கொழுப்பைக் குறைக்கும்... கேன்சரைத் தடுக்கும்... அரிசிக்கு மாற்றாக அமரந்த்





‘ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நம்ம முன்னோர்கள் கட்டிக் காத்த ஒரு பொக்கிஷம்... இப்ப தொலைஞ்சு போச்சு. வெளிநாட்டுக்காரங்க அதே மாதிரி பொக்கிஷத்தைக் கையில வச்சிக்கிட்டு ஆட்டம் காட்டுறாங்க. ஆனா, உண்மையான பொக்கிஷம் நம்ம ஊர்லதான் இன்னும் இருக்கு. அதைத் தேடி ஒரு பயணம்!’

என்னங்க... ஏதோ ஹாலிவுட் பட ஒன்லைன் போல இருக்கிறதா? கிட்டத்தட்ட இப்படித்தான் கடந்த 15 வருடங்களாக தமிழக வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறது மேட்டுப்பாளையத்தில் உள்ள ‘வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’. இறுதியாக அவர்கள் கண்டறிந்திருக்கும் பொக்கிஷம்... ‘அமரந்த்’ எனும் தானியம்! நம்ம ஊர் தண்டுக்கீரை இனத்தில் வேறொரு ரகம்!

‘‘அரிசி, கோதுமை மாதிரி இதுவும் சாதாரண தானியம்தானேனு நினைக்காதீங்க. இந்த தானியத்துல புரதச் சத்து அதிகம். கொழுப்புச் சத்து குறைவு. கொழுப்பை குறைக்கும் தன்மையும் இதற்கு உண்டு. அதனால, இதைத் தொடர்ந்து சாப்பிடுறவங்களுக்கு இதய நோய் வரவே வராது. அதோடு இந்த தானியத்துல ‘ஸ்குவாலென்’, ‘லைசீம்’ என்கிற வேதிப் பொருட்கள் அதிகம் இருக்கு. இது கேன்சரை தடுக்கற மருத்துவ குணம் கொண்டது. வெளிநாட்டில் இதை வச்சி மருந்தே தயாரிக்கிறாங்க. இந்தியாவுல குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள்ல இதை அதிகமா பயிர் செய்து ஏற்றுமதி பண்றாங்க. ஆனா, ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாடியே இதை உணவா பயன்படுத்தின நாம, இப்ப டோட்டலா மறந்துட்டோம்!’’ - ஆதங்கமாகப் பேசுகிறார் பாலசுப்பிரமணியன். ‘வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன’ப் பேராசிரியர். இவர் தலைமையிலான குழுதான் வனப்பகுதிகளில் உள்ள தாவரங்களை ஆராய்ந்து அமரந்த் தானியத்தை அடையாளம் கண்டிருக்கிறது.



‘‘நம்ம முன்னோர்கள் வரகு, சாமை, கம்பு, தினைன்னு எவ்வளவோ சிறு தானியங்களை உணவில் சேர்த்து ஆரோக்கியமா வாழ்ந்தாங்க. ஆனா, இன்னைக்கு நமக்கு அரிசியைத் தவிர வேறெதையும் தெரியல. மற்ற சிறுதானியங்களாவது பேர் தெரியுது, இந்த அமரந்த், பேர்ல இருந்து எல்லாமே அந்நியமாகி ஏதோ தமிழ்நாட்டுக்கு சம்மந்தமே இல்லாத தானியம் மாதிரி ஒதுங்கிடுச்சு. எவ்வளவோ ஆரோக்கியப் பொக்கிஷங்களுக்கு தாயகமா இருக்குற தமிழ்நாட்டுல அமரந்த் மட்டும் இல்லாம போகுமா? நிச்சயம் இருக்கும்னு ஒரு நம்பிக்கையோடுதான் தேடினோம். பலன் கிடைச்சிருக்கு’’ என்று பாலசுப்ரமணியம் நிறுத்த, மற்றொரு பேராசிரியர் சேகர் தொடர்கிறார்...

‘‘நிஜத்தில் இந்த அமரந்த் தானியத்தை மட்டுமில்ல... இந்த செடியோட இலைகளைக் கூட கீரையா உணவில் சேர்த்துக்குற வழக்கம் பழங்காலத்துல இருந்திருக்கு. அதனால தானியத்தோட பேரையே ‘தண்டக்கீரை’ன்னுதான் வழங்கியிருக்காங்க. இப்பவும் நீலகிரி மலைப்பகுதியில் இருக்கிற தோடர் இன மக்கள், இந்தத் தானியத்தைப் பயிரிட்டு சாப்பிடுறாங்க. பாரம்பரியமா அவங்க கடவுளுக்கு வைக்கிற படையலில் கூட அமரந்த் உண்டு. இந்த விஷயத்தைக் கண்டுபிடிச்சதும், அவங்க பயன்படுத்துற அமரந்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினோம். பெரிய வித்தியாசம் எதுவும் இல்ல. வடநாட்டில் விளையிற அதே அமரந்த்தான் இதுவும். ஆனா, தமிழ்நாட்டுல வளர்றதுக்கு ஏத்தபடி பக்குவம் பெற்றிருக்கு. அதை இன்னும் மேம்படுத்தினோம். நீலகிரி மட்டுமில்லாம தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள்ல உள்ள தட்பவெப்ப நிலையையும் தாங்கிட்டு வளர்ற சக்தி இதுக்கு இருக்கு. இது விவசாயிகளுக்கு நல்ல செய்தி!’’ என்று சேகர் நிறுத்த, இது எப்படி நல்ல செய்தி என்பதை விளக்கினார்  டீன் துரைராசு.



‘‘வட இந்தியாவில் இதை வைத்து பர்பி வகை இனிப்பு பண்டங்கள் நிறைய தயாரிக்கிறார்கள். அல்வா, பிரட் அயிட்டங்களும் செய்கிறார்கள். நம் ஊரில் ஆரோக்கியத்துக்காக இதில் கஞ்சி காய்ச்சி குடிக்கலாம். மாவாக அரைத்து இட்லி, தோசை சுட்டு சாப்பிடலாம். ஆனால், இது எல்லாவற்றையும் தாண்டி வெளிநாட்டில்தான் இதற்கு நல்ல மார்க்கெட் உள்ளது. விவசாயிகளுக்கு நல்ல லாபத்தையும் நாட்டுக்கே அன்னியச் செலாவணியையும் பெற்றுத் தரக் கூடியது இது. இதுநாள் வரையில் தமிழ்நாட்டு விவசாயிகளால் அமரந்த் ஏற்று மதியில் நுழைய முடியாமல் இருந்தது. இந்த ஆராய்ச்சி, அவர்கள் வயிற்றில் பால் வார்க்கும். இன்னும் ஒரே வருடத்தில் அமரந்த் விதைகளை விவசாயிகள் கையில் கொடுத்து விடுவோம்’’ என்கிறார் துரைராசு உற்சாகத்துடன்.

இப்போதே அமரந்த் பயிர் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது இந்த வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். ‘‘இதில் மொத்தம் 10 ரகங்கள் இருக்கு. 80 முதல் 110 நாட்களில் அறுவடை செய்யலாம். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் கிடைக்கும். எங்க கல்லூரியிலேயே பயிர் செஞ்சிருக்கோம். இதைப் பயிர் செஞ்சா நல்ல லாபம் கொழிக்கலாம். மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மார்க்கெட்ல நம்ம விளைச்சலை வாங்க ரெடியா இருக்காங்க’’ என்கிறார் பாலசுப்ரமணியம் நம்பிக்கை பொங்க!
- பேராச்சி கண்ணன்
படங்கள்: சந்தோஷ்