சோனாக்ஷியையும் என்னையும் இணைச்சு யோசிக்க செய்திகள் இல்லை!





பிரபுதேவாவுக்கு இது புத்துணர்ச்சி வருடம். சொந்த வாழ்க்கை, பிரியத்திற்குரிய காதல் என கொஞ்சம் சறுக்கிய பிரபு, இந்தி சினிமாவில் பறக்க விட்டிருப்பது வெற்றிக்கொடி. இயக்கிய இந்திப் படங்கள் ஒவ்வொன்றும் 100 கோடி வசூல் என வரலாறு பின்னிப் பிரித்ததில் ஆரம்பித்தது பிரபுதேவாவின் அடுத்த இன்னிங்ஸ். எல்லா இந்தி ஹீரோக்களும் இவரைக் கடத்திப்போக கதவு தட்டிக்கொண்டிருப்பது பெரும் பரபரப்பு. ‘பேசுவோமா பிரபு’ என எஸ்.எம்.எஸ் தட்டினால், 15 நிமிடங்களில் லைனில் வந்தார்...

‘‘எப்படி இருக்கீங்க?’’
‘‘ஆசையா, விருப்பமா வேலை பார்த்துக்கிட்டே இருக்கேன். ஒரு நாளுக்கு இன்னும் சில மணி நேரங்கள் இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுது. எங்கே இருந்தாலும் நமக்கு ஒண்ணுதான். சென்னையில் இருந்த நாட்களிலேயே நாலா பக்கமும் பறந்து திரிஞ்ச ஆள்தான். இப்ப பாருங்க... காலாண்டு விடுமுறைக்கு பசங்க இங்கே என்
ஃபிளாட்டுக்கு வந்துட்டாங்க. அவங்களை வீட்டுல பாதுகாப்பா வச்சிட்டு, ஷூட்டிங் கிளம்பிப் போறேன். பசங்களோட விளையாடுவதில் உள்ள சுகமே வேறே. ஆனால், சினிமாவும் இருக்கே! ஷாகித் கபூர் காத்துக்கிட்டிருக்கார். ‘ஆர்...ராஜ்குமார்’னு செம படம் ஒண்ணு. கமர்ஷியல் கலக்கல். கிட்டத்தட்ட வெளியிட ரெடியா இருக்கு. அடுத்து, அஜய் தேவ்கன் ஷூட்டிங் நடக்குது. சல்மான் கானும் வரிசையில் இருக்கார். எல்லோருமே நண்பர்கள். வரிசையாத்தானே பண்ண முடியும். புரிஞ்சிப்பாங்க!’’

‘‘ ‘100 கோடி கலெக்ஷன்’ வரிசையில் வந்துட்டீங்க... எப்படியிருக்கு மனசு?’’
‘‘சார்... வாழ்க்கையோட அத்தனை நெருக்கடிகளையும் பார்த்தவன் நான். சினிமாவில் வெற்றி, தோல்வி ருசி தெரியும். மயிலிறகு தடவின மாதிரி கூட வாழ்க்கை இருந்திருக்கு. ஆனா, இப்ப கிடைக்கிற வெற்றிக்கு நான் பொறுப்பே இல்லை. 20 வருஷத்திற்கு முன்னாடி இருந்த அதே பிரபுதேவா மாதிரிதான் துறுதுறுனு ஓடிக்கிட்டே இருக்கேன். எங்கேயும் நிற்கிறதில்லை. இப்ப கிடைத்திருக்கிற பிரமாண்ட வெற்றி, நிச்சயம் கடவுளோட பரிசு. தொட்டதெல்லாம் துலங்கினா வேற என்ன சொல்றது? இங்கே... ஒரு பெரிய பாசக்கடலில் நீந்திக்கிட்டே இருக்கேன். பாலிவுட்ல எல்லாருக்கும் என்னைத் தெரியும். என் நிறைகுறைகளோடபுரியும். சதா சினிமாதான். முன்னாடி டான்ஸ் மட்டும் முன்னாடி நிற்கும். இப்போ முழு சினிமா... அவ்வளவுதான். என்னோட சம்பளம் பத்தியெல்லாம் வெளியே பேச்சா கிடக்கு. அதெல்லாம் எனக்குப் பெரிசில்லை. நல்ல படம் உட்கார்ந்து பாக்கிறது மாதிரி தரணும். சந்தோஷமா வாழ்க்கையை முழுசா வாழணும். வேறெந்த குறிக்கோளும் கிடையாது.’’



‘‘சல்மான், அக்ஷய், அஜய், ஷாகித் இவங்க எல்லாம் எப்படிப் பழகுறாங்க?’’
‘‘அருமையான மனுஷங்க... சல்மான் எதையும் வெளிப்படையா காட்ட மாட்டார். ஆனால், மத்தவங்ககிட்ட நம்மளை பெருமையா சொல்லி சந்தோஷப்படுவார். திடீர்னு ‘வீட்டுக்கு சாப்பிட வாங்க’ன்னு அழைப்பு வரும். பார்த்தால் பெரிய விருந்தோட அன்பையும் கொட்டி நம்மை திக்குமுக்காட வைப்பார். கொஞ்சம் ஸ்டெப்ஸ் தகராறு பண்ணினால், ‘பிராக்டீஸ் கொடுத்து காலை ஒடிங்க பிரபு’ன்னு செல்லம் கொஞ்சுவார். அவ்வளவு பெரிய ஸ்டார்... ஆனால், அதோட சாயல் அவர்கிட்ட எங்கே தேடிப் பார்த்தாலும் தெரியாது. அக்ஷய் ரொம்ப கலகல... ‘நான் உங்களுக்கு 24 மணி நேரமும் தொடர்புக்குக் கிடைப்பேன். எப்ப வேண்டுமானாலும் போன் பண்ணுங்க’ன்னு சொல்வார். விளையாட்டுக்கு போன் பண்ணினா, ‘சொல்லுங்க... சொல்லுங்க...’ன்னு மலர்ந்து பேசுவார். கலகலப்பா பழகுற அதே நேரத்தில், அங்க தருகிற மரியாதை மனசில் இருந்து வரும். ‘குணத்தில் தங்கம்டா’ன்னு சொல்லுவோம் இல்லையா, அந்த ரகம்தான் சல்மானும், அக்ஷய்யும். ஷாகித் ஸ்டெப் கொடுத்தாலோ, சொல்லிக்கொடுத்ததில் பிடிச்சாலோ நேருக்கு நேர் கட்டிப்பிடிச்சு ‘சூப்பர் சார்’னு கொஞ்சுவார். நண்பர்களும், நம்ம மேல நிஜ அக்கறை கொண்ட உலகத்திலும் வாழ்ந்திட்டு இருக்கிறேன். போதும்தானே..!’’
‘‘அழகு தெய்வம் சோனாக்ஷி தொடர்ந்து உங்க படங்களில் இருக்காங்களே...’’

‘‘எஸ்... அவ்வளவு பெரிய ஃபேமிலி. அவங்க அப்பா சத்ருகன் மிகப்பெரிய நடிகர். மத்திய அமைச்சரா கூட இருந்திருக்கார். ஆனால், சோனாக்ஷி சொன்ன டயத்திற்கு வருவார். கொஞ்சம் கூட மிகையில்லாத நடிப்பில் பின்னுவார். ஒருநாள் முழுக்க கூட ஷாட் இல்லாமல் உட்கார வச்சு அனுப்பின சமயமெல்லாம் இருந்திருக்கு. ஒரு எரிச்சல், முறைப்புன்னு எதுவும் கிடையாது. ஏதாவது ஒரு ஷாட்டுக்காக அவர் அவசியம் தேவைப்படுவார்... ‘வந்திட்டுப் போயிடுங்களேன்’னு சொன்னால், அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்து ‘உள்ளேன் ஐயா’ங்கிற மாதிரி நிற்பார். அதோட அவர், ‘இண்டியன் ப்யூட்டி’ வகையில் சேருவார். என் கேரக்டர்களுக்கு அது இன்னும் அழகாயிருக்கும். படங்களை ரசிச்சு செய்கிற மனோபாவம் அவருடையது. அதனால் இரண்டு படங்களில் அவரே தொடர்ந்து வந்துட்டார். அவ்வளவுதான். மற்றபடி, நீங்க நிறைய யோசிக்க இதில் செய்திகள் இல்லை.’’



‘‘மூணாவது தலைமுறையா உங்க பசங்களும் சினிமா, டான்ஸ்க்கு வருவாங்களா?’’
‘‘எனக்குத் தெரியவேயில்லை. அப்படி எதுவும் அவங்க சொல்லிப் பார்த்ததும் இல்லை. அவ்வளவு பெரிய பிள்ளைகளாகவும் அவங்க இல்லை. இப்ப சொல்றது யூகம் மாதிரிதான் இருக்கும். அவங்களுக்கு வேண்டிய கல்வியை கொடுத்திட்டு பார்ப்போம். அவங்கவங்க விருப்பம் தெரியாம போயிட சான்ஸ் இல்லையே!’’
‘‘தனிமை எப்படியிருக்கு?’’

‘‘என்னமோ, 25 வருஷம் தனியா இருக்கிற மாதிரி கேட்கிறீங்களே... எல்லாமே கொஞ்ச காலம்தானே. பயங்கர வேலை... ஒருநாள் விடாம பரபரப்பு... அடுத்த படம், அடுத்த படம்னு போய்க்கிட்டு இருக்கிற வேகம். அதனால் தனிமை தெரியலை. கொஞ்சம் பசங்க நினைவு வந்தா, நமக்காகவே ஸ்கூல் லீவு வந்திருதே... பசங்க முகம் பார்த்திட்டா எல்லாம் பறந்து போயிடும்.’’
‘‘சரி... ஒரு கட்டத்திற்கு மேல் தனிமை சுடுமே...’’
‘‘சுட்டால் பார்த்துக்கலாம்!’’
‘‘பாதியில் முடிந்த திருமணத்திற்கும், விட்டுப்போன உறவுக்கும் வருந்துவீர்களா?’’
‘‘எந்தப் பாதிப்பும் இல்லைன்னு சொன்னால்... அது சும்மா. ஆனால், கடவுள் என்னை எதிலும் பாதிக்காமல் நகர்த்திக் கொண்டு போகிறார். அவர் கைப்பிடிச்சு கூட்டிப் போகிற வெளிச்சத்துக்கு நான் போய்க்கிட்டே இருக்கேன். அது
வரைக்கும் எனக்கு பயமில்லை!’’
- நா.கதிர்வேலன்