முதல் நினைவு... முதல் கனவு...
எப்போதாவது உங்கள் முதல் நினைவு என்னவென்று யோசித்திருக்கிறீர்களா? காலத்தின் ஒவ்வொரு திரையாக விலக்கி விலக்கிச் செல்லும்போது, ‘இதற்கு மேல் போக இடமில்லை’ என்று நினைவின் ஒரு சுவர் முன்னால் வந்து நின்றுவிடுவீர்கள். அந்தச் சுவரில் உங்கள் பால்யத்தின் ஒரு அழியாச் சித்திரம் ஒன்று வரையப்பட்டிருக்கும். ஒரு கணம் அதன்முன் திகைத்துப் போவீர்கள். ஆனால் அதுதான் நமது முதல் நினைவு என்று எப்படி நம்புவது? நமது நினைவுகள் எப்போது உருவாகின்றன என்பதைப் பற்றிய துல்லியமான கணக்குகள் ஏதும் இருக்கிறதா என்ன? ஆனாலும் உங்கள் ஞாபகங்கள் தொடங்கும் இடத்தை ஏதோ ஒரு புள்ளியில் மங்கலாகவேனும் தொட்டுணரத்தான் செய்வீர்கள்.
எனது முதல் நினைவுகளாக எனக்கு மூன்று காட்சிகள்தான் எப்போதும் நினைவுக்கு வருகின்றன. அநேகமாக அது ஒரே நாளில் நடந்தவையாகவும் இருக்கலாம். நான் ஒரு பெரிய யானை முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். எவ்வளவு அண்ணாந்து பார்த்தும் அதை என்னால் முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அந்த யானைக்கு ஒரு பக்கெட்டிலிருந்து ஒரு ஆள் இட்லிகளை எடுத்து கொடுத்துக்கொண்டே இருக்கிறான். ஒரு யானை எவ்வளவு இட்லி சாப்பிடும் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
இன்னொரு காட்சியில், நான் ஒரு குதிரை வண்டியில் போய்க்கொண்டிருக்கிறேன். அந்தக் குதிரையின் பொன்னிறக் கழுத்து முடிகள் காற்றில் அலைந்துகொண்டே இருக்கின்றன. அதன் கண்களில் பச்சை நிறப் பட்டை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. என் அம்மா என் தலையைத் தடவியபடியே இன்னொரு கையால் குதிரை வண்டியின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.
வேறொரு காட்சியில், ஒரு படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறேன். சுற்றிலும் வயர்கள். திடீரென என் காலில் ஒரு சிறிய கூச்சம். பிறகு அது தாங்கிக் கொள்ளமுடியாத மின் அலைகளாக மாறுகிறது. நான் தாங்க முடியாமல் அழுகிறேன். என்னை யாரோ இறுக்கிப் பிடித்துக்கொள்கிறார்கள். இந்தக் காட்சிகள் என்னை எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
பிறிதொரு காலத்தில் என் அம்மாவிடம் இதெல்லாம் எனக்கு எப்போது நடந்தன என்று கேட்டேன். ‘‘அது உன்னை மதுரைக்கு ‘கரன்ட்’ வைப்பதற்காக சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற நாளாக இருக்கலாம்’’ என்றாள். எனது நினைவின் முதல் நாள் என்பது சிகிச்சையின் ஒரு நாளாக மனதில் தங்கிவிட்டது. இப்படித்தான் நான் வாதைகளை எழுதுகிற ஒருவனாக மாறினேனா?
முதல் நினைவைக் கண்டுபிடிப்பது போலவே வாழ்வில் பல்வேறு முதல் சந்தர்ப்பங்களை நினைவு கூர்வது ஒரு விளையாட்டு. சில சமயம் அது நம்மை மலரச் செய்கிறது. சில சமயம் நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நம்மை மனமுடையச் செய்கிறது.
உங்களைப் பள்ளியில் விட்ட முதல் நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் எவ்வளவு குழப்பத்துடனும் பயத்துடனும் அந்த வகுப்பறையில் நின்றுகொண்டிருந்தீர்கள்? ‘எப்போது வீட்டுக்குப் போவோம்’ என்பதைத் தவிர உங்களுக்கு வேறு நினைவுகள் ஏதும் இருந்ததா? அந்த ஒரு நாள் ஒரு யுகம் போலக் கழியவில்லையா? ஒரு குழந்தை இந்த உலகத்தை தனியாக எதிர்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் அது. அது நமது ஆளுமையில் ஒரு ஆறாத காயத்தை ஏற்படுத்துகிறது. பிறகு வாழ்நாளெல்லாம் எங்கே போனாலும் ‘எப்போது வீட்டுக்குப் போவது’ என்பதைப் பற்றிய நினைப்பே சூழும்.
நீங்கள் முதன்முதலாக தண்டிக்கப்பட்ட நாள் நினைவிருக்கிறதா? நம் வாழ்வில் நிறையக் கிடைப்பது தண்டனைகளே என்பதால், இதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமானது. ஆனால் உங்கள் ரணங்களை பிரியத்தோடு வருடிக்கொண்டே பின்னோக்கி நடந்து செல்லுங்கள். உங்கள் முதல் தண்டனையின் வடுவை நீங்கள் வந்தடைவீர்கள். அந்த தண்டனையின் முன் நீங்கள் எவ்வளவு நிராயுதபாணியாய் நின்றுகொண்டிருந்தீர்கள் என்று நினைவிருக்கிறதா? அப்போது உங்கள் கண்களை இறுக மூடிக் கொண்டீர்கள். எனது முதல் தண்டனைக் கருவியும் தண்டனையாளனின் முகமும் துல்லியமாக நினைவிருக்கிறது. நான் கையில் சிக்கிக்கொண்ட ஒரு சிறிய பறவைபோல அப்போது படபடத்துக்கொண்டிருந்தேன். எப்போதும் நமது முதல் தண்டனைகள் இந்த உலகிலேயே நமது மிகவும் அன்பிற்குரியவர்கள் கைகளாலேதான் கிடைக்கிறது!
முதன்முதலாக நீங்கள் இன்னொரு உடலை அறிந்த சந்தர்ப்பத்தை மறந்துவிடவே விரும்புவீர்கள். ஆனால் அது உங்கள்மீது அழுத்தமான ஒரு நிழல்போல படிந்திருக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது அச்சமும் குழப்பமும் அருவருப்பும் மிக்கதாகத்தான் இருந்திருக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீங்கள் யாராலோ பயன்படுத்தப்பட்டிருப்பீர்கள், அல்லது யாரையோ பயன்படுத்தியிருப்பீர்கள். நமது பண்பாட்டில் காமம் என்பதும் மனித உடல் என்பதும் வேட்டையின் ஒரு பகுதியாகத்தான் நமக்கு பரிச்சயமாகிறது.
நீங்கள் முதன்முதலாக எப்பொழுது காதலித்தீர்கள் அல்லது காதலிக்கப்பட்டீர்கள்? நிறைய பேருக்கு அப்படி ஒன்று வாழ்நாள் முழுக்க நடந்ததே இல்லை. அவர்கள் திரைப்படங்களில் டைனோசரைப் பார்ப்பது போல, வாழ்வில் காதலை திகைப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் முதல் காதலின் டைனோசரில் சவாரி செய்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். நீங்கள் இப்பொழுது ஒரு காதலைத் திட்டமிடுவது போல, அல்லது எதிர்கொள்வது போல, அப்பொழுது உங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை இல்லையா? ஒரு சாகசத்திற்கு அல்லது அற்புதத்திற்கு ஒப்புக்கொடுப்பது போல உங்களை ஒப்புக்கொடுத்தீர்கள். ஒவ்வொரு நாளும் எதையேனும் ஒன்றைப் பணயம் வைத்தீர்கள். பிறகு சீக்கிரமே ஒரு தந்திரமுள்ள வியாபாரியாக மாறினீர்கள். ஒரு காதலை எப்படி விற்க வேண்டும், எப்படி வாங்கவேண்டும் என்பதையெல்லாம் சுலபமாகக் கற்றுக்கொண்டு விட்டீர்கள்.
உங்கள் முதல் அவமானம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதுவரை வாழ்வில் அடைந்த அனைத்துமே ஒன்றுமே இல்லை என்று உங்களுக்கு நினைவூட்டிய நாள் அது. தலையைக் குனிந்துகொண்டு நின்றீர்கள். எதை மறக்க விரும்புகிறீர்களோ, எதை மறுக்க விரும்புகிறீர்களோ, அதன் பெயரால் கன்னத்தில் அறையப்படுகிறீர்கள். வெளியே போகும்படி சுட்டிக் காட்டப்பட்ட கதவை ஒருபோதும் வாழ்நாளில் கடக்கவே முடியாது என்று உணர்ந்த தருணம் அது.
நீங்கள் முதன்முதலாக காணாமல் போன நாள் எது? ஒரு கூட்டத்தில் நீங்கள் பற்றியிருந்த கைகளைத் தவற விட்டிருப்பீர்கள். உங்களுக்கு வீட்டின் பாதை தெரியாது. பார்க்கிற ஒவ்வொரு முகத்தையும் கண்டு ஏங்கிப் போயிருப்பீர்கள். வாழ்வில் நம்பிக்கை என்றால் என்னவென்று, பயம் என்றால் என்னவென்று, தனிமை என்றால் என்னவென்று நீங்கள் முதன்முதலாகப் புரிந்துகொண்ட நாள் அது. ஒருபோதும் காணாமல் போகாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு வீட்டிற்குப் போவது என்றால் என்னவென்று ஒருபோதும் தெரியாது.

நீங்கள் ஒருவரை முதன்முதலாகப் பறிகொடுத்த தினம் நினைவிருக்கிறதா? ‘முத்தைப் பறிகொடுத்த சிப்பியின் ஓலம் கடற்கரையெங்கும்’ என்று எழுதினான் ஆத்மாநாம். அந்த ஓலத்தை உங்கள் குரலில் நீங்கள் முதன்முதலாகக் கேட்டபோது எப்படி உறைந்து போனீர்கள்? ‘பறிகொடுப்பதும் பரிதவிப்பதும் வாழ்வின் அன்றாடப் புனித சடங்குகளில் ஒன்று’ என்று புரிந்துகொள்ளும் காலம் பிறகு வந்தது.
முதல் துரோகத்தைப் பார்த்த அன்று நீங்கள் என்ன நிற ஆடை அணிந்திருந்தீர்கள் என்று நினைவிருக்கிறதா? முதல் வேலை நாள், முதல் புகழை அடைந்த நாள், முதன்முதலாக ஒரு சிசு உங்கள் பக்கத்தில் கிடந்த நாள், முதன்முதலாக கடலைப் பார்த்த நாள், முதன்முதலாக தற்கொலைக்குத் திட்டமிட்ட நாள் என்று எத்தனை முதல் தினங்கள்...
ஒவ்வொரு முதல் தினத்திலும் மறக்க முடியாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதை நாம் எதிர்கொள்ளும்போது நமது மனதின் களங்கமற்ற தூய்மை ததும்புகிறது. நிராயுதபாணியாய் ஒன்றை எதிர்கொள்ளும் தத்தளிப்பு நம்மை ஆட்கொள்கிறது. அப்படி ஒன்று இதற்கு முன்பு இந்தப் பிரபஞ்சத்தில் யாருக்குமே நிகழவில்லை என்று அப்போது அவ்வளவு குழந்தைமையுடன் நம்பினோம். பிறகு ஒவ்வொரு முறையும் அந்தக் குழந்தைமையை நிரந்தரமாக இழக்கிறோம்.
(பேசலாம்...)
மனுஷ்ய புத்திரன் பதில்கள்
வெற்றிலையில் மை தடவி குறி சொல்லும் ஜோசியத்தை இன்னும் நிறையப் பேர் நம்புகிறார்களே?
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
நமது விரல் நகத்தில் தடவும் மையினால் எவ்வளவோ காலமாய் மோசம் போகும் நாம், வெற்றிலை மையினால் ஒன்றும் ஆகிவிடமாட்டோம்.
உண்மையை எந்த இடத்தில் பேச வேண்டும்? எந்த இடத்தில் பேசக் கூடாது?
- எஸ்.பி.பாபு, முள்ளிக்காடு.
பொய்கள் அவசியமற்ற இடத்தில் மட்டுமே உண்மைகள் பேசப்படுகின்றன!
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க என்ன வழி?
- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.
நல்லவனாக நடிப்பதுதான் ஒரே வழி.
இரண்டரைக் கோடி இந்தியர்களுக்கு மத்திய அரசு செல்போன் வழங்கப் போகிறதாமே?
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
வறுமையின் காரணமாக ஒருவர் இந்த உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சி நடந்திருக்கும் உலகில் செல்போன் ஒருவரது அடிப்படை உரிமை.
(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை -600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள். email:
editor kungumam.co.in)
நெஞ்சில் நின்ற வரிகள்மணிரத்னம் பாடல் காட்சிகளைப் படமாக்கும் விதம் அந்தப் பாடல்களுக்கு மட்டுமல்ல... அந்தப் படத்திற்கே ஒரு தனித்த அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. பொதுவாக, சில ஆண்டுகள் கழிந்த பிறகு வரிகளும் இசையும் குரலும் நம்மோடு இருக்கும். ஆனால் காட்சிகள் பல்லிளித்துக்கொண்டு சாயம் போய் எங்கோ பின்தங்கிவிடும். அதை வெற்றி கரமாக முறியடித்தவர் மணிரத்னம். இன்றும் அவர் காட்சிப்படுத்தியிருக்கும் பட பாடல்கள் தம் புதுமையை இழப்பதில்லை.
‘ராவணன்’ படத்தில் பலவந்தத்தால் ஒரு பெண்ணின் காதலை அடைய விரும்பும் ஒருவனின் தவிப்பையும், அவள் முன்னால் அவனது பரிதாபகரமான தோல்வியையும் மிக உக்கிரமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலில் பல ஃப்ரேம்கள் ஒரு துல்லியமான ஓவியம்போல தீட்டப்பட்டுள்ளன...
இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ளே தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மரக் காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்
என அணையாத காமத்தின் நெருப்பைச் சொல்லும் வரிகள் பின்னர்,
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
என்று காட்டை எரிக்கும் நெருப்பாய் வளர்கின்றன.
எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்
பூ.கொ.சரவணன் பல்வேறு துறை சார்ந்த சர்வதேச ஆளுமைகளின் பிறந்த தினத்தில் அவர்களைப் பற்றிய சிறந்த குறிப்புகளை எழுதுவார். அவரது பொதுவான ஃபேஸ்புக் பதிவுகளும் சுவாரசியமானவை...
‘‘ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரியும் ஒரு தனிக்கதை சொல்லும். நிறையப் பேருக்கு பிறந்தநாள் மற்றும் மதிப்பெண்கள் பின்னாடி ஒட்டிக்கொண்டு இருக்கும். சிலருக்கு ஊர் பின்னாடி ‘உள்ளேன் அய்யா!’ சொல்லும். சிலர் அம்மா, அப்பா இருவரின் பெயரில் ஏதேனும் ஒன்றை வைத்துக்கொள்வார்கள். என் கல்லூரி சகாக்கள் நிறையப் பேர் கல்லூரியின் பெயரை முகவரியில் வைத்துக்கொண்டு திரிகிறார்கள். சிலர் ஹிட்லர் என்றும், சாஃப்ட் என்றும், வைரஸ் என்றும், செல்லப்பெயர் சேர்த்தும் திரிகிறார்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரி ஒரு பிரபலத்தின் பெயரின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து உருவாக்கிக்கொண்டு அமைந்த பெயர். ஒரு பெண்ணின் பெயராக மாறிவிடவே, ஒரு ‘N’ சேர்த்து ஆண் பெயர் போல ஆக்கிக்கொண்டேன். சிலரின் மின்னஞ்சல் முகவரிகள், அவர்களின் மனதை அப்படியே படம்பிடித்துக் காட்டும். ‘‘மாத்திக்கலாம் இல்ல?’’ என்று கேட்டால், ‘‘இதுவே அழகாத்தானே இருக்கு’’ என்று கண் சிமிட்டி நகர்வார்கள். பாஸ்வேர்ட்கள் இன்னமும் அழகான ரகசியங்களைக் காட்டும். பெரும்பாலும் சொல்லாத காதல்கள்தான் அங்கே மையமாக இருக்கின்றன.‘
https://www.facebook.com/pu.ko.saravanan?hc_loca tion=stream