஹீரோவா? இருந்துட்டுப் போகட்டுமே சார்’னு சொல்லி வந்தார். முழுக்க நம்பிக்கை.

‘எத்தனை சீன், யாரு ஜோடி’ன்னு பார்க்கிறதே கிடையாது. அதே மாதிரி விஜய்சேதுபதி. அபார நடிகன். அவர் பகுதியை கேட்டு அழகா உள்வாங்கிப்பார். ஷாமை ஏற்கனவே தெரியும். ஆர்யா, சேதுபதி, ஷாம் எல்லோரும் அருமையான ஒத்துழைப்பு, அவங்களை எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடிஞ்சது. பாலுன்னு கூப்பிட்டால்தான் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு ஆர்யா ஒன்றியிருந்தார். ரொம்பவும் மென்மைங்கற இலக்கணத்தை மீறிய ஒரு பெண் ஹீரோயினா தேவைப்பட்டது. லேசா முரட்டுத்தனம் வேணும். நினைவுக்கு வந்தது கார்த்திகா. காட்சிகளில் ரிஸ்க் எடுக்கும் பெரிய ஹீரோ மாதிரி, தானே முன்வந்து ஆக்ஷன் செய்தாங்க. படத்தில் அவங்களையும் சேர்த்து மொத்தம் நாலு ஹீரோனு சொல்லலாம்!’’

‘‘300 பேர் கொண்ட யூனிட்டோடு பனிமலைகளிலிருந்து பாலைவனம் வரைக்கும்... கொஞ்சம் அனுபவம் சொல்லுங்களேன்!’’ ‘‘இமாசலப் பிரதேசம் போனால் அங்கே உள்ள டிரைவர் தவிர யாரும் வண்டியை ஒரு இஞ்ச் நகர்த்த முடியாது. எங்கே பள்ளம்... எங்கே பனி... அவங்களுக்கு விரல்நுனியில் இருக்கு. அநேகமா முதல் தடவையா, காலையில் பனி மூடிய கிளைகளிலிருந்து வெயில் பட்ட முதல் நொடியில் முதல் துளி உருகி கீழே விழுவதைப் படம் பிடிச்சிருக்கோம்.

அப்படியொரு காட்சிப் பதிவே இதுவரை நான் பார்த்த தமிழ் சினிமாவில் இல்லை. எங்களை ரொம்ப பாதிச்சது அங்கேயிருக்கிற மக்களின் வாழ்க்கை. குளிருக்கு அடக்கமான பாதணிகளையும், உடைகளையும் கூட வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறாங்க. வாழ்க்கையையே முடக்கிப் போடுகிற பனி. இத்தனைக்கும் க்ரைம் ரேட் வெறும் 4% மட்டுமே இருக்கிற பகுதி. போலீஸ் ஸ்டேஷனே அரிது. அப்படிப் பார்த்திட்டு ராஜஸ்தான் வந்தா வெறும் ஒட்டகங்களும், மணலும்தான். விளைநிலங்களை கண்ணில் பார்க்க முடியலை. தூசிதான். எங்கோ தண்ணீர் இருக்கு... ஆளே இல்லாமல் அமானுஷ்யமா ரயில் வருது. நாலு பேர்தான் இறங்குறாங்க. ரெண்டு பேர் ஏறுறாங்க. நிச்சயம் பாரதிராஜா படத்தில் பார்த்த செழுமையான கிராமங்கள் இங்கே இல்லை!’’
‘‘இவ்வளவு பயணத்திற்கு நடிகர்கள் ஒத்துழைப்பு எப்படியிருந்தது?’’

‘‘எப்பவும் ஹீரோக்கள்னா அவங்க ஒத்துழைப்பு தர்றது அரிதுன்னு தவறான புரிதல் இருக்கு. கடும் குளிருக்கிடையில் காலையில் எழுந்திருக்க வேண்டிய நிர்பந்தத்தைக் கொஞ்சமும் பொருட்படுத்தலை. ஓடுகிற ரயிலில் உயிரைப் பணயம் வைத்து ஆக்ஷன் காட்டினார் ஆர்யா. கரணம் தப்பினால் மரணம். நாமாவது எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு, உம்மென்று இருக்கோம். அவங்க கேமராவிற்கு முன்னாடி சிரிக்கவும் வேண்டியிருக்கு. இப்போ நடிகர்கள் கடுமையா உழைக்கிறாங்க. தங்களை நிலைநிறுத்திக்க வெயில், மழை பார்க்கிறதில்லை. என் படத்தில் கொஞ்சம் கூடுதலா அந்த உழைப்பை செலுத்த வேண்டியிருக்கு, அவ்வளவு தான்!’’

‘‘எப்பவும் படங்களில் சீரியஸ் கருத்துகளையே முன்வைக்கிறீங்களே..?’’ ‘‘ஒன்றுமில்லாத விஷயத்தை நான் ஏன் எடுக்கணும்? இங்கே என்டர்டெயின்மென்ட் என்ற சொல்லுக்கு பொழுதுபோக்குப் படம் என்ற மொழி மாற்றமே தவறு. வேறு எதையோ நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வெற்றுப்படம் செய்ய என்னால் முடியாது! ஒரு படைப்புன்னு இருந்தால்,
அதுக்கொரு நோக்கம் இருக்கணும். அது ‘புறம்போக்’கில் இருக்கும்!

கட்சிக்காரங்களே பிரியாணியும், துட்டும் வாங்கிட்டுத்தான் தலைவர்கள் பேச்சைக் கேட்க வர்றாங்க. ஆனா, நாங்க துட்டு வாங்கிட்டு படம் காண்பிக்கிறோம். அவர்களை கை தட்ட வைக்கணும், அழ வைக்கணும், நெகிழ வைக்கணும்... எவ்வளவு கடினமான கலை பாருங்க. காமெடி, காதல், காமம் எல்லாம் பேஸிக் சார். ஆனால், மக்கள் பிரச்னைகளைப் பேசினால் அவங்க விரும்புறாங்க. அதைக் கொடுக்கிற விதத்தில் கொடுக்கணும். கிராமத்துப் படம்னு சொல்லுவாங்க. அங்கே விதை நெல்லை பத்தி யாராவது பேசுறாங்களா? விசாரிச்சா, அப்படியொரு விஷயமே அரிதாகிப் போச்சு. உண்மையை உள்ளபடி சொன்னால், வரவேற்பு கிடைக்கும். ஜெயித்த என் முந்தைய படங்களே அதுக்கு சாட்சி’’

‘‘ஆர்யா கையில் லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ புத்தகத்தைக் கொடுத்திட்டீங்க..?’’ ‘‘தூக்கிலிடுவதற்கு கொஞ்சம் முன்னால் வரைக்கும் பகத்சிங் படித்த புத்தகம். ‘நேரமாச்சு... வாங்க போகலாம்’னு தூக்கிலிட அழைக்கும்போது ‘நாலு பக்கம் இருக்கு... முடிச்சிட்டு வர்றேன்’னு சொன்ன புத்தகம். அவரே ஒரு மெடிக்கல் மிராக்கிள்னு சொல்றாங்க. தூக்கு மேடையில் கூட அவர் பல்ஸ் ரேட் நார்மல்தான். படத்தின் ஐடென்டியை நிலைநிறுத்த அந்தப் புத்தகத்தை ஆர்யா கையில் கொடுத்தேன்.

ஷாம் பேரு கூட மெக்காலேதான். இங்கிலாந்திலிருந்து ராணி கேட்டுக்கொண்டதால், இந்தியாவிற்கு வந்தவர். ஊட்டியில் தங்கி இந்தியன் பீனல் கோடு... அதுதான் இ.பி.கோ சட்டத்தை ஒற்றை ஆளாக எழுதினார். அவரை ஞாபகப்படுத்தினேன். என்னைப் பொறுத்தவரை மார்க்சியம் விஞ்ஞானம். அது என்றைக்கும் தோற்காது. அதை இங்கே உபயோகப்படுத்திய விதத்தில் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம். ‘புறம்போக்கின்’ கீழே அடிநாதமாக பொதுவுடமைன்னு வார்த்தை வச்சிருக்கேன். அதுதான் உண்மை!’’

- நா.கதிர்வேலன்