ஓட்டை புல்லட் விஷ்ணு... கண்ணால் பேசும் நந்திதா!



விஷ்ணுவுக்கு போன் அடிக்கும்போதெல்லாம் ஃபுல் ரிங் போய் கட்டாகிறது. 'ஸாரி, கூப்பிடுறேன்’ என மெசேஜ் தட்டிவிட்டு லஞ்ச் பிரேக்கில் லைனில் வந்தார். ‘‘சார், பில்டப் எல்லாம் பண்ணலை. விடியற்காலையிலிருந்து பிரேக்கே இல்லாம ‘இடம் பொருள் ஏவல்’ ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு’’ என குரலில் களைப்பு காட்டினார்...செம பிஸியா இருக்கீங்க போல?

‘‘இதுவும் உண்மைதான். ‘குள்ளநரி கூட்டம்’ படத்துக்குப் பிறகு ஒரு வருஷம் சும்மாவே இருந்தேன். 11 கதைகள் கேட்டேன். எதுவும் மனசுக்குப் பிடிச்ச மாதிரி அமையல. ‘இவனுக்கு இனிமே படமே கிடைக்காது’ன்னு என் காதுபடவே பேசினாங்க. நான் ரீயாக்ட் பண்ணிக்கவே இல்லை. நடிச்சா நல்ல படத்தில்தான் நடிக்கணும்னு பொறுமையா காத்திருந்தவன் கையில இப்போ நல்ல நல்ல படங்கள் இருக்கு. ‘நீர்ப்பறவை’தான் அந்தக் கணக்கைத் தொடங்கி வச்சது. ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘கலக்குற மாப்ள’ன்னு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர். ‘முண்டாசுப்பட்டி’ ரிலீசுக்கு ரெடியா இருக்கு. உற்சாகமா உணர்றேன்!’’

‘முண்டாசுப்பட்டியில் நீங்க யாரு?

‘‘போட்டோ புடிச்சா செத்து போயிடுவோம்ங்கிற மூட நம்பிக்கை பரவிக் கிடக்கிற முண்டாசுப்பட்டி என்கிற கற்பனைக் கிராமம்தான் கதைக்களம். முப்பது வருஷத்துக்கு முன்பு நடக்குற மாதிரியான கதையில் நான் போட்டோகிராபரா வர்றேன். டைட்டிலில் ஆரம்பிச்சு எண்ட் கார்டு போடும்வரைக்கும் காமெடிதான். முதல்முறையா காமெடியில் டிரை பண்ணியிருக்கேன். பாடி லாங்குவேஜும் புதுசா இருக்கும். ஓட்டை புல்லட், ஓல்டு மாடல் கேமரா, உலகத்திலேயே நான்தான் பெஸ்ட் போட்டோகிராபர்னு பந்தா காட்டுறதுக்காக கூலிங் கிளாஸ் என்று படத்தில வர்ற பிராப்பர்டிகள்கூட காமெடி கேரக்டர்கள் போல திரைக்கதையில் களைகட்டும்.

நான், நந்திதா, ஆனந்தராஜ் தவிர பார்க்காத பல முகங்கள் படத்தில் இருக்கு. ஆனா ஒரு சீனில் தலை காட்டும் கதாபாத்திரமாக இருந்தாலும், படம் பார்க்கிறவங்க மனசில பசுமரத்தாணியா பதிஞ்சிடுவாங்க. அப்படி அழுத்தமான காட்சியமைப்புகளைக் கொடுத்து அசத்தியிருக்கார் அறிமுக இயக்குனர் ராம். குறிப்பா என்னோட அசிஸ்டென்ட்டா வர்ற காளி வெங்கட், முனிஷ்காந்த் கேரக்டரில் நடித்திருக்கும் ராம்தாஸ் போன்றவங்க பிரமாதப்படுத்தியிருக்காங்க...’’

நந்திதா பற்றி சொல்லவே இல்லையே?

‘‘நான் என்ன வஞ்சகமா பண்றேன்? நீங்க கேட்டா சொல்லிடப் போறேன். திறமையான நடிகை. படத்தில் கிராமத்துப் பொண்ணா வர்றாங்க. ரொம்ப பேசாம, கண்ணாலேயே லவ் பண்ற கேரக்டர். பேன்ட் - சட்டை போட்ட டவுன் பையன் என்பதால் என் மேல அவங்களுக்கு ஒரு அட்ராக்ஷன். அது லவ்வா மாறும்போது ஏற்படும் பிரச்னைகள் கதையின் முக்கியமான முடிச்சு. ஒரு மான்டேஜ் சீனில் என்னை மாதிரி அவங்க நடிக்கணும். அடிச்சு தூள் பண்ணி அசர வச்சாங்க. 2 மாசம் ஒரே ஷெட்யூலில் மொத்த ஷூட்டிங்கும் ஓவர். ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் எடுக்கும் படங்கள் எல்லாமே ரசிகர்களின் கவனம் ஈர்க்கும். அந்த லிஸ்ட்டில் ‘முண்டாசுப்பட்டி’யும் இருக்கும்!’’

ஹீரோக்கள் பட்டியலில் பெரிய இடத்தைப் பிடிக்கற ஆசை உங்களுக்கும் இருக்கா?

‘‘அப்படியெல்லாம் எந்த ஆசையையும் மனசில போட்டுக்கொண்டு வேலை செய்யல. வாழ்க்கை என்பது லட்சியத்தை நோக்கிப் போவது மட்டுமே இல்லை. குடும்பம், உறவு, நட்புக்காக வாழ்வது, அவங்களுக்காக நேரத்தை ஒதுக்குவது எல்லாமும் கலந்ததுதான் வாழ்க்கை. ‘அந்த நடிகர் இத்தனை படம் பண்றாரே’, ‘இவர் சூப்பர்ஹிட் கொடுத்துட்டாரே’ன்னு யோசிப்பதோ, யாரையும் போட்டியாக எடுத்துக்கொண்டு கவலைப்படுவதோ இல்லை.

நமக்கான வேலையை சின்சியரா பார்க்கணும், நிம்மதியா தூங்கணும்... அவ்வளவுதான்! நடிக்க வந்த புதிதில் சினிமா பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. முதல் படத்தில் நடிக்கும்போது ஒரு வாரத்துக்கு முன்னாடியே டயலாக் பேப்பரை வாங்கி மனப்பாடம் செய்வேன். இப்போ ஸ்பாட்ல கொடுத்தாலே பிக்கப் பண்ணிக்குவேன். நிறைய கத்துக்கிட்டேன். கடக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு. நான் சினிமாவில் இருக்கணும்ங்கிறதை காலம் தீர்மானித்திருக்கிறது. பார்ப்போம்!’’

உங்க மனைவி இயக்கத்தில் நடிப்பீங்களா?

‘‘முகம் தெரியாதவர்களிடமெல்லாம் கதை கேட்கும் நான், என் மனைவியிடம் கேட்காமலா இருப்பேன். சினிமாவில் அவங்களுக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு. ‘நீர்ப்பறவை’, ‘வடசென்னை’ படங்களின் உதவி இயக்குனரா வேலை செஞ்சிருக்கார். இன்னும் நிறைய அனுபவங்களை சேகரித்து வருகிறார். விரைவில் அவரோட இயக்கத்தில் நான் நிச்சயம் நடிப்பேன்!’’

- அமலன்