மன்க்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

எஸ்.ஆர்.செந்தில்குமார்

ஒரு சிங்கம் தன்னை தலைவனாக்கும்படியோ... தலைவனாய் ஏற்றுக் கொள்ளும்படியோ யாரிடமும் கோரிக்கை வைப்பதில்லை. அதன் கர்ஜனையும் கம்பீரமும் வலிமையும் வீரமும் இயல்பாகவே அதை வனத்தின் தலைவனாய் அறிவித்துவிடுகின்றன. அப்பாவு சிங்கம் போலவே இருந்தான்.

சிறுவனாக இருந்தாலும் அந்த கிராமத்துச் சிறுவர்களின் இளவரசன் அவனே. அத்தனை பேரும் அவனது அன்பில் கட்டுண்டு கிடந்தார்கள். சிறுவர்களுக்கு இடையே ஏற்படும் சின்னச் சின்ன சச்சரவுகளை அப்பாவு கையாளும் விதம் அலாதியானது. எந்தப் பிரச்னையின் முடிவிலும் நண்பர்கள் கூட்டத்தின் ஒற்றுமை கொஞ்சமும் குலைந்துவிடாமல், ‘அன்பு... மேலும் அன்பு’ என அவர்கள் பிணையும் விதமாகப் பார்த்துக் கொண்டான்.

வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் அப்பாவின் மார்பில் படுத்தபடி அவன் கேட்கும் நீதிக் கதைகளை இன்னும் சுவாரஸ்யமாக்கி மறுநாள் தோழர்களுக்குச் சொல்வான். ‘கம்பை விதைத்தால் கம்பு விளையும். அன்பை விதைத்தால் அன்பு விளையும். துன்பத்தை விதைத்தால் துன்பம்தான் விளையும். அதனால், யாருக்கும் கேடு செய்யாது இருக்க வேண்டும்’ என விதவிதமாய் கதைகளாய்க் கேட்டதை எல்லாம் செயலாக்கிப் பார்த்தான், அப்பாவு.

‘குந்துகால்’. பாம்பன் சிறுவர்களின் சொர்க்க பூமி. அந்தி வேளையில் ஓடிப் பிடித்து விளையாடுவதற்குத் தகுந்த இடம். குந்துகால் தென்னந்தோப்பில் இருக்கும் அத்தனை மரத்திடமும் இந்தச் சிறுவர்களுக்கு தோழமை உண்டு. மரப் பொந்துகளில் இருந்து பயத்துடன் எட்டிப் பார்க்கும் அணில்கள் கூட இவர்களால் ஆபத்தில்லை என்றறிந்து கீச்சிட்டு சினேகமாகி விட்டன. அப்பாவு கொடுக்கும் பருப்பு வகைகளை தைரியமாக வந்து அவை வாங்கிச் சாப்பிடும். வாலால் உரசி நன்றி சொல்லும். ஜீவகாருண்யம் அவனுக்குள் இயல்பாய் இருந்தது.
ஒருநாள் மாலைப்பொழுது...

அப்பாவு நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியே ஒரு யாத்ரிகர் வந்தார். பாம்பன் வழியாக யாத்ரிகர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்வதும், அங்கிருந்து பக்தர்கள் தென்னகக் கோயில்களை தரிசனம் செய்ய இந்தப் பாதையைக் கடப்பதும் வழக்கம்தான். சிறுவர்கள் வழக்கம் போல இவரையும் பார்த்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
‘‘தம்பி, தாகமா இருக்கு. இங்க தண்ணீர் கிடைக்குமா?’’ என்று அவரே கேட்டார்.

‘‘அதோ... அங்க கிணறு இருக்கு’’ - விளையாட்டை நிறுத்தாமல் கை காட்டியது கூட்டம். அப்பாவு அவரைப் பார்த்தான். களைத்திருந்தது தேகம். தோற்றத்தில் மூப்பு. அவரை மரியாதையாக வணங்கினான். ‘‘என் கூட வாங்க!’’ என கிணறு இருக்கும் இடம் நோக்கி முன்னே நடந்தான். கிணற்றின் கரையில் இருந்த வாளியை உள்ளே இறக்கி மெதுவாக இழுத்தான். குளிர்ந்த நீரால் அந்த யாத்ரிகர் முகம் கழுவிக் கொண்டார். இரண்டு கையாலும் தண்ணீரை அள்ளிப் பருகினார். தாகம் தணிந்த அவரது மனமும் வயிறும் குளிர்ந்து போயிருந்தது. அதற்குள் சிறுவர்கள் கூட்டமும் சூழ்ந்து கொண்டது.

‘‘சரி... நீங்க எங்க இருந்து வர்றீங்க?’’ - கூட்டத்தில்  ஒருவன் கேட்டான்.
‘‘நான் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னாட்டுத் தலங்களை தரிசிக்க வந்தேன். இப்ப சொந்த ஊருக்குப் போறேன். பாம்பனுக்கு இப்படித்தானே போகணும்?’’
‘‘ஆமாம்... ஆமாம்...’’ எனக் கை காட்டியவர்களைக் கனிவாகப் பார்த்தார் யாத்ரிகர்.

‘‘சரி, நீங்க என்ன செய்யறீங்க?’’
‘‘நான் ஜோதிடனப்பா!’’
சிறுவர்கள் உற்சாகமாகி, ஆளாளுக்கு கைகளைக் காட்டினார்கள்.
‘‘நீ பெரிய பண்டிதனா வருவே’’

‘‘நீ அப்பா வியாபாரத்தை விருத்தி செய்வே!’’
‘‘நீ கோபக்காரனப்பா... அதிகம் உப்பு சேர்க்காதே!’’
‘‘உனக்கு விலங்குகளால் ஆபத்து இருக்கு. ஜாக்கிரதை!’’

- இப்படி ஆளுக்கொரு பலனாய் ரேகைகளைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் யாத்ரிகர். அப்பாவு அமைதியாய் அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். ‘‘தம்பி, நீ ஏன் அமைதியாய் இருக்க? உன் கையைக் காட்டுப் பார்க்கலாம்’’ என்றார் அவர். கூச்சத்துடன்... அதே சமயம், மரியாதையாக தன் வலது கையை நீட்டினான் அப்பாவு.

அவன் உள்ளங்கையை உற்றுப் பார்த்தவர், பார்வையை இன்னும் கூர்மையாக்கினார். ரேகைகள் மீது தன் ஒற்றை விரலால் பயணித்தார். கண்மூடி சிவநாமம் சொன்னார். ‘‘தம்பி உன் வாயைத் திற. நாக்கை நீட்டு!’’ என்றார். நீட்டினான் அப்பாவு.  ஜோதிடரின் முகம் பிரகாசமானது. கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டவர், ‘‘தம்பி! நீ தெய்வக் குழந்தையப்பா... தெய்வக் குழந்தை. நாக்கில் சரஸ்வதி இருக்கா. கந்தவேள் அருள் பூரணமா உனக்கு இருக்கு. ரேகைகள் உன்னை ஞானின்னு சொல்லுது. நீ பாட்டு எழுதுவ. காளி அருள் பெற்ற காளிதாசன் போல, முருகன் அருள் பெற்ற அருணகிரி போல, நீயும் மகாகவி ஆவாய். உன் வார்த்தை வேதமாகப் போகுது’’ சிலிர்த்துச் சொன்னார்.

அப்பாவு அமைதியாய் கேட்டுக்கொண்டான். ஆனால், சிறுவர்கள் கூட்டம் அமைதியாக இருக்கவில்லை. ‘‘அப்பாவு கவிஞன்... அப்பாவு தெய்வக் குழந்தை... யாழ்ப்பாண ஜோதிடர் சொன்னார்...’’ என ஊரெல்லாம் கேட்க கூவிக் கூவிச் சொன்னார்கள் பிள்ளைகள். விவரம் கேட்டு சாத்தப்ப பிள்ளையும் செங்கமலத்தம்மாளும் ஆச்சரியமானார்கள். அமைதியாய் பிள்ளையின் தலையைத் தொட்டார்கள். கன்னத்தை வருடினார்கள். ‘எது நடந்தாலும் நல்லதுக்கே. சிவனருள்’ என்று அமைதியானார்கள். ஊரில் இந்தப் பேச்சு அடங்க வெகுநாள் ஆனது.

 பார்ப்பவர்கள் எல்லாம் சாத்தப்பப் பிள்ளையிடம் ஜோதிடன் சொன்னது பற்றி விசாரித்தார்கள். ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கி விட்டு அமைதியாய் நகர்ந்தார். ‘ஆமாம். அவன் தெய்வக்குழந்தைதான்’ என்றாலும் அது தம்பட்டம் அடிப்பதாய்ப் படும். ‘இல்லை’ என்று உறுதியாகச் சொல்லவும் நமக்கு அதிகாரம் இல்லை. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும். ஆக, மௌனம்தான் நல்ல பதில் என அமைதியானார்.

அதன்பிறகு மக்கள் அப்பாவுவைப் பார்க்கும் விதமே மாறிப் போனது. அப்பாவு உள்ளுக்குள் இன்னும் ஆழமாய் யோசிக்க ஆரம்பித்தான். கடவுள் பற்றிய சிந்தனை அதிகமானது. அதிலும் அருணகிரிநாதர் மேல் ஆவலானான். ஒருநாள் இரவு... செங்கமலத்தம்மாள் கணவனுக்கு அன்னமிட்டு விட்டு, அப்பாவுவிற்கு சாதம் பிசைந்து உருட்டி கையில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்பாவு அப்பாவிடம் கேட்டான்... ‘‘அப்பா... அருணகிரிநாதர் யார்?’’

நல்ல விதைகள் எப்போதும் தூங்காது. கொஞ்சம் மண், துளி தண்ணீர், உடனே முட்டி முளைக்கத் தயாராகிவிடும். சாத்தப்ப பிள்ளை மிடறு தண்ணீர் விழுங்கிவிட்டு கேள்வி கேட்ட மகனை ஆவலாய்ப் பார்த்தார். ‘‘அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டுல திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். சின்ன வயசுல நல்லா தமிழ் படிச்சார். வடமொழி கத்துக்கிட்டார். காலக் கொடுமை, சேர்க்கை சரி இல்லாம இளம் வயசுல தடம் மாறிட்டாரு. அதனால எல்லோரும் அவரை வெறுக்க ஆரம்பிச்சாங்க. சொந்த அக்காவும் ஒருநாள் கடுமையா பேச, அவருக்கு மனசு வெறுத்துப் போச்சு. எல்லோரும் நம்மை வெறுக்கும்போது வாழ்ந்து என்ன புண்ணியம்னு நினைச்சார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரத்து மேல ஏறி அங்கிருந்து கீழே குதிச்சார்.

அப்போ முருகப் பெருமான் அவர் முன்னால வந்து, ‘அருணகிரி, நில்! நீ அனுபவிச்சது எல்லாம் போன ஜென்மத்து கர்மவினை. கவலைப்படாதே’ன்னு சொல்லி காப்பாத்திட்டாரு. ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை அவர் நாக்குல தன் வேலால எழுதின முருகன், ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ன்னு வரியை எடுத்துக்கொடுத்து பாடச் சொன்னாரு. அதுதான் திருப்புகழ்’’ என்றார் அவர்.
விழி விரிய கதை கேட்கும் பிள்ளையை நினைத்துப் பெருமையாக இருந்தது. பயமில்லாமல் கேள்வி கேட்க பிள்ளைகளை பழக்கப் படுத்துவதும், கேட்ட கேள்விக்கு பொறுமையாய் பதில் சொல்வதும் புத்திசாலியான தலைமுறையை உருவாக்கும். கனிவான தகப்பனாய் இருந்தார், சாத்தப்ப பிள்ளை.

அருணகிரிநாதர் மீது இருந்த அப்பாவுவின் ஆர்வம் தமிழார்வமாய் மாறியது. தேவசகாயம் என்னும் ஆசிரியர் அப்பாவுவுக்கு பரிசுகள் கொடுத்து உற்சாகமூட்டினார். ஆசிரியர் முனியாண்டியாப் பிள்ளை தமிழ் இலக்கணங்களைச் சொல்லித் தர ஆரம்பித்தார். திருப்புகழை திகட்டத் திகட்டப் படித்தான் அப்பாவு. தமிழ், நாவில் ஒலித்து மனதில் போய் அமர்ந்தது. மந்திரமயமான வார்த்தைகள் மனதில் பதியப் பதிய உள்ளத்தில் தெய்வீகம் மிளிரத் தொடங்கியது.

ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து மசூதி வழியே வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அப்பாவு ஆகாயத்தைப் பார்த்தான். அங்கே வான வீதியில் தங்கமாய் ஜொலிக்கும் அரச இலைகள் போன்ற ஏதோ ஒன்று, வரிசையாக மிதந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. என்ன அது?

மனக்கவலை மாயமானது!

‘‘தாய்க்கு நிகரான இன்னொரு உறவு நமக்கு கிடைக்கும்னா அது குருதான். எனக்கு பாம்பன் சுவாமி கிடைச்சார். 23 வருஷமா பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியை நாள் தவறாம தரிசனம் செய்யறேன். இதனால என்ன கிடைச்சுதுன்னு பட்டியல் போட முடியாது. கெடைச்சது எல்லாமே அவராலதான்’’ - பெருமை பொங்கச் சொல்கிறார் வி.என்.சௌந்தரராஜன். பாம்பன் சுவாமிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இதற்காக அப்பாவு ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார்.

‘‘1993 ஜனவரில எங்க மகளுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சோம். நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு. கல்யாணத்துக்கு 5 லட்ச ரூபாய்  பட்ஜெட். கல்யாணத்துக்கு பத்து நாள் இருக்கும்போது, நிச்சயமா கிடைச்சிடும்னு எதிர்பார்த்த பணம் வரல. கேட்ட இடத்துலயும் கிடைக்கல. என்ன செய்யறதுன்னே புரியாத மனநிலையில பாம்பன் சுவாமி ஜீவசமாதிக்குப் போய் உட்கார்ந்திருந்தேன். அப்ப எனக்கு தெரிஞ்ச பேங்க் ஆபீசர் வந்தார்.

‘சார் உங்ககிட்ட அந்த கம்பெனி ஷேர் இருக்குன்னு சொன்னீங்களே. அத எனக்கு தர முடியுமா?’ன்னு கேட்டார். 1980வாக்கில 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஷேர் அது. விளையாட்டா செஞ்ச முதலீடு. அதை மறந்தே போயிருந்தேன். ‘தாராளமா தரேன்’னு வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் அந்த ஷேர் பேப்பரைக் கொடுத்தேன். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார். என்னால நம்பவே முடியல. ‘இன்னைக்கு காலைலதான் அந்த ஷேர் மதிப்பு கணிசமா உயர்ந்திருக்கு’ன்னு சொன்னார்.

இது எனக்காகவே நடந்த அதிசயம். என் குருவருள். கலங்கி நின்ன என்னைக் கவலைப்படாதேன்னு காப்பாத்திட்டார் பாம்பன் சுவாமி. அதன் பிறகு கல்யாணம் ஜோரா நடந்தது. ஒரு கவலையை சந்தோஷமா மாத்தற இடம்தான் தெய்வீக பூமி. அப்படியான இடம்தான் பாம்பன் சுவாமிகளோட ஜீவசமாதி.” காளி அருள் பெற்ற காளிதாசன் போல, முருகன் அருள் பெற்ற அருணகிரி போல, நீயும் மகாகவி ஆவாய். உன்வார்த்தை வேதமாகப் போகிறது!

படம்: ஏ.டி.தமிழ்வாணன்

(ஒளி பரவும்)