அவன் அவள் unlimited



இயல்பில் அழகு ஆண்கள்... மேக்கப் அழகு பெண்கள்!


பெண்கள்தான் அழகாய் இருப்பதற்காக யோகா வகுப்புக்குப் போகிறார்கள். ஆண்கள் பெண்களைப் பார்ப்பதற்காகப் போகிறார்கள்!

- ஆதாம் லெவின்

‘‘அழகு என்பது ஆண் பாலா பெண் பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா’’

- எந்த ஆய்வுக்கூடமும் இல்லாமல் உயிரியல் ரீதியான ஆராய்ச்சிகள் செய்யாமல் பைசா செலவின்றி நம்மூர் கவிஞர்கள் இந்த முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஆனால், அறிவியலாளர்கள் இப்படி முடிவெடுப்பதில்லை. அழகு என்பது, ஆண் பாலா பெண் பாலா? ஆங்கிலத்தில் ‘‘ஹாய் பியூட்டி!’’ என்றழைத்தாலே அழைக்கப்படுவது பெண்தான் என்பது அண்டர்ஸ்டுட். தமிழிலும் ‘அழகே அழகே அழகின் அழகே’ என யாரும் ஆண்களை வர்ணிப்பதில்லை. உலகம் முழுக்க கிட்டத்தட்ட எல்லா மொழியிலுமே ‘அழகென்ற சொல்லுக்கு கேர்ள்ஸ்’தான். ஆனால், இந்த முடிவு சரியா? பெண்கள் என்றால் அழகு என்று நாம் முடிவு கட்டுவது நிஜமாகவே பெண்களுக்கு கிரெடிட் கொடுக்கிறதா? அல்லது, பெண்களை கரெக்ட் பண்ண ஆண்கள் தரும் அல்வாக்களில் இதுவும் ஒன்றா?

‘‘டார்வின் கோட்பாட்டின்படி, மயில், சிங்கம், சேவல், நாய், அணில் என எல்லா விலங்குகளிலுமே ஆண்தான் அழகு! மனிதனும் இதில் விதிவிலக்கல்ல!’’ என அதிரடியாய்த் துவங்கினார் சென்னை ராணி மேரி கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் டாக்டர் மாலதி. ‘‘உண்மையில் அழகு என்பதே ஒரு கற்பனை வார்த்தை. எல்லா விலங்குகளிலும் ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் ஈர்க்கும். அழகாக இருப்பதால் ஆண் மயில் இன்னொரு ஆண் மயிலிடம் போய் ‘ஐ லவ் யூ’ சொல்லி விடுமா என்ன? நாம் அழகில்லை என ஒதுக்கி வைக்கிற பெண் மயிலிடம் என்னவோ ஒரு ஈர்ப்பு, ஆண் மயிலுக்கு இருக்கும். அந்த ஆண் மயிலின் கண்களால் பார்த்தால் பெண் மயில் அழகு தான். இந்த ஈர்ப்பு இனப்பெருக்கத்துக்குத் தேவை.

ஆனால், ஆண் மயிலை எந்தக் கண்ணால் பார்த்தாலும் அழகாய்த் தெரியும். மனிதக் கண்களுக்கும் கூட! இதற்கும் உயிரியல் காரணங்கள் உண்டு. எதிரி விலங்கு ஒன்று வருகிறதென்று வையுங்கள். அதன் கண்களுக்கு ஆண் விலங்குதான் சட்டென்று கவனிக்கும்படி, பளிச்சென்று தெரிய வேண்டும். பெண் விலங்கு கவனிக்கப்படாமல் தப்ப வேண்டும். எனவே, பூச்சி உட்பட எல்லா உயிரினத்திலும் ஆண்தான் கொஞ்சம் கலர்ஃபுல்லாக, பார்வைக்கு பளிச்சென்று இருக்கும். பெண் உயிரினங்களிடம் இருப்பது கொஞ்சம் ‘டல் லுக்’தான். இனப்பெருக்கத்தில் பெரும் பங்காற்றுவது பெண்கள்தான் என்பதால், இயற்கை அவர்களுக்குத் தந்த பரிசு, இந்த டல் லுக்!’’

அவர் சொன்ன அந்த விதியை அப்படியே மனிதர்களிடம் பொருத்திப் பார்க்கலாம். ஒரு ஆணும் பெண்ணும் காட்டுக்குள் செல்லும்போது புலியோ, சிங்கமோ எதிர்ப்படுகிறது என்று வைப்போமே. அந்த வேட்டை விலங்கு தன் முதல் இரையாக ஆணைத்தான் நினைக்கும். காரணம், அவன்தான் அதிக சதை கொண்ட பெரிய இரை மாதிரி தெரிவான். அதோடு அவன் உடற்கட்டு மிகுந்த சத்தான இரை. (நாம ‘கிடா கறியா?’ எனக் கேட்டு வாங்குவது மாதிரி!) மேலும், உடலிலும் முகத்திலும் ரோமங்களோடு அவன்தான் அவற்றின் கவனத்தை முதலில் இழுப்பான். என்ன... அந்நேரம் அந்தப் பெண், லிப்ஸ்டிக், மஸ்காரா, ஃபவுண்டேஷன் என ஃபுல் மேக்கப்பில் வந்திருந்தால் புலி கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகி அவளையும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணலாமே தவிர, இயற்கையில் அழகும் ஆணிடம்... ஆபத்தும் ஆணிடம்தான்!!

உண்மை இப்படியிருக்க, ‘பெண்கள் என்றால் அழகு’ என்ற கான்செப்ட் இங்கே நிலைத்தது எப்படி? ஒருவேளை மனித வரலாற்றின் ஏதோ ஒரு நன்னாளில், பத்து ஆண்கள் சேர்ந்து ஒரு மீட்டிங் போட்டு, பெண்களிடம் எந்தக் கருத்தும் கேட்காமல், தன்னிச்சையாக இப்படி முடிவெடுத்திருப்பார்களோ? ‘பெண்ணழகு’ என்பதுதான் உலகின் முழுமுதல் ஆணாதிக்க
சிந்தனையோ?

அய்யய்யோ... இந்த சந்தேகமெல்லாம் நமக்கா எழலைங்க. உலக அளவில் பல உளவியலாளர்கள் இப்படிப்பட்ட சந்தேகங்களை தங்கள் ஆய்வில் எழுப்பியிருக்கிறார்கள். ‘‘ஆண்களோடு ஒப்பிட்டால் தாங்கள் கொஞ்சம் ‘டல்’ என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரியும். அதனால்தான் அவர்கள் மேக்கப்பில் இவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள்’’ என்றும் துணிந்து சொல்லியிருக்கிறார்கள்.  அதில் முக்கியமானவர் அமெரிக்க உயிரியலாளரான ராபர்ட் எல்.ட்ரைவர்ஸ். அவர் கான்செப்ட் மிக எளிது. பொதுவாக பெண்களிடம் எதையெல்லாம் நாம் அழகென்று நினைக்கிறோம்?

முதலில் களங்கமில்லாத அவள் முகம், அடுத்து முன்னழகு, பின்னழகு, ஸ்ட்ரக்சர் என கஜகஜா சமாச்சாரங்கள். பெண்களும் தங்கள் செக்ஸ் அப்பீலாக நினைப்பது இவற்றைத்தான். ஆனால், இன்னொரு உயிரினத்தின் அழகை தீர்மானிக்கும்போது நாம் இதையெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு பசு மாட்டின் பால் மடியைப் பார்த்தால் நமக்கு எந்த அழகுணர்ச்சியும் ஏற்படுவதில்லை. பசுவை நாம் தெய்வம் என்போமே தவிர, அழகென்று சொல்வதில்லை. அழகென்றால் கம்பீரம், ஒரு மிடுக்கு, ஒரு வலிமை, ஒரு பளபளப்பு... இதையெல்லாம்தான் வேறு விலங்குகளிடம் நாம் எதிர்பார்க்கிறோம். ஆக, காளை மாடுதான் அழகு! கடுவன் பூனைதான் அழகு! காக்கையில் கூட கழுத்து மினுமினுக்கும் ஆண் காக்கைதான் அழகு!

சரி, ஒருவேளை அந்தப் பத்து ஆண்கள் போட்ட மீட்டிங்கில் சில பெண்களையும் அழைத்து கருத்து கேட்டிருந்தால், ‘அட ஆம்பளைங்கதாங்க அழகு... அவங்க தாடி என்ன... நாத்தம் புடிச்ச ஜீன்ஸ் என்ன... அடடா!’ என்று பெண்கள் வர்ணித்து இருந்திருப்பார்களோ! அட, நாம் பஸ் ஸ்டாண்டில் நின்று ஃபிகர் வெட்டும்போது, அவர்களும் நம் மீது ராக்கெட் விட்டிருந்தால் பிரச்னையே இல்லையே! உருகி உருகி அவர்களும் ஆண்களை வர்ணித்து ரத்தத்தில் கவிதை எழுதி நீட்டியிருந்தால், நாம் ஏன் ‘பெண்கள்தான் அழகு’ என மோனோபாலி முடிவுக்கு வரப் போகிறோம்?

சரி, இப்பவாவது ரெண்டில் ஒன்று கேட்டுவிடலாம். பெண்களும் ஆண்களை வர்ணிக்கத் தயாரா? ம்ஹும்... நிச்சயமாக இல்லை. இன்று மட்டுமல்ல... எந்தக் காலத்திலும் பெண்கள் ஆண்களை வெளிப்படையாக வர்ணிக்க மாட்டார்கள். துரத்தித் துரத்திக் காதலித்து ஆடம் டீசிங் பண்ணவும் மாட்டார்கள். காதல் தோல்வியில் தங்களை வருத்தி தேவதாஸ் ஆகவும் மாட்டார்கள். தாஜ்மகால் கட்டவும் மாட்டார்கள். காரணம்?

நீங்கள் யார்?

இந்தப் படத்தில் உங்களுக்கு என்ன தெரிகிறது? உற்றுப் பார்த்து ‘இவிங்க என்ன சொல்லுவாய்ங்க’ என்றெல்லாம் எல்லா கோணத்திலும் சிந்தித்து மண்டையைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். படத்தைப் பார்த்த மாத்திரத்தில் நீங்கள் எதைக் கவனித்தீர்களோ... அதை அப்படியே மனதில் வைத்துக் கொண்டு தலைகீழாக்கி பலன்களைப் படியுங்கள்.

‘அட, இது E, S, A, H ’ என்ற முடிவுக்கு வந்தவரா நீங்கள்? அப்படியானால், நீங்கள் கொஞ்சம் எமோஷனலான ஆளு. கலைகளை ரசிப்பவர், கணக்கென்றால் ஓடுபவர். கவிதை எழுதும் அபாயமும் உண்டு. ‘அட, இது A, H, E, S’ என்ற முடிவுக்கு வந்தவரா நீங்கள்? அப்படியானால், நீங்கள் ரொம்பவே விவரமான ஆளு. பேச்சில் உங்களை ஜெயிக்க முடியாது. எதிலும் உங்களுக்கு ‘ஏன்... எதற்கு..?’ என்ற லாஜிக் வேண்டும். மனிதர்களையும் சேர்த்து கணக்குப் பண்ணத் தெரியும் உங்களுக்கு! ‘‘எந்தக் கவிஞன்டா அவன்... என் ஃபிகரைப் பார்த்து அழகில்லைன்னு சொன்னவன்?’’

தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்