கர்ப்பிணி : கர்ப்பிணி

மேனேஜர் மோகன் முப்பத்தாறு வயது பிரம்மச்சாரி. கடுகடு பேர்வழியும் கூட! ‘‘ச்சே... என்ன மனுஷன் இவர்? ஒரு நாளைக்கு பத்து முறை ‘நந்தினி... நந்தினி...’ன்னு அக்கவுன்டன்ட்டை அவர் கூப்பிடறதும், அவ பாவம் வயித்தைத் தூக்கிக்கிட்டு இந்தக் கோடிலேர்ந்து அந்தக் கோடிக்கு முடியாம நடந்து போறதும்... பார்க்கவே பரிதாபமா இருக்கு. கர்ப்பிணிங்கற கனிவு வேணாம்?’’ என்றாள் டெஸ்பாட்ச் கிளார்க் கோமதி. ‘‘அத விடு... ‘ட்யூ டேட்’ நெருங்கிடுச்சின்னு லீவு கேட்டதுக்கும் மறுத்துட்டாராம். எல்லாம் பொறாமை. இருபத்திரண்டு வயசுல கல்யாணமாகி, பிள்ளையும் பெத்துக்கப் போறாள்னா, ஒண்டிக்கட்டைக்கு கடுப்பாத்தானே இருக்கும்!’’ - கரித்துக் கொட்டினாள் டைப்பிஸ்ட் கமலா. வீட்டில் தன்னை ராணி போல பார்த்துக் கொள்ளும் கணவன் கிடைத்த சந்தோஷத்தில் நந்தினி இதைப் பெரிதுபடுத்தவில்லை. மேனேஜரின் வலக்கரம் கதிர்வேல் மட்டும் அவர் தனித்திருந்தபோது மெல்லச் சொன்னான். ‘‘நந்தினி பாவம் சார்...’’ ‘‘இதோ பார் கதிர்.... என் அம்மாவ நான் இழந்ததே என் தம்பி பிரசவத்துலதான். எங்கப்பா, அம்மாவ உள்ளங்கையில தாங்குவார். நடக்கவே விட மாட்டார். கடைசில பிரசவ சிக்கலுக்கு அதுதான் காரணம்னு டாக்டர் சொல்லிட்டாரு. அந்த நெலம நந்தினிக்கு வரக்கூடாது’’ - என்றவரின் கண்கள் கலங்கியிருந்தன.
|