ஐ லவ்யூ குடும்பம்





‘‘ஹலோ... நான் ஐ லவ் யூ பேசறேன்’’ - 38 வருடமாக இப்படிச் சொல்லிப் பழக்கப்பட்ட குரல்... எந்தத் தடுமாற்றமும் இன்றி ஒலிக்கிறது. நமக்குத்தான் அதைத் திருப்பிச் சொல்லக்கூட குலை நடுங்குகிறது.
‘‘நிஜமாவா மேடம்... உங்க பேரே ‘அது’... அதாவது, ‘ஐ லவ் யூ’வா?’’

‘‘அட, என்னங்க இதுக்கே ஆச்சரியப்படுறீங்க... என் தங்கச்சி பேரு யூ லவ் மீ, கடைசி தங்கச்சி, ‘ஸ்வீட் லவ்’ நம்புவீங்களா?’’
எந்த நேரமும் ‘பிம்பிலிக்கா பிலாபி’ என்று இந்தக் குரல் நம்மைக் கலாய்த்து பல்பு கொடுக்கக் கூடும் என்று பயம் நமக்கு. அட்ரஸ் குறித்து, அடையாறு வரை போய், போனில் பேசிய ‘ஐ லவ் யூ’வை நேரில் சந்தித்து, ஒரு ‘ஹாய்’ சொன்ன பிறகுதான் அந்தப் பயம் நீங்கியது!
‘‘வாங்க... உங்களுக்காகத்தான் யூ லவ் மீ, ஸ்வீட் லவ் எல்லாரையும் இங்கேயே வரச் சொல்லிட்டேன். மீட் தெம்’’ என்று அறிமுகப்படுத்தி வைக்கிறார் ஐ லவ் யூ. பெயரைத் தாண்டியும் இந்த ஐ லவ் யூ குடும்பத்தைப் பற்றிச் சொல்ல நிறைய... இல்லையில்லை... ஒரே ஒரு வார்த்தை இருக்கிறது. அது, இசை!

‘‘எங்க அப்பா பெரிய இசைப்பிரியர். ‘நல்ல இசையில் அன்பு வழியும். இந்த உலகத்துக்கே அச்சாணி அன்புதான்’னு அடிக்கடி சொல்வார். பொதுவா நாம கடவுள் பேரைத்தானே குழந்தைகளுக்கு வைக்கிறோம். எங்கப்பா அன்பைத்தான் கடவுளா பார்த்திருக்கார். அதனாலதான் இந்தப் பேர். எந்தக் குழந்தை பிறந்தாலும் இதுதான் பேர்னு முன்னாடியே முடிவு பண்ணிட்டாராம். நல்லவேளை நாங்க பொண்ணுங்களா பொறந்தோம். பையனா இருந்திருந்தா பேரைச் சொல்லும்போதெல்லாம் ஈவ் டீஸிங் கேஸாயிருக்கும்’’ - ஐ லவ் யூ சொல்ல, சகோதரிகள் மூவரும் சிரிக்கிறார்கள்.
‘‘அப்பா எங்க மூணு பேரையுமே இசை ஊட்டி வளர்த்தார். கிண்டர் கார்டன் வயசுலயே வெஸ்டர்ன் கிளாஸிக் கிளாஸ்ல கொண்டு போய் விட்டார். கிடார், பியானோ, வயலின்னு எல்லாத்தையும் அறிமுகப்படுத்தினார். கால ஓட்டம் அதை மாத்திடுச்சு. நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். என் தங்கை ஸ்வீட் லவ் மாடலிங் பண்ணினா. பட், அக்கா ஐ லவ் யூ மட்டும் இசையை விட்டு அங்கே இங்கே அசரல. இப்ப தமிழ்நாட்டுல ரொம்ப முக்கியமான கிடாரிஸ்ட்கள்ல அக்காவும் ஒருத்தி’’ - என்கிறார் யூ லவ் மி பெருமையாக.



திருமணத்துக்குப் பிறகு மீண்டும் இசை இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது. ஆம், தற்போது சென்னை அடையாறில் ‘3ஙிs’ என்ற இசைப்பள்ளியை நடத்தி வருகிறார்கள் இந்தச் சகோதரிகள்.
‘‘எங்களுக்கு ஐ லவ் யூ, யூ லவ் மீ, ஸ்வீட் லவ்னு சென்ஸிட்டிவான இந்த வார்த்தைகள் எல்லாம் காமெடியாயிடுச்சு. எங்ககிட்ட நிஜமா ஐ லவ் யூ எப்படிச் சொல்றதுனு பசங்கதான் திணறிப் போயிருப்பாங்கனு நினைக்கிறேன். ஆனா, கடவுளோட செயலா எங்க மூணு பேருக்குமே லவ் மேரேஜ்தான்’’ என்று அவர் சொல்லும்போதே, ‘‘இந்த ஐ லவ் யூ கிட்ட ஐ லவ் யூ சொல்லி மனைவியாக்கிக்கிட்ட துரதிர்ஷ்டசாலி நான்தான்’’ என அந்தச் சகோதரிகளின் கலகலப்பில் கலக்கிறார் பாபி சங்கர். அனைவரும் அறிந்த சங்கரின் (சங்கர் - கணேஷ்) மகன் இவர்.

‘‘லவ் மேட்டரை விடுங்க... ஸ்கூல்லயும் காலேஜ்லயும் என்னா காமெடி நடக்கும்ங்கறீங்க. ஆக்சுவலா எங்க பேரு வாக்கியமா இல்லாம ஒரே வார்த்தையா இருக்கணும்ங்கிறதுக்காக, லீறீணீuஹ்u, ஹ்uறீணீuனீமீ, sநீலீஷ்மீமீtறீணீuனுதான் அப்பா ஸ்பெல்லிங் குடுத்திருந்தார். அதைப் பார்த்ததும் ஏதோ ஆங்கிலோ இண்டியன் போலன்னு உற்காகமா படிப்பாங்க. உச்சரிச்சுப் பார்த்துட்டு கலவரமாவாங்க பாருங்க... ‘உங்க பேரு... ஐ...’ அதுக்கு மேல யாரும் சொன்னதில்ல. ஹாஸ்பிடல் கம்பவுண்டர்ல இருந்து சேவிங்ஸ் ப்ளான் சொல்ற டெலி காலர் வரைக்கும் பேரைப் பார்த்துட்டு பம்முவாங்க.

ஒரு தடவை, எங்க மூணு பேருக்கும் ஃப்ரெண்ட் ஒருத்தி பார்சல் அனுப்பினா. அட்ரஸ் கரெக்டா இருந்ததுனால போஸ்ட்மேன் வந்துட்டார். ‘சே, காலம் கெட்டுப் போச்சு... இந்தக் காலத்துப் பசங்க உள்ள எழுத வேண்டியதை எல்லாம் வெளிய எழுதி வச்சிருக்காங்க. ஆனா, பேரை எழுத மாட்டேன்றானுங்க’னு கரிச்சிக் கொட்டிக்கிட்டே பார்சலைக் கொடுத்தார். எங்க அப்பா அதை சிரிக்கிக்கிட்டே வாங்கினாரா, ‘உங்க பொண்ணுங்களுக்குத்தான் சார் வந்திருக்கு... சிரிக்கிறீங்க!’ன்னு தலையில அடிச்சிக்கிட்டே போனார். இதெல்லாம் சும்மா சாம்பிள்தான். இன்னும் வாழ்க்கை முழுக்க எவ்வளவோ அனுபவங்கள்.

ஆனாலும், எங்க பேரை மாத்திக்கணும்னோ ஷார்ட்டா சொல்லிக்கணும்னோ எங்களுக்குத் தோணல. ஏன்னா, இந்தப் பேரு நல்ல பேரு சார்!’’ என நமக்கு விடை தருகிறார் ஐ லவ் யூ. நல்ல பேரு இல்லைன்னு யாராவது சொல்ல முடியுமா?
- நவநீதன்
படங்கள்: புதூர் சரவணன்