காங்கிரஸின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் அதிகார மையமாக இருந்தது... எண் 10, ஜன்பத் ரோடு. சோனியா காந்தியின் இல்லம். இப்போது நிஜமான அதிகார மையமாக பிரதமரின் இல்லம் மாறியிருக்கிறது. டெல்லியில் ‘7, ரேஸ் கோர்ஸ் ரோடு’ என்பது இந்தியப் பிரதமரின் அதிகார பூர்வக் குடியிருப்பு.
* தேர்தலுக்கு முன்பாகவே தனது ஓய்வை அறிவித்துவிட்ட மன்மோகன் சிங், மிக நிதானமாக தனது வீட்டை காலி செய்தார். மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட கையோடு, மோதிலால் நேரு ரோட்டில் இருக்கும் தனது புதிய வீட்டுக்கு அவர் போய் விட்டார். அதற்கு முன்பாகவே பிரதமரின் அரசு இல்லத்திலிருந்து அவரது உடமைகள் பேக் செய்யப்பட்டு அங்கு போய் விட்டன. பிரதமர் வீட்டை வெளிப்புறம் வெள்ளையடித்துவிட்ட பொதுப்பணித் துறையினர், இன்டீரியர் விஷயத்தில் மோடியின் ரசனையைக் கேட்டிருக்கின்றனர்.
* பொதுவாக பிரதமருக்கு என தனி வீடு ஒதுக்குவது ஆரம்பத்தில் நம் மரபில் இல்லை. நேரு தீன் மூர்த்தி பவனில் தங்கியிருந்து அலுவல் பார்த்தார். பிரிட்டிஷ் இந்திய அரசின் ராணுவத் தளபதி இல்லமாக இருந்த இடம் அது. நேருவின் மறைவிற்குப் பிறகு அது ‘நேரு நினைவு மியூசியம்’ ஆகிவிட்டது. இதேபோல லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி வசித்த வீடுகளும் மியூசியங்கள் ஆயின. இப்படி அடுத்தடுத்து ஆகிவிடக் கூடாது என்பதற்காக இந்த வீட்டை இந்தியப் பிரதமரின் அதிகாரபூர்வ வசிப்பிடமாக வி.பி.சிங் மாற்றினார்.
* 1980ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வளாகத்துக்கு ‘பஞ்சவடி’ என்று பெயர். (இதற்குள் 5 வீடுகள் இருப்பதால்!) ராஜீவ் காந்திதான் இங்கு வசித்த முதல் பிரதமர்.
* இந்த வளாகத்தில் இருக்கும் ஐந்து வீடுகளுக்கும் தனித்தனி எண்கள் உண்டு. ஒரு வீட்டில் ஹெலிபேட் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஒரு வீட்டில் பிரதமரின் குடும்பம் வசிக்கும்; ஒரு வீடு அவரது முகாம் அலுவலகமாக செயல்படும். ஒரு வீடு அவரது விருந்தினர்கள் தங்கவும், ஐந்தாவது வீடு பிரதமரின் பிரத்யேக பாதுகாப்புப் படை அலுவலர்கள் தங்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
* இந்த ஐந்து வீடுகளும் 12 ஏக்கர் பரப்பில் உள்ளன. வீடுகளைச் சுற்றி மயில்கள் உலாவும் பசுமையான தோட்டம் உண்டு. வாஜ்பாய் இங்கு உட்கார்ந்து செய்தித்தாள் வாசிப்பதை விரும்புவார். மன்மோகன் இந்தத் தோட்டத்தில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமா குடும்பத்துக்கு விருந்து கொடுத்தார். இதுதவிர விருந்துகள் நடத்த தனியாக ஒரு ஹாலும் உண்டு.
* பிரதமர் இல்லத்துக்கு மின்சாரம் தருவதற்கு தனியாக ஒரு துணை மின் நிலையம் உள்ளது. இங்கு எப்போதும் மின்சாரம் தடைபடுவதில்லை.
* பிரதமர் இல்லத்துக்கு தனியாக வேலையாட்கள், பியூன்கள், தோட்டக்காரர்கள், எலெக்ட்ரீஷியன் என ஏராளமான பணியாளர்கள் உண்டு. டெய்லர், ஹேர் டிரஸ்ஸர் போன்ற பிரத்யேகக் கலைஞர்களும் இருப்பார்கள்.
* இத்தனை வசதிகள் இருந்தாலும் பிரதமரின் வீட்டுக்குள் பணியாளர்கள் யாரும் இந்தப் படையினரின் அனுமதி இல்லாமல் போக முடியாது. பிரதமரின் உறவினர்களோ, நண்பர்களோ கூட நினைத்த நேரத்துக்கு வந்துவிட முடியாது. யார் வருவதாக இருந்தாலும், பிரதமரின் அந்தரங்க செயலாளர் அந்த விவரத்தை பாதுகாப்புப் படைக்குத் தெரிவிக்க வேண்டும். அடையாள அட்டையை பரிசோதித்துவிட்டு, திருப்தி ஏற்பட்டால் மட்டுமே உள்ளே அனுப்புவார்கள்.
* வளாகத்துக்குள் இருக்கும் தனது வீட்டிலிருந்து பிரதமர் தனது அலுவலகத்துக்கு வர, குண்டு துளைக்காத கண்ணாடிக் குழாய் பாதை போடப்பட்டிருக்கிறது. மொத்த வளாகத்தையும் 500 வீரர்கள் கொண்ட டீம் எப்போதும் கண்காணிக்கும். காம்பவுண்ட் சுவர் உறுதியான கான்க்ரீட்டால் புதுப்பிக்கப்பட்டது. கார் குண்டு கொண்டு மோதினாலும் எதுவும் ஆகாது.
* இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், இந்த ரேஸ் கோர்ஸ் சாலையில் பொதுமக்கள் யாரும் பயணிப்பதற்கு அனுமதி இல்லை. பிரதமர் இல்லத்துக்கு வரும் கார்கள், நபர்களுக்கு மட்டுமே அனுமதி!
* பிரதமர் பயன்படுத்த என ஒரே மாதிரி இருக்கும் ஆறு பி.எம்.டபிள்யூ. கார்கள் உள்ளன. வாஜ்பாய் காலத்தில் இவை வாங்கப்பட்டன.
* மன்மோகன் சிங் வீட்டை காலி செய்தபோது, தனக்கு 10 ஆண்டுகளாக வந்திருந்த பரிசுகளை வகை பிரித்து வைத்துவிட்டார். சில புத்தகங்களை மட்டும் தனக்காக என எடுத்துக் கொண்ட அவர், மற்றவற்றை அழகாக வரிசைப்படுத்தி மோடிக்காக ஒரு நூலகம் உருவாக்கி வைத்திருக்கிறார்.
* மன்மோகனுக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் ஒரு கிரிக்கெட் பேட் பரிசாகக் கொடுத்திருந்தார். மன்மோகன் கிரிக்கெட் ரசிகர் இல்லை. ஆனால் மோடி குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கிறார். எனவே அவருக்காக என அந்த பேட்டை வைத்துவிட்டார்.
* ஒரு சிறு புன்னகையோடு மோடிக்காக மன்மோகன் விட்டுச் சென்றிருக்கும் இன்னொரு பரிசு, டீ செட்! மன்மோகனின் மனைவிக்கு ஒபாமாவின் மனைவி மிச்செல்லி அழகிய போர்சலின் டீ செட் ஒன்றைப் பரிசளித்தார். அதை அவர் மிகவும் ரசிக்க, அடுத்தடுத்து பலரிடமிருந்து ஆறு செட்கள் வந்து சேர்ந்தன. ஒரு டீக்கடைக்காரரின் மகனுக்காக இந்த அத்தனை செட்களையும் அப்படியே வைத்துவிட்டார் மன்மோகன்!
பிரதமரின் உறவினர்களோ, நண்பர்களோ கூட நினைத்த நேரத்துக்கு வந்துவிட முடியாது.
- அகஸ்டஸ்