பேசும் சித்திரங்கள்



பெண் உணர்வுகளுக்கான தடை

தமிழ் ஸ்டுடியோ
அருண்

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை.
- தொல்காப்பியம்

காதலில் விழும்போது ஏற்படும் வேட்கை, தொடர்ந்து நினைத்தல், நாணம் நீங்குதல், தனக்குத்தானே பேசுதல், மறத்தல், மயங்குதல், சாதல் போன்ற உணர்வுகள் அனைத்துமே ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஆனால் இந்த உணர்வுகளை மொழிப்படுத்திப் பேசுதல் அல்லது விவரித்தலில் பெண்ணுக்கான உரிமையை மறுக்கிறது அது. குறிப்பாக, பெண்ணுடல் குறித்தான ஒடுக்குதலும், அடக்குமுறையும் அதிகம்.

ஆணுடனான காமத்தையும், அது சார்ந்த தங்களின் வேட்கையையும், உணர்வுகளையும், மொழியால் பதிவு செய்யமுடியாமல் பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். அதனாலேயே இறைவனைப் பாடுபொருளாக வைத்து பெண்கள் தங்களின் காதல் மொழியை, உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கினர். ஆனால் நவீன இலக்கியம் இந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்டது. பழைய மதிப்பீடு களை மறுபரிசீலனை செய்து, கேள்வி கேட்கும் போக்கை வளர்த்து விட்டது நவீனத்துவம். பெண்ணுடல் குறித்தும், பெண்களின் உணர்வுகள் குறித்தும் பெண்களே எழுதத் தொடங்கி, இன்று பெண்ணுடல் சார்ந்த இலக்கியம் பெரிதும் வளர்ந்து நிற்கிறது. குட்டி ரேவதியின் கவிதைகள், பெண்ணுடல் சார்ந்த முக்கியமான பதிவுகளாக இருந்து வருகின்றன.

ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிகளாய்த்
தேங்கித் ததும்புகின்றன
என மார்பகங்களை இன்னொரு பரிமாணத்தில் உணரச் செய்த கவிதை வரிகள் அவருடையவை.

தொழில்நுட்ப யுகத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில், எல்லாத் துறைகளும் பிரமாண்ட வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. ஆனாலும், பெண்கள் மீதான வன்முறையும், பெண்களின் காலில் சங்கிலியாகப் பிணைக்கப்படும் கட்டுப்பாடுகளும் மட்டும் உலகளவில் இன்னமும் அவிழ்க்கப்படாத முடிச்சுகளாகவே இருக்கின்றன. அதிலும், தங்களின் ஆழ்மன உணர்வுகளை பெண்கள் வெளிப்படுத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இன்னமும் தொடர்கின்றன.

‘சுவர்’ என்கிற இந்தக் குறும்படம், ஒரு ஆணின் காமம் சார்ந்த உணர்வுகளையும், அதேபோன்ற ஒரு பெண்ணின் உணர்வுகளையும் மிக மெல்லிய இழைகளால் அழகாகப் பிணைத்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் வசிக்கும் ஒரு இடம். ஒரே அறைதான், ஆனால் ஒரு சுவரால் இரண்டாகப் பிரிக்கப்பட்ட குளியலறை. தினமும் ஒரு இளம்பெண் அடுத்த அறையில் குளிக்கச் செல்லும் அதே நேரத்தில், கதையின் நாயகனும் இந்தப் பக்கத்து அறைக்குக் குளிக்கக் செல்கிறான்.

பக்கத்து குளியறையில் குளித்துக்கொண்டிருக்கும் இளம்பெண் குறித்து விதம்விதமாக கற்பனைகள் செய்துகொள்ளும் அவன், அந்தக் கற்பனைகளால் தனக்குள் எழும் அடக்க முடியாத உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் திண்டாடுகிறான். எப்படியாவது அவளை அடைந்துவிட வேண்டும் என்கிற பருவ உந்துதலால் தவிக்கிறான். ஒருநாள் தாங்க முடியாமல், பக்கெட்டின் மேல் ஏறி நின்று, அடுத்த அறையில் குளிக்கும் அவளை தரிசிக்க விரும்புகிறான். ஆனால் பயம் தடுத்து விடுகிறது. மறுநாள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு பக்கெட்டின் மீதேறி, அவளின் குளியலறையை எட்டிப் பார்க்க யத்தனிக்கிறான். எட்டிப் பார்க்கும்முன்னே அதிர்ச்சியில் உறைகிறான். என்ன ஆனது?

கத்தியின் விளிம்பில் நடப்பது போன்ற ஆபத்துகள் நிறைந்த கதை. ஒரு மெல்லிய நூலிழையைத் தாண்டினால் முகம் சுளிக்க வைத்துவிடுகிற சம்பவங்கள். ஆனால் இந்தக் குறும்படம் எடுக்கப்பட்ட விதமும், வசனங்களே இல்லாமல் காட்சிகளால் கதையை அடுத்த தளத்திற்கு நகர்த்திய விதமும் அபாரம்.

நெரிசலான நகரத்து குடியிருப்புப் பகுதிகளில் பேச்சுலர்களுக்கு மேன்ஷன் வாழ்க்கையும், சராசரி குடும்பங்களுக்கு ஒண்டுக் குடித்தன வாழ்க்கையும் விதிக்கப்பட்டவை. புறாக்கூண்டு அறைகள் நிறைந்த மேன்ஷன் வாழ்க்கையில், காலை நேர பரபரப்பில் குளியலறை க்யூவில் இடம் கிடைத்து குளித்து முடிப்பதே ஒரு சாகசம். ஒண்டுக் குடித்தனங்களில், பத்து வீடுகள் இருக்கும் இடத்தில் இரண்டு, மூன்று குளியலறைகள் மட்டுமே இருக்கும். குளித்துவிட்டு அந்த சிறிய குளியலறைக்குள்ளேயே உடைகள் மாற்றி வீட்டிற்குச் செல்ல வேண்டும். எத்தனை வார்த்தைகள் வேண்டும் இந்த சங்கடத்தையும் சம்பவத்தையும் விவரிக்க! ஆனால் இந்த சங்கடங்களை, சம்பவங்களை ஒரே ஒரு காட்சியில் இயக்குனர் விளக்கியிருப்பார். அதுதான் காட்சிகளின் அசாத்தியப் பாய்ச்சல். ஆயிரம் பக்க வசனத்தை ஐந்து வெவ்வேறு காட்சிகளில் விளக்கி விட முடியும்.

குறிப்பாக, அவளை அடைந்து விடுவது என்பதுதான் அவனது இலக்காக இருக்கிறது. ஆனால் அப்படி அடைவது வன்முறையாக இல்லாமல், அவனது பருவ மாற்றத்தால் ஏற்படும் உணர்ச்சிகளால் நிகழ்கிறது. அவள் குளித்துவிட்டு, ஈரப்பாவாடையை கொடியில் காய வைத்திருப்பாள். அதிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளை ஏந்தியபடி, அவளைப் பற்றிய கற்பனை பலூனை ஊதிவிடுவான் அவன். எந்த விரசமும் இல்லாமல், குறும்படத்தின் ஒட்டுமொத்தக் கதையையும், தரத்தையும் இந்த இரண்டு காட்சிகளும் சொல்லி விடுகின்றன.

இறுதிக் காட்சியில் அந்த இளைஞன் பக்கத்து குளியலறையை எட்டிப் பார்க்க யத்தனிக்கும்போது, அந்தப் பெண் இவனது குளியலறையை எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பாள். முழுக்க முழுக்க ஆணின் பார்வையில் மட்டுமே நாம் எதையும் பார்க்க விரும்புகிறோம். ஆணுக்கான காமத்தையும், அது சார்ந்த உணர்வுகளையும் மட்டுமே படைப்புகளால் கட்டமைத்திருக்கிறோம். அதைத் தாண்டி, ஒரு பெண்ணுக்கான காம உணர்வுகளை அவள் வெளிப்படுத்தத் தயங்கும் தருணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம், அந்தக் காரணத்தினாலேயே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

வெறும் கதையாக மட்டுமே இல்லாமல், படைப்புகளுக்கே உரிய சில கோட்பாடுகளையும் இந்தக் குறும்படம் தொட்டுச் செல்கிறது. சர்ரியலிசக் கோட்பாடுதான் அது. அந்த இளைஞன் அந்தப் பெண்ணை அடைய விரும்புவதையும்... ஒரு பொட்டல் காட்டில் திரியும் பிம்பம் ஒன்று, சிவப்பு வண்ணத்தை நோக்கி அலைவதையும் காட்சிப்படுத்தியிருப்பார்.

இறுதியில் அவன் துணிந்து அந்தக் குளியறையை எட்டிப் பார்க்க நேரும் காட்சியில், கட்டவிழ்க்கத் திரியும் மாடு ஒன்றைக் காட்சிப்படுத்தியிருப்பார். இந்த சிவப்பு நிறம், மாடு போன்றன உவமைகளாக இல்லாமல், அரைமயக்க நிலையில் பிம்பங்களின் மூலம் கதை சொல்லல் உத்தியை நோக்கிச் செல்கின்றன. நெரிசலான நகரத்து குடியிருப்புப் பகுதிகளில் பேச்சுலர்களுக்கு மேன்ஷன் வாழ்க்கையும், சராசரி குடும்பங்களுக்கு ஒண்டுக் குடித்தன வாழ்க்கையும் விதிக்கப்பட்டவை.

படம்: சுவர்     இயக்கம்: விஜய ராகவன்
நேரம்: 15.01 நிமிடங்கள் ஒளிப்பதிவு: ஒமர், ராஜேஷ் வர்மா
ஒலி: சந்திரகாந்த்  படத்தொகுப்பு: சுபாஷ்கர்
பார்க்க:  www.youtube.com/watch?v=53vSgzHnCcU 

மேன்ஷன் வாழ்க்கையில் இருந்தபோது, தன்னுடைய குளியறை அருகே இருந்த இன்னொரு குளியறையை சுத்தம் செய்யும்போது, ஒரு பெண் தன்னை எட்டிப் பார்ப்பது போலான காட்சியை இயக்குனர் விஜய ராகவன் உணர்ந்திருக்கிறார். அதைக் கொஞ்சம் செப்பனிட்டு, குறும்படத்திற்கான திரைக்கதை அமைத்து, நேர்த்தியாக எடுத்து முடித்துள்ளார். தொடர் வாசிப்பு, சக மனிதர்களை எப்போதும் நேசிப்பது,

அக்கம்பக்கத்து வாழ்க்கையை தொடர்ச்சியாக தரிசிப்பது, தன்னுடைய சொந்த வாழ்க்கையில் இருந்தே படைப்பிற்கான களத்தைத் தேர்ந்தெடுப்பது போன்ற பழக்கங்களே ஒரு படைப்பை எப்போதும் பார்வையாளனுக்கு நெருக்கமாக உணரச் செய்யும். ஒரு சாதாரண பார்வையாளன் ஒரு படைப்பைப் பார்த்துவிட்டு, அதிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை அசை போடுவதும், தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள முற்படுவதும், தான் சரி என்று நம்பிக் கொண்டிருந்த பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களை களைய விரும்புவதும், அந்த படைப்பிற்கான வெற்றியாகத்தானே இருக்க முடியும்!


(சித்திரங்கள் பேசும்...)