ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகள் கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறார் ஐஸ்வர்யா ராய். ஆனாலும் அவரை யாருக்கும் அலுக்கவில்லை. காரிலிருந்து இறங்கி, சிவப்புக் கம்பளத்தில் காலெடுத்து வைத்து, இரண்டு பக்கமும் காத்திருக்கும் போட்டோகிராபர்களை நோக்கி அவர் திரும்பும் ஒவ்வொரு கணமும் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டும் ஒரு தங்க நிற ஆடையில் வந்து அசத்திய ஐஸ், கான்ஸ் விழாவில் மிக அழகாக உடையணிந்து வந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தீபிகா படுகோனே கழுத்தில் ஒரு அழகிய டாட்டூ இருக்கும். ரண்பீர் கபூரைக் காதலித்தபோது ஆர்.கே என அவர் இனிஷியலைக் குத்திக் கொண்ட டாட்டு. காதல் முறிந்தபிறகும், அது பாட்டுக்கு இருக்கட்டும் என விட்டிருந்தார். இப்போது அந்த டாட்டூவை அழிக்க சர்ஜரி செய்துகொள்ளப் போகிறார். காரணங்கள் இரண்டு! ஒன்று, அவர் ரன்வீர் சிங்கை காதலிப்பது! இரண்டு, விளம்பரப் படங்களுக்காக எடுக்கும் க்ளோஸப் ஷாட்களில் அந்த டாட்டூ உறுத்தலாகத் தெரிவது!

‘‘எனக்கு வயதாவதைப் பற்றி என் ரசிகர்கள் கவலைப்படுவதில்லை’’ என்கிறார் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ். ‘‘இப்போது எனக்கு 44 வயது. 16 ஆண்டுகளாகப் பாடுகிறேன். என்னை அதே இளமையோடு ரசிகர்கள் பார்க்கிறார்கள். எனக்கும் வயதானதாகத் தோன்றவில்லை’’ என சிரிக்கிறார் இந்த எவர்கிரீன் அழகி.

மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த ட்ரூ பாரிமோர், ‘‘மறுபடியும் நான் ஹாலிவுட்டுக்கு நடிகையாகத் திரும்புவது சந்தேகம்தான்’’ என்கிறார். 39 வயதிலேயே இப்படி ஒரு முடிவா என அவரது ரசிகர்கள் கொதிக்கிறார்கள். ‘‘என்ன செய்வது? விரும்பிய உணவை சாப்பிட்டு, விரும்பிய நேரங்களில் தூங்கி ரொம்பவே குண்டாகி விட்டேன். கடந்த மாதம்தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. டயட் இருந்து உடலைக் குறைக்க முடியுமா என சந்தேகமாக இருக்கிறது’’ என்கிறார்.