மலைக்க வைக்கும் சென்னை மனிதர்
இவர் மட்டும் அமெரிக்காவில் பிறந்திருந்தால், இந்நேரம் நாமே இவரைப் பற்றி ஆன்லைனில் படித்து, ‘ஆகா ஓஹோ’வென மொழிபெயர்த்துக் கொண்டிருப்போம். நான், நீ எனப் பெரும் நிறுவனங்கள் இவருக்கு ஸ்பான்ஸர் செய்து கொண்டாடியிருக்கும். ‘என்னது... மலையில ஏறுறது ஒரு ஹாபியா?’ எனக் கேட்கும் சென்னைதான் இவரின் வாழிடம். ஆனாலும், தன் மலையேற்ற ஆர்வத்தை நிபந்தனையின்றி நேசிக்கிறார் பாளையம். 68 வயதானாலும் மலையேற்றத்திலிருந்து ஓய்வு பெறாத ட்ரெக்கர் இவர்.
‘‘நான் ஒரு ரிசர்ச் கம்பெனியில வேலை பார்த்து ரிட்டயர் ஆனவன். நாற்பது வருஷமா மலையேறு றேன். உள்ளூர் மலைகள் மட்டுமில்லாம இமயமலை, ஆல்ப்ஸ் மலைன்னு நிறைய பார்த்திருக்கேன். இன்னும் நிறைய பார்க்கணும்’’ என்கிற பாளையம், நாலு படி ஏறினாலே மூச்சிரைத்து மூட்டுவலியில் தவிக்கும் இந்தத் தலைமுறைக்கு நல்லதொரு உதாரண புருஷர்.
‘‘இப்ப ட்ரெக்கிங் ஆர்வம் ஓரளவு வளர்ந்திருக்கு. அங்கங்க ட்ரெக்கிங் கிளப்களைப் பார்க்க முடியுது. அந்தக் காலத்துல ரொம்பக் கம்மி. ‘ஏன் இந்த வேண்டாத வேலை’ன்னு ஒரு மாதிரியா பார்ப்பாங்க. ஆனா, ட்ரெக்கிங்குக்கும் மலையேற்றத்துக்கும் வித்தியாசம் இருக்கு. பதினஞ்சாயிரம் அடிக்கும் குறைவான மலைகள்ல ஏறுறது ட்ரெக்கிங். அதுக்கும் மேற்பட்ட உயரத்துல ஏறுறது மவுன்டெயினிங். அதுதான் மலையேற்றம். ட்ரெக்கிங்குக்குதான் இப்ப நிறைய பேர் போறாங்க. நம்ம ஊர் பக்கம் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, திருப்பதி இதெல்லாம் நல்ல ட்ரெக்கிங் ஸ்பாட்’’ என்கிறவர் மலையேற்றத்தில் சில நுணுக்கங்களைப் பற்றியும் பேசுகிறார்.
‘‘மலையேற்றத்துக்கு வெறும் ஃபிசிக்கல் பிட்னஸ் மட்டுமில்ல... மன உறுதியும், கட்டுப்பாடும் ரொம்ப அவசியம். எப்ப சறுக்கும், எப்ப காத்து வீசும், எப்ப மண் சரிவு ஏற்படும்னு சொல்ல முடியாது. ஒரு குரூப்பா போறதுதான் பாதுகாப்பு. அதுல குறைஞ்து 3 பேராவது இருக்கணும். ரொம்பக் கூட்டமா போகக் கூடாது. அனாவசியமா பேசக் கூடாது. சின்ன கல் கூட சறுக்கி நம்மளை பாதாளத்துக்கு அனுப்பிடும். கவனமா நடக்கணும். மலையேற்றத்துல புதுசு புதுசா இடங்களைப் பார்ப்போம். இயற்கையை தரிசிச்சுக்கிட்டே போகும்போது களைப்பு, உடம்பு வலி கூட காணாம போயிடும்’’ என்கிறவர், சிகரங்கள் நோக்கிய தன் பயணங்களையும் பகிர்கிறார்.
‘‘இருபதாயிரம் அடிக்கும் மேல உயர்ந்திருக்குற மலையை மவுண்ட் பீக்... அதாவது, மலைச்சிகரம்னு சொல்வாங்க. உலகத்திலேயே உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட். ரெய்னால்ட் மெஸ்னர்ங்கற ஆஸ்திரியாக்காரர் எவரெஸ்ட்ல 23 ஆயிரம் அடி உயரம்வரைக்கும் ஆக்ஸிஜனே இல்லாம போய் வந்து சாதனை படைச்சார். நான் 1984ல எவரெஸ்டின் 18,500 அடி வரைக்கும் போனேன். அந்த எல்லையை கும்ப் க்ளேசியர் அடிவாரம்னு சொல்வாங்க. அங்க ஒரு ஆறு பனியா உறைஞ்சு கிடக்கும். பெரிய ஐஸ் கட்டிங்க செங்குத்தா நிற்கும். உண்மையில் அதெல் லாம் பனைமரங்கள்ல படிஞ்ச பனி. இப்படிப்பட்ட இடங்கள்ல வழியே பிடிபடாது. காட்டெருமைகளோட சாணத்தை ஃபாலோ பண்ணிதான் வந்து சேரணும்.
இதே மாதிரி உத்தரகாண்ட்ல ஒருமுறை... மைனஸ் எட்டு டிகிரி குளிர்ல, உறைஞ்சு போன ஒரு ஏரி மேல நிக்கிறேன். கொண்டு போன சாப்பாடும் தீர்ந்துடுச்சு. ஏரியை மட்டும் போட்டோ எடுத்துக்கிட்டு திரும்ப வேண்டிய நிலைமை. அப்படிப்பட்ட நேரங்கள்ல அடம்பிடிக்கக் கூடாது. ‘மலை அப்படியேதான் இருக்கும். அடுத்த தடவை வரலாம். இன்னும் புத்திசாலித்தனத்தோட வரலாம். அதிக தூரம் போகலாம்’னு நினைச்சுக்கிட்டு திரும்பிடணும். இல்லாட்டி ஆபத்து!’’ என்கிற பாளையம், உத்தரகாண்டிலுள்ள பாகீரதி, பேபி ஷிவ்லிங் என்று தான் சந்தித்த கடினமான மலைகளைப் பட்டியலிடுகிறார். ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலையும் அதில் ஒன்று.
‘‘அதோட உயரம் வெறும் 15 ஆயிரம் அடிதான் இருக்கும். ஆனா, முழுக்க ஐஸ் கட்டிகள். இமயமலையில கூட 12 ஆயிரம் அடி வரை சமமா இருக்கும். இங்க செங்குத்தா ஏறும். சுவிட்சர்லாந்துல இருக்குற ஐகர் சிகரமும் இதே மாதிரிதான். இங்கெல்லாம் மலையேறுறதுக்குன்னே சில டூல்ஸ் இருக்கு. வெயில் பனியில பட்டு பிரதிபலிச்சு கண்ணைக் குருடாக்கிடாம தடுக்க விசேஷ கிளாஸ், பனிப்பாறையைப் பிளக்குற கோடாரிகள், பனியில வழுக்காம இருக்க விசேஷமான ஷூ, க்ளவுஸ்னு நிறைய தேவை.
நாலு நாள் மலையேற்றம்னா அந்த அளவுக்கு உணவைக் கொண்டு போக முடியாது. டென்ட் அடிச்சு தங்கி நாமே சமைச்சுக்கணும். சில சமயம் மெயில் ரன்னர்ங்கற ஆட்கள் இருப்பாங்க. கீழிருந்து உணவு கொண்டு வர்றது, பேட்டரிகளை சார்ஜ் பண்ணித் தர்றதுன்னு சில வேலைகளை இவங்க செஞ்சு கொடுப்பாங்க. ஆனா, ட்ரெக்கிங் மலைகள்ல அங்கங்க சின்னச் சின்ன ஹோட்டல்கள் இருக்கும். சாப்பிட்டுக்கிட்டே பயணத்தைத் தொடரலாம். மலையேற நினைக்கிற ஒருத்தர், முதல்ல ட்ரெக்கிங் பயிற்சி எடுத்துக்கறதுதான் நல்லது!’’ என்கிற பாளையம், ட்ரெக்கர்களுக்கு அறிவுரையும் சொல்கிறார்...
‘‘மலையேற்றத்துக்கு ஒரு அர்ப்பணிப்பு வேணும். சிலர் காசுக்காக மட்டுமே ட்ரெக்கிங் கூட்டிப் போறாங்க. மலைகளைப் பத்தி எதுவும் தெரியாத அப்படிப்பட்ட ஆட்களோட போறது, தனியா போறதை விட ஆபத்தானது.
சில அமைப்புகள் இப்ப இதுக்குன்னு கோர்ஸ்கள் நடத்துறாங்க. அதுல பயிற்சி எடுக்கலாம். சிலர் தண்ணி அடிச்சிக்கிட்டு கூட ட்ரெக்கிங் போறாங்க. ஒரு பக்தியோடு செய்தால்தான் மலையேற்றமோ, ட்ரெக்கிங்கோ சாத்தியமாகும்!’’ என்கிறார் அவர் கண்டிப்புடன். இனி, ‘சாமி மலை ஏறுது’ன்னு ரொம்ப ஈஸியா பேசாதீங்கப்பா... இதுல இவ்வளவு மேட்டர் இருக்கு! சிலர் காசுக்காக மட்டுமே ட்ரெக்கிங் கூட்டிப் போறாங்க. மலைகளைப் பத்தி எதுவும் தெரியாத அப்படிப்பட்ட ஆட்களோட போறது, தனியா போறதை விட ஆபத்தானது.
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்