வாரிசு : உமா கல்யாணி





தினேஷின் விழிகளில் ஏக்கம் படர்ந்திருந்தது. ஆபீஸுக்குக் கிளம்புகிற அப்பா கோவிந்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் எங்கு போனாலும் பின்னாலேயே போனான்.
வாசலுக்கு வந்து செருப்பு போட்டுக் கொண்டிருந்தபோது அருகிலேயே நின்றான். கிளம்புகிறபோதாவது தன்னைத் தூக்கிக் கொஞ்சி, ஒரு முத்தம் தந்துவிட்டுப் போவார் என்று எதிர்பார்த்தான்.

ம்ஹூம், நடக்கவில்லை. சென்ட் மணக்க மகன் அருகே வந்த கோவிந்த், தினேஷின் கன்னத்தில் செல்லக் கிள்ளல் போட்டுவிட்டு, ‘‘ஈவ்னிங் வந்து தூக்குறேண்டா செல்லம்’’ என்று சொல்லிவிட்டுப் போயே விட்டார் ஓட்டமாய்!
இரவு இவன் தூங்கின பிறகு வருகிறவர், இவனை எங்கே கொஞ்சப் போகிறார்?
காலம் ஓடிவிட்டது.
வீட்டின் முன் அறையில் இப்போது கட்டிலோடு கட்டிலாக கோவிந்த்! தினேஷ் ஆபீஸ் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அவன் ஸ்ப்ரே பண்ணிக் கொண்டிருக்கும் இன்டிமேட் வீடு முழுக்க மணம் பரப்பியது. தன் உடல்நிலை குறித்து ஒரு வார்த்தையாவது அவன் விசாரிக்க மாட்டானா என்று ஏக்கம். அவனிடம் பேச ஆசை.

ஈனக் குரலால் மகனைக் கூப்பிட்டார்.
‘‘டைம் ஆச்சுப்பா. எல்லாம் ஈவ்னிங் பேசிக்கலாம். பை!’’ என்றவன், டூவீலரை உதைத்துக் கிளம்பிவிட்டான்.
இரவு லேட்டாக வந்து களைப்பாகப் படுக்கிறவனுக்கு, அப்பாவுடன் பேச ஏது நேரம்?