ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வரலாறு உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதோடு ‘மழலை வரம் தரும் வேர் குழவி வேட்கை’ பற்றி இதய நோய் நிபுணர் சிவகடாட்சம் சொன்ன அனுபவச் சாரலும் சிலிர்க்க வைத்தது.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.
குழந்தைகளின் எதிர்கால உருவத்தைக் காட்டும் கூகுளின் அடுத்த பாய்ச்சலை நினைத்தால் ஆவலாகவும் இருக்கு; பயமாகவும் இருக்கு. 80 வயதில் நம் குழந்தை எப்படி இருக்கும் என்று பார்ப்பது வரை ஓகே! ஆனல், எதிர்காலத் தோற்றத்தைப் பார்த்து விபரீத முடிவுகள் எடுக்க வைத்துவிடக் கூடாது இந்தத் தொழில்நுட்பம்.
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
படத்தில் பார்க்கும்போதே மனதைக் கொள்ளை கொள்கிறது மலம்புழா அணை. கேரளம் நிச்சயமாகவே, ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமிதான்.
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.
கத்தாரில் ரத்தம் சிந்தி மடிகின்ற தமிழர்களைப் பற்றிய கண்ணீர் சம்பவங்கள் நெஞ்சை அதிர வைத்தன. உழைப்பாளிகளை மதிக்காத தேசம் உயர்ந்ததாக வரலாறில்லை!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
அஞ்சலி காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை... சீக்கிரமே சென்னைக்கு வரலாம். ரெண்டு படம் என்ன? இருபது படம் கூட புக் ஆகலாம். எங்களுக்கு வேண்டியது அம்மணியோட ஹோம்லி முக தரிசனம் மட்டும்தான்!
- இரா.குணசேகரன், திருப்பூர்.
வாலுத்தனம் பண்ணாமல் ‘வாலு’ படத்தை முடித்துக் கொடுத்த சிம்பு, ஹன்சிகா இருவரையும் மனதாரப் பாராட்ட வேண்டும்.
- எஸ்.மேகநாதன், புதுச்சேரி.
ஆல்தோட்ட பூபதி பிரதமர் மோடிக்கு நம் தமிழ்ப் பட இயக்குநர்களை சிபாரிசு செய்த அமைச்சரவை ஆலோசனை அபாரம் என்றால், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது அரவிந்த் கெஜ்ரிவாலையே குட்டிச்சுவராக்கி அதிலேயே போஸ்டர் ஒட்டிய சாமர்த்தியம்!
- பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.
மோடி 8 மாதங்களில் 3 லட்சம் கி.மீ பயணித்து 5,800 கூட்டங்களில் மாற்றத்துக்கு ஏங்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டியதைப் போல் யார் செய்தார்கள்? பாரதப் பிரதமர் மோடியின் மேஜிக்கை எங்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்திய நீங்களும் ஒரு பெரிய மேஜிக் நிபுணர்தான்!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.
‘கோச்சடையான் 2’ பற்றி அட்வான்ஸாக சொல்லி, இப்போதே ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டார்களே... ரஜினியைப் போலவே
மனதில் பட்டதை வெளிப்படையாக பளிச்சென்று பேசுகிறார் சௌந்தர்யா... சபாஷ்!
- கண்ணதாசன், திருவண்ணாமலை.
வீரவநல்லூர் காட்டன் சேலைகளை புத்துயிர் பெறச் செய்வது உன்னதமான முயற்சி.
- என்.ஜெய், காரமடை.