கோச்சடையான்



ராணா என்ற மாவீரனின் தீரமும் காதலும் செறிந்த ராஜா-ராணி கதைதான் இந்த ‘கோச்சடையான்’. கலிங்கபுரியும், கோட்டைப்பட்டினமும் பக்கத்து பக்கத்து பகை நாடுகள். ராணா என்கின்ற கோச்சடையான், சூழ்நிலைகளால் கலிங்கபுரிக்கு தப்பியோடி, எதிரி நாட்டு மன்னரின் அன்புக்குப் பாத்திரமாகி தளபதியாகிறான்.

 அங்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் கோட்டைப்பட்டினத்தின் வீரர்கள், ஒரு வேளை உணவையே பெற்று அவதிப்படும் காட்சியைப் பார்த்து கோபமடைகிறான். சூழ்ச்சியுடன் அந்த அடிமைகளைத் திரட்டி, திரும்ப சொந்த நாட்டுக்குள் தளபதியாக நுழைகிறான் ராணா. உண்மையில் ராணா யார்? இரண்டு மன்னர்களும் ஏன் பகைவனாகிறார்கள்? கோச்சடையானின் பூர்வீகக் கதையென்ன? இப்படி பின்னிச் சுழல்கிறது கதை.

துரோகமும், வீரமும் விளையாடிய சரித்திர காலத்துப் பயணம். சலனப் பதிவாக்கத் தொழில்நுட்ப வடிவத்தில் நடிப்பை மீள் உருவாக்கம் செய்து, இந்திய சினிமாவிற்கே முன்னோடியாய் படைத்திருப்பதற்கு இயக்குநர் சௌந்தர்யாவிற்கு பூங்கொத்து. முதல் முயற்சியின், நவீன டெக்னிக்கல் அம்சங்களில் கஷ்டத்தை உணர்ந்திருக்கிறார் சௌந்தர்யா. ரைட் ராயலாக குற்றம் சொல்லி துவள வைக்காமல் அவரை கொண்டாடியே தீர வேண்டும்.

முதல் பத்து நிமிஷத்திற்குள் நம்மைக் கதையின் உள்ளே கொண்டு செல்வதில் வெற்றியடைகிறார் இயக்குநர். உலகத் தரத்தில் பார்த்துப் பழகிய அனிமேஷன் கண்களுக்கு படத்தின் முதல் பத்து நிமிடங்கள் ஒப்புதல் கிடைக்காதது உண்மை. ஆனால் படத்திற்கு ஜனரஞ்சகமும், விறுவிறுப்பும் ஊட்டியதில் பெரும்பங்கு கே.எஸ்.ரவிக்குமாருக்கு! ‘எதிரிகளை ஒழிக்க ஒரே வழி மன்னிப்பு’, ‘மண்ணை ஆள்பவன் மன்னன் அல்ல; மக்களின் மனங்களை ஆளுபவனே மன்னன்’ என ரவிக்குமாரின் ரத்தின சுருக்கமான வசனங்களால் தியேட்டரில் விசில் பறக்கிறது.

ரஜினியின் ஸ்டைல், பேச்சு, நடை, உடை, பாவனைகளில் தெறிக்கிற வேகத்தையும், அழகையும், நேர்த்தியையும் எல்லா இடத்திலும் தூவியிருந்தால் படம் இன்னும் ஜெட் வேகத்தில் பறந்திருக்கும். இரட்டைக் குதிரை சவாரியில் மலைகள் தாண்டுவது, கண்ணுக்கு அலுக்காத ரஜினியின் சிவதாண்டவம், சிறையில் பயங்கர மிருகங்களுடன் மோதும் சண்டை என நடப்பில் சாத்தியப்படாத பிரமாண்டம். ரஜினி-தீபிகா ஜோடியைப் பார்க்கும்போது, நிஜத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என தோன்றுவது இயற்கை.

நாசரின் குரலும், பாவனைகளும் படு யதார்த்தமாகப் பொருந்துகின்றன. சரித்திரக் கதையின் வசன உச்சரிப்புக்கு ரஜினி இவ்வளவு பொருந்துவாரா என ஆச்சரியம் மேலிடுகிறது. ஷோபனா, ரஜினி போட்டி நடனம் களை கட்டுகிறது. நாகேஷை மீண்டும் மீள் உருவாக்கம் செய்த கற்பனைக்கு சபாஷ்! அவரின் வழக்கமான துள்ளலோடு பேச்சையும் கொண்டு வந்த விதத்தில் அச்சு அசல் அழகு! ‘பிரமாதம்’ என கிறக்கத்துடன் சொல்ல வைக்கிற பிரமையை பாடல்கள் ஏற்படுத்துகின்றன.

வைரமுத்துவின் வரிகளில் கூடுதல் புலமை. சுவையே என்றாலும் அடிக்கடி பாடல்கள் வருவது அயர்ச்சி. இசையில் நுட்பங்களோடு விளையாடியிருக்கிறார் ரஹ்மான்.  இன்னும் தொழில்நுட்பத்தில் விளாசியிருந்தால், ரஜினி கதாபாத்திரம் மாதிரி மற்றவர்களின் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தியிருந்தால், கோச்சடையானை இன்னும் ரசித்திருக்கலாம்.

- குங்குமம் விமர்சனக் குழு