அழகான நகரம்’ என்ற வார்த்தைக்கு நம் ஆட்சியாளர்களின் அகராதியில் ‘குடிசைகள் இல்லாத நகரம்’ என்று பொருள். பறக்கும் ரயில், கூவம் சுத்திகரிப்புத் திட்டம், மழைநீர் சேகரிப்புத் திட்டம்... எதுவாக இருந்தாலும் முதலில் இலக்காவது குடிசைகள்தான். ஆனால் குடிசைகளை அகற்ற அகற்ற புதிய புதிய குடிசைகள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. கிராமங்களில் ஏற்பட்ட வாழ்வாதாரக் குலைவுகளால் மக்கள் நகரங்களை நாடி வந்தவண்ணம் இருக்கிறார்கள். அதனால் குடிசைகள் நிரம்பிக்கொண்டே இருக்கின்றன. அண்மையில் அரசு வெளியிட்டிருக்கும் ஒரு புள்ளிவிவரமே இதற்குச் சான்றாக இருக்கிறது. இந்தியாவில் 2001ல் ஐந்து கோடியாக இருந்த நகர்ப்புற குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை இப்போது ஆறரைக் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதிக குடிசைப் பகுதிகளைக் கொண்ட நகரங்களில் நம் சென்னை முன்னணியில் இருக்கிறது.
ஒரு பக்கம் அரசு குடிசைப்பகுதிகளை காலி செய்து கொண்டிருக்க, இன்னொருபுறம் குடிசைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல என்ன காரணம்..?
‘‘இந்தப் பிரச்னைக்கான வேர் கிராமங்களிலிருந்து தொடங்குகிறது’’ என்கிறார் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கீதா.
‘‘கிராமங்கள் வாழும் நிலையை இழந்து வருகின்றன. முக்கிய வாழ்வாதாரமாக இருந்த விவசாயமும், கிராமியத் தொழில்களும் நசிந்து விட்டன. வறுமை அதிகரிக்கிறது. இந்நிலையை மாற்றி கிராமங்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டங்களில் அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. வேறு வழியில்லாமல் மக்கள் நகரங்களை நாடி வருகிறார்கள். அந்தக் காலத்தில் பஞ்சம் பிழைக்கச் செல்வது அவமானமான செயலாக இருந்தது; இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. நகரங்களை நாடி வருபவர்களை இரு பிரிவாகப் பார்க்க வேண்டும். படித்து, அதற்குத் தகுந்த வேலையை நாடி வருபவர்கள் ஒரு பிரிவு. இது மிகக்குறைந்த சதவீதம். இவர்களது வாழ்வியல் சிக்கல்கள் வேறு மாதிரி. ஆனால், எந்தப் பிடிமானமும் இல்லாமல், நகரங்களுக்குப் போனால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் வரும் மக்கள்தான் குடிசைகளை நாட வேண்டியிருக்கிறது.

ஒரு காலத்தில் ஜாதிய வன்முறைகளில் சிக்கியவர்கள் நகரங்களில் புதிய அடையாளம் தேடி வந்தார்கள். இப்போது எல்லா தரப்பினருமே வருகிறார்கள். இப்போது பிரச்னை உணவுதான். அண்மைக்கால வறட்சி காரணமாக இந்த வருகை சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.
பூ விற்பனை, வீட்டு வேலை, கட்டிட வேலை, பழ விற்பனை, மூட்டை தூக்குதல் என்று உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்ட அமைப்பு சாரா தொழில்களையே இவர்கள் செய்ய வேண்டியுள்ளது. இவர்களைப் பற்றிய பதிவுகள் ஏதும் அரசிடம் இருப்பதில்லை. எங்கே வேலை செய்கிறார்களோ, அதற்கு அருகாமையில் குடியிருந்தால்தான் வாழ முடியும்.
சென்னையில் வாடகைக்குக் குடியிருப்பது சாதாரணமில்லை. தினக்கூலி தொழிலாளி தன் வருமானத்தில் நகரத்தில் ஒரு வீடு பிடித்து வாழ்வது சாத்தியமல்ல. அதனால் அவர்கள் குடிசைகளை நாடுகிறார்கள். பெரும்பாலான மக்கள் வாடகைக் குடிசைகளில் குடியிருக்கிறார்கள். அதற்கே மூன்றாயிரம் ரூபாய் வரை வாடகை!
குடிசைகளே இல்லாத சென்னையை உருவாக்குவதாகக் கூறி இந்த மக்களை எல்லாம் நகருக்கு வெளியே 30 கி.மீ தள்ளி கொண்டு போய் கொட்டுகிற வேலையை அரசுகள் செய்கின்றன. இது நவீன தீண்டாமை. அங்கு அவர்களால் வாழ முடியாது. பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது. தொழில் செய்யும் இடத்துக்கு வந்துபோகவே வருமானம் போய்விடும்.
1970ல் குடிசைப்பகுதி சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி சென்னையில் 1500 குடிசைப்பகுதிகள் அங்கீகரிக்கப்பட்டன. அந்த இடங்கள் மக்களுக்கு உரிமையாகும் நிலை ஏற்பட்டது. தி.மு.க அரசாங்கம், குடிசைகள் இருந்த இடத்திலேயே அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக்கொடுத்தது. அதன்பிறகு வந்த அரசுகள் மக்களை வெளியேற்றுவதில்தான் முனைப்பு காட்டின.

சென்னையில் 17 சதவீத மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் 5 சதவீத நிலத்தைக் கூட பயன்படுத்தவில்லை. நகரத்திற்குள் ஏராளமான அரசு நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றைக் கையகப்படுத்தி அம்மக்களுக்கு தாராளமாக குடியிருப்புகள் கட்ட முடியும். இடம் இருக்கிறது; மனம்தான் இல்லை’’ என்கிறார் கீதா.
‘‘100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் கிராமத்தில் மக்களை தக்க வைப்பதற்கான மிகச்சிறந்த திட்டம். அதில் உள்ள ஊழல்களையும் முறைகேடுகளையும் களைய வேண்டும். அதைப்போல இன்னும் பல திட்டங்களை உருவாக்க வேண்டும். அதன்மூலமாக நகரங்களை நோக்கி வரும் கிராமத்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முடியும்’’ என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ்.
‘‘நகரங்களை நோக்கி மக்கள் கூடுவது நல்லதல்ல. கிராமத்து வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. பெரிய தொழில்கள் எல்லாம் நகர்ப்புறங்களிலேயே இருக்கின்றன. இதை கிராமங்களுக்கும் பரவலாக்க வேண்டும். மருத்துவ வசதிகளை உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். அரசின் உயர்கல்வி மையங்களை கிராமங்களுக்கு அருகாமையில் கொண்டு செல்ல வேண்டும்.
யாரும் விரும்பி நகரங்களுக்கு வருவதில்லை. பெரும் மனச்சுமையோடுதான் வருகிறார்கள். நகரங்களிலும் போதிய வளர்ச்சித் திட்டங்கள் இல்லை. குடிசைகளை அகற்றுவதுதான் நகர மேம்பாடு என்று அதிகாரிகள் நினைக்கிறார்கள். குடிசைகள் இல்லாத நகரம், வரவேற்கத்தக்கது. குடிசைகளை அகற்றி அந்த மக்களை தெருவில் விட்டு அந்த இலக்கை அடையமுடியாது. கிராமங்களையும், நகரங்களையும் உள்ளடக்கிய தொலைநோக்குடைய வளர்ச்சித் திட்டங்கள்தான் இதற்கெல்லாம் தீர்வு’’ என்கிறார் அ.மார்க்ஸ்.
அபயம் தேடி தன்னை நாடிவரும் பிள்ளைகளுக்கு சென்னை தருகிற தாய்மடிதான் குடிசைகள். கூவத்தின் கொசுக்கடியிலும், தண்டவாளத்தின் அதிர்விலும், நகருக்கு ஒதுக்குப்புறங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற குடிசைவாசிகளால்தான் சென்னை இயங்குகிறது. நகரத்துக்குள் இவர்களின் குடிசைகள் இருப்பது அவமானமல்ல... இவர்களுக்கு கௌரவமான குடியிருப்புகளை உருவாக்கித் தராததே தேசிய அவமானம்.
- வெ.நீலகண்டன்