டிசைனர் புடவை வாங்கலாம், டிசைனர் நகைகளும் வந்தாயிற்று! டிசைனர் குழந்தை?
அமெரிக்காவில் இப்போது இதற்கும் ஒரு நிறுவனம் காப்புரிமை வாங்கியிருக்கிறது. ‘‘டோனி மாதிரி ஸ்மார்ட்டா தலைமை தாங்கற, உசைன் போல்ட் மாதிரி வேகமா ஓடக்கூடிய, ஸ்டீவ் ஜாப்ஸ் மாதிரி வித்தியாசமா சிந்திக்கக் கூடிய, எந்த நோயும் இல்லாமல் நூறு வயசு வரைக்கும் வாழக்கூடிய ஒரு ஆண் குழந்தை வேண்டும்’’ என ஆர்டர் செய்வது இப்போது சாத்தியம். ‘‘அழகிய நீலக் கண்களுடன், கோதுமை நிறத்தில், எடுப்பான நாசியுடன் ஐஸ்வர்யா ராய் மாதிரி ஒரு பெண் குழந்தை’’ எனக் கேட்கலாம்.
‘கடவுளின் வேலையில், அல்லது இயற்கையின் படைப்பில் இந்த அளவுக்கு குறுக்கீடு செய்வது அறிவியல் நியதியா?’ என்ற சர்ச்சைக் குரல்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கிறது ‘23 அண்டு மீ’ என்ற நிறுவனம். மரபணு தொடர்பான ஆராய்ச்சிகளில் உலகப்புகழ் பெற்றது. மரபணுக் குறைபாடுகளால் வரும் நோய்கள் பற்றி தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனம். இந்த நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தது. ‘குடும்ப தோற்றக்
கூறுகளைத் தக்க வைக்கும் கணக்கீடு’ என்ற பெயரில் இது விண்ணப்பித்த காப்புரிமைக்கு, செப்டம்பர் 24ம் தேதி அனுமதி கிடைத்துவிட்டது. இதுதான் சர்ச்சைகளின் துவக்கப் புள்ளி!
‘‘குழந்தைகள் விஷயத்தில் இப்படி மரபணு பொறியியல் கண்டு பிடிப்புகளைப் புகுத்துவது ஆபத்தானது. ஆட்டுக்குட்டிகளையும் பூனைகளையும் உருவாக்கியபோதே, விஞ்ஞானிகள் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அதை எதிர்த்தனர். மரபணு மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்புகள் இப்படி தனியார் நிறுவனங்கள் கையில் சிக்குவது நல்லதல்ல; அதற்கு காப்புரிமை கொடுப்பது அதைவிட மோசமான விஷயம்! இனிமேல் மரபணு மாற்றம் தொடர்பான எல்லா விஷயங்களும் அரசுக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும்’’ என்கிறார்கள் பெரும்பாலான ஐரோப்பிய விஞ்ஞானிகள்.
ஆனாலும் இந்தக் காப்புரிமையைக் கொடுத்த அமெரிக்க பேடன்ட் மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் அசருவதாக இல்லை. ‘கருமுட்டை மற்றும் உயிரணு தானம் பெறுபவர்கள், தங்களுக்குத் தேவையான சாய்ஸைத் தேர்வு செய்துகொள்ளும் டெக்னிக்தான் இது’ என விளக்கம் அளிக்கிறார்கள் அவர்கள்.
இயல்பாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத பல தம்பதிகள், செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பெறுகிறார்கள். இவர்களில் மனைவியின் கருமுட்டையோ, கணவரின் உயிரணுவோ, கருத்தரிக்க ஏற்ற விதத்தில் இல்லாமல் போனால், தானம் பெற்றுத்தான் குழந்தை பாக்கியத்தை அவர்கள் அடைய முடியும். இப்படி தானம் தருவதற்கு தனியாக வங்கிகள் இப்போது உருவாகிவிட்டன. இங்குதான் மரபணு மாற்றம் செய்யும் மோடிவித்தைக்காரர்களின் ரோல் வருகிறது!
எப்படியும் உயிரணு அல்லது கருமுட்டை தானம் பெற்று குழந்தை பெறுவதாக முடிவாகிவிட்டது. அதில், ‘இருப்பதிலேயே சிறந்ததைத் தேர்ந்தெடுத்தால் என்ன?’ என்ற நினைப்பு வரக்கூடும். அவர்களைத்தான் தனது கஸ்டமர்களாக நினைக்கிறது ‘23 அண்டு மீ’ நிறுவனம்.

மரபணு சோதனையில் தங்களுக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து, தானம் பெற்று உருவாகும் கருவின் கேரக்டரை இங்கிருக்கும் விஞ்ஞானிகளால் சொல்லிவிட முடியும். அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் தேவையைச் சொல்லலாம்... பிறக்கப் போகும் குழந்தையின் நிறம், உயரம், அதன் குணாதிசயங்கள், வளர்ச்சிக் காலத்தில் ஏற்படும் நோய்கள் என எல்லாவற்றையும் மரபணுவில் மாற்றித் தர இவர்கள் ரெடி!

* ‘என் குழந்தை நூறு வயசு வரைக்கும் வாழ வேண்டும் என்று ஆசை!’’
* ‘‘எங்க தாத்தாவுக்கு சர்க்கரை நோய் இருந்தது; எனக்கும் வருமோன்னு பயமா இருக்கு. என் மகளுக்கு அது வரக் கூடாது!’’
* ‘‘நான் சானியா மிர்சா மாதிரி ஆக நினைச்சேன். குடும்பச் சூழல் அனுமதிக்கல. என் மகள் அதை சாதிக்கணும்!’’
- இப்படி கடவுளால்கூட நிறைவேற்ற முடியாத சாத்தியங்களை இந்த நிறுவனம் செய்து கொடுக்கப் போகிறது.
‘‘இதைக் கணக்கீடு என்ற பெயரில் ஏமாற்றி காப்புரிமை வாங்கியிருக்கிறார்கள். குழந்தை என்பது ஒரு வரம். அது எப்படி கணக்கீடுகளில் அடங்கும்? ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும்வரை மரபணு மாற்றம் ஓகே. ஆனால், அதைத் தாண்டி குழந்தையின் தோற்றத்திலும் கேரக்டரிலும் குறுக்கிட்டால், அது இயற்கைக்கு எதிரான செயல்’’ என்கிறார்கள் மரபணு விஞ்ஞானிகள்.
‘23 அண்டு மீ’ நிறுவனமோ, ‘‘இப்போதைக்கு நாங்கள் குடும்பப் பண்புகளைத்தான் குழந்தைகளுக்குத் தருகிறோம். தாத்தா மாதிரி, அம்மா மாதிரி, தானம் பெற்று பிறக்கும் குழந்தையும் குணங்களைப் பெறுவதற்காக மாற்றங்கள் செய்கிறோம். அதைத் தாண்டி தவறாக எதையும் செய்யவில்லை’’ என்கிறது.
கடைசியில் நாம் கடவுளுக்கு எதை மிச்சம் வைக்கப் போகிறோம்?
- அகஸ்டஸ்