கமல் படம்... கார்த்தி காம்பினேஷன்... : காஜல் அகர்வால் கலகல





‘அழகுப் பதுமை காஜல் அகர்வாலுக்கு கண்களாகக் கடவீர்’ என்ற கடவுளின் கட்டளைக்குப் பணிந்து துள்ளிக்கொண்டிருக்கின்றன இரண்டு மீன்கள். படபடவென ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் வண்ணத்துப்பூச்சிகளாய் பறக்கின்றன வார்த்தைகள்.

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ரிலீஸுக்காகக் காத்திருக்கும் காஜலை சந்திக்கச் சென்றோம். ‘‘ஹாய்... எப்படி இருக்கீங்க?’’ என நலம் விசாரிக்கும் அழகிலேயே மயங்கிப்போன மனசை, நிதானம் திருப்பி கேள்விகளை அடுக்கினோம்...
‘‘கார்த்தி அழகுராஜா... நீங்க

அழகுராணியா?’’
‘‘அத நீங்கதானே சொல்லணும். பட் ஐ லைக் திஸ். அழகுராணிங்கற பட்டம் கிடைச்சா சந்தோஷமாதான் இருக்கும். ஏற்கனவே கார்த்தியோட ‘நான் மகான் அல்ல’ படத்தில் ஜோடியா நடிச்சிருக்கேன். மறுபடியும் அவரோட சேர்ந்து நடிச்சதில் சந்தோஷம். எங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் அழகா அமைஞ்சிருக்கு. செம ஜாலியான படம். படத்தில சித்ரா தேவி ப்ரியாங்கற கேரக்டரில் நடிச்சிருக்கேன். பேரு மாதிரியே படம் முழுக்கவும் நீளமா டிராவல் ஆகிற கனமான
கதாபாத்திரம். பொள்ளாச்சி பின்னணியில் குட்டி டவுனில்
நடக்கிற கதை!’’



‘‘காமெடி பண்ணியிருக்கீங்களா?’’
‘‘படமே செம காமெடிதான். ஷூட்டிங் ஸ்பாட் எந்த நேரமும் கலகலப்பா இருக்கும். இடியே விழுந்தாலும் டைரக்டர் ராஜேஷ் சார் டென்ஷன் ஆக மாட்டார். எப்போதுமே கூல் கூல். ஆனா, வேலையை கரெக்டா வாங்கிடுவார். அப்புறம் சந்தானம்... படத்துல மட்டுமில்ல... நிஜத்திலும் அவர் பண்ற சேட்டையில் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிடும். கார்த்தியில் ஆரம்பிச்சி எல்லாரையும் கலாய்ப்பார். பொம்பள கெட்டப்ல அவர் வர்ற சீன் பயங்கர காமெடியா இருக்கும். இப்போ ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இந்த யூனிட்டை மிஸ் பண்றோமேன்னுதான் கவலையா இருக்கு. நீங்க வேணா பாருங்க... படம் பெரிய ஹிட்டாகும்!’’

‘‘தமிழ் கத்துக்கறீங்களா?’’
‘‘தமிழ் பேசினா எனக்கு நல்லா புரியும். திருப்பி பதில் பேசத்தான் முடியாது. சின்ன சின்ன வார்த்தைகள் மட்டும் பேசுவேன். யூனிட்ல இருக்கறவங்க டயலாக் சொல்லித் தர்றதை கரெக்டா புரிஞ்சிக்கிட்டு பேசிடுறேன். மற்றபடி, தமிழ் டியூஷன் ஐடியாவெல்லாம் இல்லை. பிராக்டிகலாவே கத்துக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு தமிழ் தெரியாதுங்கறதுக்காகவே சந்தானம் ரொம்ப நக்கலடிப்பார். கூடிய சீக்கிரம் தமிழ் பேச கத்துக்கிட்டு, தமிழ்ப் படங்களுக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசணும்னு ஆசை இருக்கு!’’



‘‘ஹீரோ, கதை, மொழி எதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறீங்க?’’
‘‘கதைதான் முக்கியம். அப்புறம் ஹீரோ. மொழிக்கு முக்கியத்துவம் தர்றதில்லை. தெலுங்கு, தமிழ், இந்தி... எதுவா இருந்தாலும் கதை பிடிச்சிருந்தாதான் கால்ஷீட் தருவேன். இப்போ, விஜய் சாரோட மறுபடி ‘ஜில்லா’வில் நடிச்சிட்டு இருக்கேன். அதில் மதுரைப் பொண்ணா வர்றேன். முதல் தடவை ‘துப்பாக்கி’ல நடிச்சப்போ விஜய் எப்படி இருப்பாரோன்னு ஒரே தயக்கம். இப்போ அந்த ஃபீலிங்கே இல்லாம, ப்ரீயா நடிக்கிறேன். இந்தப் படம் முடிஞ்சதும் ரெண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கேன். உதயநிதி ஸ்டாலின் ஜோடியா ராஜேஷ் அசிஸ்டென்ட் ஜெகதீஷ் இயக்குற படத்திலும், ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்கிறேன்.’’

‘‘ ‘ஜில்லா’வுல மதுரைத் தமிழ் பேசணுமே... உதடு அசைக்கறதுக்காவது பயிற்சி வேண்டியிருக்குமே?’’
‘‘இப்ப அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. நல்லா சொல்லித் தர்றாங்க. அப்படியே ஒரு மாதிரியா சமாளிச்சிட்டேன்!’’

‘‘கமலோட அடுத்த படத்தில் நடிக்கக் கேட்டாங்களாமே?’’
‘‘கமல் படத்திலயா? எங்கிட்ட யாரும் இது பற்றி பேசலயே. அது தவறான தகவலா இருக்கும். கால்ஷீட் கேட்டிருந்தால், வேண்டாம்னா சொல்லியிருப்பேன்? ‘மஹதீரா’வுக்குப் பிறகு அந்த மாதிரி இன்னொரு படத்தில நடிக்கணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். எனக்கும் ஒவ்வொரு படத்திலும் டூயட் ஆடி போரடிக்குது. ஹீரோயினுக்கு ஸ்டிராங் ரோல் இருக்கற மாதிரி கதையில் நடிக்கணும்னு ஆசை. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வும் எனக்கு முக்கியத்துவமுள்ள மனசுக்குப் பிடிச்ச கேரக்டர்தான்!’’



‘‘உங்க தங்கச்சி நிஷா அகர்வால் பாலிவுட் வரைக்கும் போயிட்டாங்களே..?’’
‘‘ஆமா! இங்கதான் அவளுக்கு சரியான பிரேக் கிடைக்கல. சொல்லப் போனா, அவ என்னைவிட பிரமாதமான அழகி. பாலிவுட்ல அவ நிச்சயம் ஒரு ரவுண்டு வருவா!’’

‘‘உங்க பிளஸ் பாயின்ட்?’’
‘‘ஒரு விஷயத்தை டக்குன்னு கேட்ச் பண்ணிக்கறதுதான் என்னோட பிளஸ் பாயின்ட். ரசிகர்கள் என்னோட பிளஸ் பாயின்ட்டா நினைக்கிறது கண்கள்!’’

‘‘தமிழ், தெலுங்கு திரையுலகில் நீங்க எந்த இடத்தில் இருக்கீங்க?’’
‘‘நம்பர் விளையாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான்தான் நம்பர் ஒன் என்று ரசிகர்கள் நினைச்சா சந்தோஷம்தான். நல்ல படங்களா பண்ணணும்... ரசிகர்கள் கோயில் கட்டுற அளவுக்கு இல்லைன்னாலும், அவங்க மனசில் நிலைச்சி நிற்கணும்ங்கிற ஆசை மட்டும் இருக்கு!’’
- அமலன்