கல்யாணம் ஆகாமலேயே டைவர்ஸ் : விபரீத பிரேக் அப் கலாசாரம்





பிரேக்அப்...
இன்றைய இளைஞர்களிடம் அதிகம் புழங்கும் வார்த்தையைக் கணக்கெடுத்தால் அநேகமாக இது முதலிடம் பிடிக்கலாம். ‘மச்சி, இப்பல்லாம் உன் ஃபிகர் கால் வர்றதேயில்ல..? பிரேக்அப்பா?’, ‘டேய், அந்தப் பொண்ணுக்கு பிரேக்அப் ஆயிடுச்சாம். அப்ளை பண்ணுவோமா?’, ‘ப்ச்... நேத்து என் லவ்வு புட்டுக்கிச்சி மச்சான்... நாளைக்கு இ.சி.ஆர் போவோமா? ஒரு பிரேக்அப் பார்ட்டி!’
-இளைஞர் உலகமெங்கும் பாசியாய் பரவிப் படர்ந்திருக்கிறது பிரேக்அப் கலாசாரம்! நெட்டில் தேடினால் பிரேக்அப் கவிதை, பிரேக்அப் எஸ்.எம்.எஸ் என கொட்டுகிறது. ஒவ்வொரு டாஸ்மாக் பாரிலும் ஏதோ ஒரு பிரேக்அப் கதை வீல் சிப்ஸாய் விழுங்கி செரிக்கப்படுகிறது.
‘‘காதலர்களுக்குள்ள ஊடல், சங்க காலத்துல இருந்து தொடருற சாதாரண மேட்டர்... அதானே இதுவும்?’’ என்றால், சாரி! இது கொஞ்சம் சீரியஸ்...

‘‘இது கிட்டத்தட்ட டைவர்ஸ் மாதிரிதான் சார்... அதுக்கப்புறம் அவங்களுக்குள்ள எதுவும் இல்ல. சமாதானம் பேச ரெண்டு பேருக்குமே இஷ்டம் இல்ல. சுருக்கமா சொன்னா, ‘போரடிச்சுருச்சு’!’’ - ஜஸ்ட் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் வினோத்தின் ஸ்டேட்மென்ட் இது.
‘‘என் கிளாஸ்மேட் ஒருத்தியை லவ் பண்ணேன். பொண்ணுங்க ஆரம்பத்துல காட்டுறது எல்லாமே சீனு. பழகப் பழகத்தான் கேரக்டர் தெரியும். சும்மா அவங்க சொல்றதுக்கு எல்லாம்  தலையாட்ட முடியுமா? நாம எதிர்த்து ஒரு கேள்வி கேட்டா, உடனே பிரேக்அப்னு ஓடிருவாளுங்க. இது ஆக்சுவலா பொண்ணுங்க ஆயுதம். எனக்கு இப்பவே ரெண்டு பிரேக்அப். இனிமே பொண்ணுங்களே வேணாம்... ஒழுங்கா படிச்சி லைஃபை பார்க்கணும்னு முடிவெடுத்திருக்கேன்!’’ - கேஷுவலாகப் பேசும் வினோத், போட்டோ தரவும் ரெடி. சம்பந்தப்பட்ட பெண்களைக் கருதி நாம்தான் தவிர்க்க வேண்டியதாயிற்று.



‘‘சிட்டி லைஃப்ல இப்ப லவ்வுங்கறதே சீரியஸான விஷயமா இல்ல. ஜாலியா, கலாட்டாவா லவ் பண்றாங்க. அது அப்படியே கன்டினியூ ஆனா, கல்யாணம் கூட பண்ணிக்கிறாங்க. சரியா வரலைன்னா மியூச்சுவலா ஒதுங்கிக்கறாங்க. ரெண்டு பேரும் இந்த கல்ச்சரைப் புரிஞ்சுக்கும்போது இது யாரையுமே பாதிக்கறதில்ல. இன்ஃபேக்ட், கட்டிக்கிட்டு அவஸ்தைப்படுறதை விட இது மேல். ஆனா, ஒரு கிராமத்துப் பையனோ பொண்ணோ இங்க வந்து, சீரியஸா அன்பு வச்சி, முதல் முதலா பிரேக்அப்பை சந்திக்கும்போதுதான் தடுமாறிடறாங்க. நிறைய தற்கொலைகளுக்கு இது மறைமுகக் காரணம்’’ என குண்டைத் தூக்கிப் போடுகிறார் கால் சென்டர் கேம்பஸில் உள்ள சீனியர் மெம்பர் ஒருவர்.

‘‘இப்ப லவ்வுன்னா அது ‘எல்லாமே’தான். ஒரே ஆபீஸ், நைட் ஷிப்ட், வெளியூர் - வெளிநாட்டு டூர், காலேஜ்ல ஐ.வி... இப்படி நெருங்கறதுக்கு ஏராளமான வாய்ப்புகள் வரும்போது, கிட்டத்தட்ட தம்பதிகள் போல ஆகிடறாங்க. கணவன் மனைவிக்கான நெருக்கம் வந்துடும் போது, அதே மாதிரியான கோபதாபமும் வரத்தானே செய்யும்? கல்யாணம் ஆச்சுன்னா, நம்ம குடும்பம்னு ஒரு கமிட்மென்ட் இருக்கும். ஆகலையே! சிம்பிளா ‘நோ அஃபென்ஸ்’னு ஒரே எஸ்.எம்.எஸ்ல பிரிஞ்சிடுறாங்க’’ என ஷாக் கொடுக்கிறார் அவர்.

‘‘ ‘எல்லாமே’னு சொல்றீங்க பாருங்க... அங்கதான் இருக்கு பிரச்னையே. கிராமம்னு இல்ல... சிட்டி பொண்ணுக்கும் சிட்டி பையனுக்கும் கூட பிரேக்அப்ங்கறது பெரிய வலிதான். தொடாம லவ் பண்ணின ‘காதலுக்கு மரியாதை’ காலத்துல, ஒரு பொண்ணு பையனை விட்டுப் பிரிஞ்சிட்டானா, ‘விடு மச்சி... உன் மனசை அவ புரிஞ்சிக்கல’ன்னு ஆறுதல் சொல்வாங்க. ஆனா, இப்ப, இவங்க எங்கெங்க போனாங்க... என்னென்ன பண்ணினாங்கனு எல்லாருக்கும் தெரியும். அதுக்கு அப்புறம் ஒரு பொண்ணு விட்டுட்டுப் போயிட்டாள்னா, பையனை என்னன்னு சொல்வாங்க? புரியுதா..? இது பொண்டாட்டி ஓடிப் போற மாதிரி மேட்டர்! அதனாலதான் ஒரு பிரேக்அப்பைப் பார்த்தவன், அடுத்து இம்மீடியட்டா இன்னொரு பொண்ணை லவ் பண்ணியே ஆகணும்... இல்லேன்னா அவமானம்னு ஒரு பிரஷர் வருது. பொண்ணுக்கும் அதே பிரஷர். அந்தப் பிரஷர்ல நிறைய தப்பு நடந்துடுது’’ - அனுபவம் தவழப் பேசும் நரேஷ், ஒரு பி.பி.ஓ இளைஞர்.

இளம் பருவத்தினருக்கான உளவியல் ஆலோசகரான டாக்டர் ராஜ்மோகனிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சென்றோம். இதே பிரேக்அப் மனச்சுமையோடு தன்னிடம் வந்த கேஸ் ஹிஸ்ட ரிகளின் அடிப் படையில் பேசினார் அவர்...
‘‘சில கால மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. ஆண்களும் பெண்களும் இன்று சம எண்ணிக்கையில் கலந்து கலந்து பழகுகிறார்கள். எனவே, ஆணோ பெண் னோ காதலிக்கும் வாய்ப்பும் காதலிக்கப்படும் வாய்ப்பும் மிக மிக அதிகம்.

பல லட்சம் கொட்டி, வைரம் வாங்கும்போதுதான் நீங்கள் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பீர்கள். இரண்டு ரூபாய்க்கு கண்ணாடிக் கல் வாங்கும்போது கையில் சிக்கியதை எடுத்துக் கிளம்புவீர்கள். சரியில்லாவிட்டால், இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும். காதல் விஷயத்தில் அப்படி ஒரு தைரியத்தை இந்தத் தலைமுறையிடம் பார்க்க முடிகிறது.
உண்மையான காதல் உங்கள் நோக்கம் என்றால், நாம் ஏன் காதலிக்கிறோம், யாரைக் காதலிக்கிறோம், எப்படிக் காதலிக்கிறோம் என்ற மூன்று கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கும். அது இல்லாமல், ‘அவன் யாரா இருந்தால் என்ன?’, ‘காதலிக்க ரீசன் வேணுமா?’ என மேம்போக்காக பதில் வந்தால், அவரை பிரேக்அப் பாதிக்காது. அவர்களுக்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை!’’ என்றார் அவர்.

இதே பிரச்னையை இன்னும் கொஞ்சம் மனோதத்துவ ரீதியில் அலசினார் மதுரையைச் சேர்ந்த மனவியல் மருத்துவர் சி.ராமசுப்பிரமணியம்.
‘‘என்னைக் கேட்டால், அடிப்படையில் இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஈர்ப்பே கொஞ்சம் குறைந்துவிட்டது போல் தோன்றுகிறது. ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்து, நாம் உருவாக்கியிருந்த ஈர்ப்பு அது. தேவையான அளவுகூட தக்க வைத்துக் கொள்ளாமல் அதை மொத்தமாய் விட்டுவிட்டோம். அதுதான் இப்படிப்பட்ட பிரிவுகளுக்கு அடிநாதம். இப்போது பெற்றவர்களே கூட பிள்ளைகளின் காதல் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ‘கண்டுக்காம விடுவோம்... ஆறு மாசத்தில் அவங்களுக்குள்ளேயே பிரேக்அப் ஆயிடும்!’ என நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இதே பிரிவு, திருமண உறவிலும் வரும் என்பதை நினைக்க மறக்கிறார்கள் பலர். விவாகரத்து வழக்குகளையும் கள்ளக்காதல் சம்பவங்களையும் நாம் வேறு வேறு பிரச்னைகளாகப் பார்க்கிறோம். எல்லாம் இந்தக் ‘காதல் அயர்ச்சி’யில் இருந்து துவங்குவதுதான். ‘ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்’ என்றார்கள் அந்தக் காலத்தில். மொத்தமுள்ள தொண்ணூறு நாளும் முடிந்தபின் விழித்துப் பார்த்தால், கர்ப்பிணி மனைவி கண் முன் நிற்பாள். விலகிப் போக முடியாத கமிட்மென்ட் அது. அப்படிப்பட்ட கமிட்மென்ட்டை ஏற்காத இளைஞர்களிடம் அந்த தொண்ணூறு, நாட்களை மட்டும் எப்படிக் கொடுக்கலாம்?’’ என்றார் அவர்.
இதைப் பற்றி இன்னும் நிறைய சிந்திக்க வேண்டும்!
- கோகுலவாச நவநீதன்

சமீபகால சினிமாக்களில் பிரேக்அப் கலாசாரத்தை ஓரளவு சரியாக பிரதிபலித்திருந்தது, ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம்தான். அதன் இயக்குனர் பாலாஜி மோகனிடமும் பேசினோம்... ‘‘என்னைப் பொறுத்தவரை பிரேக்அப்ங்கறது எல்லா காலத்திலும் இருந்திருக்கு. அதை பப்ளிக்கா பேசிக்கிற அளவுக்கு, சினிமாவுல காட்டுற அளவுக்கு நாம இப்பதான் பக்குவப்பட்டிருக்கோம். சமீபகாலத்தில் அது ஒண்ணும் பெரிசாயிட்ட மாதிரி எனக்குத் தெரியல! காதலிக்கிற எல்லாருமா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? பெத்தவங்களுக்காகவும், வேற காரணங்க ளுக்காகவும் பிரியறது எல்லாமே பிரேக்அப்தானே?’’ என்றார் அவர்.

பிரேக்அப் கவிதை
என்னை விரும்பவில்லை என்பதற்காக
உன்னை வெறுக்கவில்லை!
உன்னை இன்னமும் விரும்பிக்கொண்டிருக்கும்
என் மனதைத்தான் வெறுக்கிறேன்!