கிளை மாக்ஸ்



இசையமைப்பாளரும் வந்து விட்டார். முன்னணி பாடலாசிரியர் பிரபாகரனும் உட்கார்ந்திருந்தார். இது பாடல் எழுதும் நேரம்... டைரக்டர் அந்தப் பாடலுக்கான சிச்சுவேஷனை சொல்ல ஆரம்பித்தார்...

‘‘இது குழந்தைகளுக்கான படம் சார்... படத்துல மொத்தம் அஞ்சு பாடல்கள். முதல் பாடலுக்கான சிச்சுவேஷன், குணப்படுத்த முடியாத நோயிலிருக்கும் அந்தக் குழந்தையை...’’ - டைரக்டர் சொல்லிக்கொண்டிருக்க, பிரபாகர் மனதில் பத்து வருடங்களுக்கு முன் இறந்துபோன தன் ஒரே மகனின் நினைவு.

இப்படியே நான்கு பாடலுக்கான சிச்சுவேஷனையும் சொல்லி முடித்த இயக்குனர், கிளைமாக்ஸ் பாடலான ஐந்தாம் பாடலுக்கு வந்தார். ‘‘இதுதான் கடைசி பாட்டு சார்... எவ்வளவோ போராடியும் அவங்களால அந்தக் குழந்தையை காப்பாத்த முடியலை. அப்ப ஹீரோ...’’‘‘நிறுத்துங்க சார்...’’ - பிரபாகர் கதறினான்.

‘‘உங்க சுயலாபத்துக்காக, அந்தக் குழந்தையை சாகடிச்சு அனுதாபம் தேடிக்க விரும்பறீங்க. இது குழந்தைகளை வாழ வைக்கும் படமா இருக்கும்னு நினைச்சுத்தான் என் பிஸியான நேரத்திலும், இலவசமா இந்தப் படத்துக்கு பாட்டெழுத சம்மதிச்சேன். ஆனா, இப்ப சொல்றேன்... எத்தனை கோடி கொடுத்தாலும் இந்தக் கதைக்கு நான் பாட்டெழுத மாட்டேன்!’’ விருட்டென்று நடையைக் கட்டினான் பிரபாகரன்.            

எஸ்.எஸ்.பூங்கதிர்