குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

புதுசு புதுசா முளைத்த திரைப்பட அறிவுஜீவிகளுக்கும், திரைப்பட தியாகிகளுக்கும், நாலு ஹாலிவுட் படத்தை பார்த்துட்டு திரை விஞ்ஞானியாய் மாறிய அந்நியன்களுக்கும் இது சமர்ப்பணம்...

ஞாயிற்றுக்கிழமை எப்ப ஸ்பைடர்மேன் போடுவான், எப்ப ஹீமேன் போடுவான்னு காத்திருந்து பார்த்த தலைமுறை நாம. வாரம் எப்படா முடியும், வெள்ளிக்கிழமை எப்படா வரும்னு காத்திருந்து ‘ஒளியும் ஒலியும்’ பார்த்த கடைசி தலைமுறை நாமதான்.

அட, ஒரே ஒரு தமிழ்ப் பாட்டு போடுவாங்கன்னு மொழி புரியாத மத்த பாடல்களையும் பார்த்து நேரம் ஓட்டுனதும் நாமதான். இந்த ஜெனரேஷன்ல வந்த நாம, உண்மையில் ‘கோச்சடையான்’ போல மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் படம் எடுக்குமளவு வளர்ந்ததெல்லாம் ‘கக்கக்கபோ’தான். கொஞ்சம் கிராஃபிக்ஸில் கவனம் செலுத்தியிருக்கலாம். தீபிகா படுகோனே அநியாயத்துக்கு தீபிகா ‘படுகோணை’யா இருக்கார். சரத்குமாரா, சரத்பாபுவான்னு கன்ஃபியூஷனே ஆகுது. ஆனாலும் ‘கோச்சடையான்’ல பாராட்ட எல்லாமும் இருக்கிறது.

அப்புறம் ஒரு முக்கியமான பின்குறிப்பு: ரஜினி முன்னால பல நடிகர்கள் பொம்மைதான்... பொம்மையா வந்தாலும் ரஜினி ரஜினிதான்! இந்த வார குட்டிச்செவுரு போஸ்டர் பாய்... கோவையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் வகையில் சிறுவாணி அணையின் குடிநீர் குழாய் வால்வை மூடிய கேரள அரசு! நாட்டுல பல பேரு வெற்றிக்கும், சாதனைக்கும் வித்தியாசம் தெரியாமயே வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. அவங்கள சொல்லி குத்தமில்ல, இந்த நாட்டுல தினம் வாழ்வதே சாதனைதானே!

* கிரிக்கெட்ல ஒரு தொடர ஜெயிச்சா வெற்றி, தொடர்ந்து பல தொடர்கள ஜெயிச்சா அது சாதனை.
* அரையாண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் வாங்குனா வெற்றி, அதுவே பப்ளிக் எக்ஸாம்ல வாங்கினா சாதனை.
* தமிழ்நாட்டுல படம் நூறு நாள் ஓடுனா வெற்றி, அதே படம் வெளிநாட்டுல 100 நாள் ஓடுனா சாதனை.
* நிறைவா பணம் சம்பாதிக்கிறது வெற்றி, அதை நியாயமான வழில சம்பாதிக்கிறதுதான் சாதனை.
* நிம்மதியாக தூங்கப் போறது வெற்றி, ஆனா நிம்மதியாக எந்த கவலையும் இன்றி எந்திரிப்பதே சாதனை.
அட, இவ்வளவு எதுக்கு... ரொம்ப சிம்பிளா சொல்றேன், கல்யாணம் பண்ணுவது வெற்றி; அதை கடைசி வரை கண்டினியூ பண்ணுவதே சாதனை.

நம்பிக்கைதான் வாழ்க்கை, வாழ்க்கைதான் நம்பிக்கை. இப்படியெல்லாம் மொக்கை போட விரும்பல. நேரடியா விஷயத்துக்கு வர்றோம்... இன்றைய காலகட்டத்தில் சகிப்புத்தன்மையின் மறு உருவம்தான் நம்பிக்கை. நம்பிக்கையை முதல் வழியா வச்சிருந்தது எல்லாம் அந்தக்காலம்; வேறு வழியே இல்லாமல் நம்பிக்கை வைப்பதுதான் இந்தக் காலம்.

பாருங்க, இப்ப மிலிட்டரி ஹோட்டல்ல போய் சைவ குருமா சாப்பிடறது, விமல் ஒரு படத்திலாவது வித்தியாசமா நடிப்பாருன்னு டிக்கெட் வாங்குறது, பொண்டாட்டி அரை மணி நேரத்துல புடவை எடுத்திடுவா... அதுவும் ஐயாயிரம் ரூபாய்க்குள்ள எடுத்திடுவான்னு ஜவுளிக்கடைக்குப் போறது, பெரிய ஸ்கூலுல்ல சேர்த்தா புள்ளைங்க இங்கிலீஷ் பேசும்னு நினைக்கறது, தினம் கோயிலுக்குப் போய் சாமிய வேண்டினா பணக்காரனாகலாம்னு நினைக்கிறது, நெத்தில திருநீறு-குங்குமம் வச்சா நல்லவனாகிடலாம்னு ஆசைப்படறது... எல்லாமே அந்த வகை நம்பிக்கைதான்!

‘காதல் ஒரு @#$%#*- மாதிரி’ன்னு காதலை, கண்ட கண்ட கருமத்தோட கம்பேர் பண்ற வியாதி எவன்கிட்ட இருந்து பரவுச்சுன்னு தெரியல. மவனே, அவன் மட்டும் கைல கிடைச்சான்... ‘காதல்’ தண்டபாணி குளோசப் போட்டோவ கால் மணி நேரம் உத்துப் பார்க்க வச்சிடுவேன். நம்ம விவேக் சார் கூட அதுல பாதிக்கப்பட்டு, ‘‘காதல் ஒரு கழட்டிப் போட்ட செருப்பு. சைஸ் சரியா இருந்தா யாரு வேணா எடுத்து போட்டுக்கலாம்’னு டயலாக் பேசுற அளவுக்கு சமூகம் முழுக்க குமார் மாதிரி தீயா வேலை செஞ்சிடிச்சு அந்த காதல் கம்பேரிசன்.

இப்ப அவனவன் ‘காதல் ஒரு பூ மாதிரி...’, ‘காதல் ஒரு ஷகீலா மாதிரி...’, ‘காதல் ஒரு ஷார்ட் டக்கீலா மாதிரி...’, ‘காதல் ஒரு ஜட்டி மாதிரி...’, ‘காதல் குதிரை லத்தி மாதிரி...’ன்னு காதலை எல்லாத்தோடயும் கம்பேர் பண்ணிக்கிட்டு கிடக்கிறானுங்க. நேத்து ஒரு அரை லூசு என் காதோரமா வந்து, ‘‘காதல் ஒரு போங்கிரஸ் கட்சி மாதிரி... புதைவது லட்சியம், சிதைவது நிச்சயம்’’னு சொல்லிட்டுப் போகுது! அடேய்ய்ய்ய், இன்னொரு தடவ காதல எதோடையாவது கம்பேர் பண்ணி கருத்து சொல்லுங்க! ராஸ் டெய்லர் வாயனுங்களா, உங்க சிந்திக்கிற மூளைக்கு கருத்தடை பண்ணி விட்டுடுறேன்,

ராஸ்கல்ஸ்!

ஒரு குட்டிக் கதை

சென்ற வாரத்தில் ஒருநாள் பைக்குல போய்க்கிட்டு இருந்தேன். ஆள் அரவம் அதிகமில்லாத சாலையில் வரும்போது, ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி வழிமறித்தார். கையில் ஊன்றுகோல். தன்னால் அதிக தூரம் நடக்க முடியாதென்றும், கோயிலுக்குப் போகும் ஒரு குழு தனக்காகக் காத்திருப்பதாகவும், இவர் வந்தவுடன் எல்லோரும் பஸ்ஸுல பழநி போகப்போவதாகவும் கூறினார். தன்னை அந்தக் குழுவினர் இருக்கும் இடத்தில் இறக்கி விட்டுவிட முடியுமா எனவும் கேட்டார்.

சரின்னு பைக்குல ஏத்திக்கிட்டு, அவர் சொன்ன இடம் நோக்கிக் கிளம்பினேன். தான் ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்ததாகவும், உடல்நலம் சரியில்லாமல் போனதிலிருந்து தன் குடும்பமும் வேலை செய்த வீடும் கைவிட்டு விட்டதாகவும் சொன்னபடி வந்தார். தற்போது தனக்கு யாரும் இல்லையென்றும், நண்பர்கள், உதவிகள், கோயில் பயணங்கள் என்று வாழ்வதாகவும் கூறினார். இறங்கும் இடம் வந்ததும், ‘‘ஏதாவது காசு இருந்தா கொடுங்க சார், காலையில இருந்து டீ கூட குடிக்கல’’ என்று கோரிக்கையை வைத்தார். பார்க்கவும் கேட்கவும் பரிதாபமாக இருந்ததால், ஒரு அம்பது ரூபா நோட்டை எடுத்துக் கொடுத்தேன். ‘‘நீங்க நல்லா இருக்கணும் தம்பி’’ என வாழ்த்து கிடைச்சுது. பாரதிராஜா பட ஹீரோ மாதிரி மனசுக்குள்ளேயே சிரிச்சுட்டு வண்டியைக் கிளப்பினேன்.
இருங்க, கதை இங்க முடியல...

அந்தம்மாவ விட்டுட்டு திரும்பி வீட்டுக்கு வரும்போது, யாரோ ஒரு பெண்மணி கூப்பிடுவது போல இருந்துச்சா... வண்டிய நிறுத்தினேன், மீண்டும் ஒரு அம்மா, ஒரு அரை மணி நேரம் முன்பு நான் கேட்ட அதே டயலாக்க சொல்லுச்சு. ‘‘தம்பி! உடம்பு முடியாதவப்ப நான். எனக்காக ஒரு குழுவே கோயிலுக்குப் போறதுக்காக காத்திருக்கு, என்னை அங்க விட்டுடறீங்களா?’’
அட, எல்லாம் ஒரு குரூப்பாத்தான் அலையுறாங்கன்ற உண்மை, நடு மண்டையில நச்சுன்னு இறங்குச்சு. 

நீதி-1: கும்பல்ல இருக்கிறவன ஏமாத்தியது போய், இப்ப கும்பலா வந்தே ஏமாத்துறாங்க.
நீதி-2: உதவி செஞ்சு ஒருத்தர திருப்தியடைய வைக்க முடியாது, நம்ம திருப்திக்காக வேணா உதவி செய்ய லாம்.