‘‘இது சரிப்பட்டு வராதுங்க. வீட்டை உடனே காலி பண்ணுங்க. நீங்க ராத்திரி 11 மணிக்கு வந்து காலிங் பெல்லை அடிக்கறதும்... லைட்டை 12 மணி வரை போட்டுக்கிட்டு சத்தம் போடறதும்... காலையில் 5 மணிக்கெல்லாம் பாட்டு போட்டு எழுப்புறதும்... தண்ணி புடிக்கறதும்... மனுஷங்க நிம்மதியா தூங்க முடியலை’’ - முனுசாமியின் வீட்டுக்கு வந்து கறாராய்
கத்தினாள் ஹவுஸ் ஓனரின் மனைவி.
அடுத்த அரை மணி நேரத்தில் வாடகையோடு ஹவுஸ் ஓனரைப் பார்க்கப் போனார் முனுசாமி.‘‘மிஸ்டர் முனுசாமி... உங்களுக்கு நான் நன்றி சொல்லணும். நீங்க ராத்திரி லேட்டா வர்றதால என் பையன் கதவைத் திறந்து விட வேண்டிய கட்டாயத்துல 11 மணி வரை முழிச்சிருந்து படிக்கிறான்.
காலையில் 5 மணிக்கெல்லாம் நீங்க சாமிப் பாட்டு போடறதாலே என் மனைவியும் சீக்கிரம் எழுந்து சமைக்கிறா. வேலை சீக்கிரம் ஆகிடுது. எல்லாரும் சீக்கிரமே கிளம்பிடறோம். என் ஆபீஸ் மேனேஜர் கூட, ‘வெரிகுட்! உன் வீட்டில் ஏதோ நல்ல மாற்றம் நடந்திருக்கு. கீப் இட் அப்’னு பாராட்டினார்.’’ - படபடவென பேசி முடித்தார் ஹவுஸ் ஓனர். திகைத்து நின்றார் முனுசாமி.
மாதவி