காரணம் : எஸ்.ராமன்

‘‘ஒரே சமயத்தில், கை நிறைய சம்பாதிக்கிற இரண்டு பையன்களோட வரன் வந்திருக்கு. நீயும் நல்ல வேலையில இருக்கே. இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி அவங்களோட சாட் பண்ணிட்டு உன் முடிவைச் சொல்லு’’ என மகள் மணிமேகலையிடம் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளைக் கொடுத்தாள் மணிமொழி.
‘‘அம்மா, எனக்கு இவரைத்தான் பிடிச்சிருக்கு’’ என அடுத்த நாளே அதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டாள் மணிமேகலை. ‘‘எதை வச்சிடீ இவ்வளவு சீக்கிரம் முடிவு பண்ணினே?’’ ‘‘எல்லா விதத்திலும் அவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான்மா. குடும்பத்தைப் பிரிஞ்சு, வெளியூர்ல வேலை பார்த்து முன்னுக்கு வந்திருக்காங்க. ஆனா, ஒரே ஒரு வித்தியாசம்... பேச்சுலர் லைஃப்ல ஒருத்தர் ஓட்டல்லதான் சாப்பிட்டிருக்கார். ஆனா, நான் செலக்ட் பண்ணியிருக்குற இவர், பிஸியான வேலையில இருந்தாலும், ரூம்ல ஸ்டவ் வச்சி, தானே சமைச்சு சாப்பிட்டிருக்கிறார். அதனால அவரோட உடல் ஆரோக்கியம் கெடாம நல்லா இருக்கும். அது மட்டுமில்லாம, கணவன் - மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போகும்போது, ஆம்பிளைக்கு சமைக்கத் தெரிஞ்சா குடும்பத்தில் குழப்பங்கள் குறையும்’’ என்றாள் மணிமேகலை. மகள் எடுத்த முடிவை சரியாகப் புரிந்துகொண்டாள், வேலைக்குப் போகும் இல்லத்தரசியான மணிமொழி!
|