கவிதைக்காரர்கள் வீதி



கோடையனுப்பு விழா


ஒரு கோடையை
முடித்து வைக்கிறது.
பள்ளி வளாகத்தில் மொட்டு விடும்
முதல் கொன்றைப்பூ.
பந்துகள் சிதறா
வெற்று மைதானம்.
பரண் மீளும்
பல்லாங்குழிப் பலகைகள்.
துளையிட்ட பூச்சியகற்றி
பகிர்ந்தளித்த கடைசி மாம்பழம்.
சருகான சாமந்தி இதழ்களை
அந்திக் காற்றில்
உலர்ந்த மாலையிலிருந்து
உதிர்த்தபடி இருக்கும்
கூழ் வார்த்த மாரியம்மன்.

இவற்றோடு
ஒவ்வொரு கோடையையும்
இனிதே வழியனுப்புகிறார்கள்
எல்லா பேருந்திலும்
புதிய துணிக்கடைப் பைகளோடு
குதூகலத்துடன் இடம் தேடியமரும்
பாட்டி வீடு நீங்கிய சிறுவர்கள்.

முகம் தெரியா மனிதர்களுக்கான
அவர்களின் ஜன்னல்வழிக் கையசைப்பு
கோடைக்குமானது.

கே.ஸ்டாலின்