தோளில் ஆளுக்கொரு பையை மாட்டிக்கொண்டு கைகோர்த்தபடி கிளம்பி விடுகிறார்கள் இருவரும். மனித உரிமைக்கு எதிரான செயல்கள் எங்கு நடந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஜாதிய வெறியாட்டங்களையும், காவல்துறையின் அத்துமீறல்களையும் உண்மை அறியும் குழுக்கள் வாயிலாக வெளிக்கொண்டு வருகிறார்கள். பழமை மாறாத ஊர்களுக்குப் போய், சொரணை ஏற்படுத்தும் வீதி நாடகங்களைப் போட்டு அனல் கிளப்புகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கிராமம் கிராமமாக நடந்து பிரசாரம் செய்கிறார்கள். இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்துப் போராடி மாதக்
கணக்கில் சிறையில் இருந்ததும் உண்டு. நண்பர்களைப் போல வாழ்கிறார்கள் பொன்.சந்திரனும் தனலெட்சுமியும். திருமணமாகி 30 ஆண்டுகள் நிறைந்தும் அன்பும் தோழமையும் மரியாதையும் புத்தம் புதிதாக இருக்கிறது.
80களில் வீதி நாடக வடிவத்தை பிரசார ஆயுதமாகக் கொண்டு கிராமங்களில் விழிப்புணர்வு ஊட்டியவர்களில் சந்திரன் பிரதானமானவர். வீதி நாடகத்தின் தந்தையான பாதல் சர்க்காரின் மாணவர். தனலெட்சுமி ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர். அடித்தட்டு விவசாயக் குடும்பம்.
‘‘எங்க அப்பா பொன்னையா, பிரபலமான மிருதங்க வித்வான். பாலக்காடு மணி அய்யரோட மாணவர். அதனால இயல்பா கலையார்வம் என் ரத்தத்துக்குள்ள இருந்துச்சு. நாங்க நாலு சகோதரர்கள். எங்க அண்ணன் பரமேஸ்வரன் கலை இலக்கிய ஈடுபாடு உள்ளவர். மனித உரிமை தளத்துலயும் வேலை செஞ்சிருக்கார். அவரைப் பாத்துத்தான் நானும் வந்தேன். கல்லூரிக் காலத்திலேயே சென்னையில நடந்த பாதல் சர்க்காரோட நாடகப் பள்ளியில சேரும் வாய்ப்பு கிடைச்சுது. பெங்களூர்ல ‘மக்கள் சமூக பண்பாட்டுக் கழகம்’னு ஒரு அமைப்பைத் தொடங்கி வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் போட்டோம்.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் தொடங்கப்பட்ட தருணத்தில அதில இணைஞ்சு வேலைகளைச் செஞ்சேன். படிப்பு முடிச்சதும் வங்கியில் வேலை கிடைச்சுச்சு. கொல்கத்தா, மதுரை, டெல்லி, மும்பைன்னு ஊரு ஊரா தூக்கிப் போட்டாங்க. ஒவ்வொரு ஊரையும் எனக்கான களமா மாத்திக்கிட்டேன். கொல்கத்தாவில இருந்தப்போ திரும்பவும் பாதல் சர்க்காரோட நாடகப்பள்ளியில சேந்து கத்துக்கிட்டேன். மதுரையில இருந்தப்போ ‘சுதேசி நாடகக்குழு’ உருவாக்கி வீதி நாடகங்கள் போட்டோம். கோவையில இருந்தப்போ ‘டிரெண்ட் செட்டர்ஸ்’ நாடக அமைப்பை உருவாக்கினோம். இப்படியே நகர்ந்த பயணத்துல தனலெட்சுமியும் வந்திணைஞ்சா... வங்கி வேலைக்கு வி.ஆர்.எஸ் குடுத்துட்டு இன்னும் உத்வேகமா நடந்துக்கிட்டிருக்கோம்...’’ - தனலெட்சுமியின் தலை வருடியபடியே பேசுகிறார் சந்திரன்.
‘‘என் அண்ணனும் சந்துருவோட அண்ணன் மாதிரிதான். கலை, இலக்கியத்தில ஆர்வமுள்ளவர். சந்துருவை அவர்தான் அறிமுகப்படுத்தினார். முதல்ல 8 மாதங்கள் நாங்க நேராவே பாத்துக்கிட்டதில்லை. கடிதம் மூலமாத்தான் பேசத் தொடங்குனோம். எங்களுக்குள்ள பரிபூரண புரிதல் இருந்துச்சு. சமூகத்தைப் பத்தி, விளிம்பு மக்களைப் பத்தி, மனித உரிமை மீறலைப் பத்தியெல்லாம் பகிர்ந்துக்கிட்டோம். 8 மாதங்கள்ல 100 கடிதங்கள் எங்களுக்காக பேசியிருக்கும். ரெண்டு பேருமே அந்தக் கடிதங்களை பத்திரமா பாதுகாக்கிறோம். ஒரு கட்டத்துல ‘நாம ஏன் திருமணம் செஞ்சுக்கக்
கூடாது’ன்னு தோணுச்சு. பேசினோம். எங்களை விட அவரோட அண்ணனும், என்னோட அண்ணனும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
பி.எஸ்சி, பி.எட் முடிச்சிருந்தாலும், வேலைக்குப் போக விருப்பமில்லை. அவருக்குத் துணையா அவர் கூடவே நடக்க ஆரம்பிச்சேன். நானும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்துல இணைஞ்சேன். இன்னும் உத்வேகமா வீதி நாடகங்கள் போட்டோம். கோவை ஞானி அய்யா, பெங்களூர் குணா மாதிரி பெரிய ஆளுமைகளோட சேந்து வேலை செஞ்சோம். பிரச்னைகளுக்காக போராடுனோம். இலங்கையில இறுதிக் கட்டப் போர் நடந்தப்போ இந்தியாவில இருந்து ஆயுதங்கள் போறதைக் கண்டிச்சு கோவையில பெரிய போராட்டத்தை முன்னெடுத்து, அதுக்காக கைதாகி 2 மாதம் சிறையில இருந்தோம். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரா தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினோம். மின்தடை பிரச்னைக்கு கூடங்குளம் அணுமின் நிலையம்தான் தீர்வுன்னு நம்பிக்கிட்டிருந்த கோவை தொழிற்சாலை முதலாளிகளை, கூடங்குளம் மக்களோடு போய் சந்திச்சு உண்மை நிலையை எடுத்துச் சொன்னோம்.
எங்கே போனாலும் கைகோர்த்துக்கிட்டே போறோம். ஒரே சிந்தனை, குடும்பத்துக்கு வெளியில இருந்த ஒத்த தேடல்... ரெண்டும்தான் எங்களை தோளோட தோள் இணைக்குது. மூன்று குழந்தைகள். மூத்தவன் முகில், கமல்ஹாசன் கூட இருக்கான். புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சப்போ அவந்தியை காதலிச்சான். கல்யாணம் முடிச்சு வச்சுட்டோம். அவந்தியும் மீடியாவிலதான் இருக்கா. அகில் எஞ்சினியரிங் படிக்கிறான். அவங்க வாழ்க்கையை அவங்க பாத்துக்கிறாங்க. நாங்க எங்க பாதையில நடக்கிறோம். சரிசமமான மரியாதைதான் வாழ்க்கை. அதைத்தான் எங்க பிள்ளைகளுக்குக் கத்துக் கொடுக்குறோம்...’’ - மலர்ச்சியாகச் சிரித்தபடி சந்துருவின் கைகோர்த்துக் கொள்கிறார் தனலெட்சுமி.
- வெ.நீலகண்டன்
படங்கள்: வெங்கடேசன்