சொல்றேண்ணே... சொல்றேன! : இமான் அண்ணாச்சி





ஊர்ல என் பிரெண்டு ஒருத்தன் பிஸ்கட்டு யாவாரம் பண்ணான்ணே... சைக்கிளுக்கு பின்னால ஒரு பாக்ஸ கட்டிக்கிட்டு பாக்கெட் பாக்கெட்டா முட்டாய், பிஸ்கட்டை கடைகளுக்குப் போடுவான். அந்தப் பெட்டியில ‘பறக்கும் படை மிட்டாய் தினுசுகள்’னு எழுதியிருக்கும்ணே. ‘‘என்னலே, பேரு வித்தியாசமா இருக்கு?’’ன்னு கேட்டா, ‘‘எனக்கு முன்னால இந்த பாக்ஸை வச்சி யாவாரம் பாத்தவன் இப்படி எழுதியிருக்கான்... நான் செகண்ட்ஸ்ல வாங்குனேன்’’னு சொல்லுவான். ஒருநாளு பேச்சு வாக்குல அவன்ட்ட, ‘‘இதுல என்ன லாபம் கெடைக்கும்’’னு விசாரிச்சேன்... ‘‘ஒரு பாக்கெட்டுக்கு பத்து ரூவா... இருவது பாக்கெட்டு போட்டா, 200 ரூவா கெடைக்கும்ல’’ன்னு அடிச்சி சொன்னான்.
அப்ப ஊருப் பக்கம் அதெல்லாம் பெரிய அமவுன்ட்டு! அவன அப்படியே சாக்கப் போத்தி அமுக்கி, தாடைய தடவி தாஜா பண்ணி அந்த சைக்கிளையும் பாக்ஸையும் விலைக்கு வாங்கிட்டேன்ணே. அதுக்குப் பெறவு, நாமதானே ஊருக்குள்ள ‘பறக்கும் படை’!

சின்னப் பிள்ளைகள நம்பி செய்யிற எந்த யாவாரமும் கவுக்காதுண்ணே. புளிப்பு முட்டாய், செவப்பு முட்டாய், ஜவ்வு முட்டாய், தேங்கா பிஸ்கட்னு கடைக்கு கடை நம்ம மிட்டாய் தினுசுதான் தொங்கும். நல்லாத்தான்ணே போயிட்டிருந்துச்சி. பக்கத்துல ஒரு ஊரு... அப்ப சாராயத்துக்கு அது படு ஃபேமஸு. சர்வ சாதாரணமா ரோட்டுல வச்சி காச்சுவாங்க. நமக்கு அப்ப ஒலகம் தெரியாத வயசு. அந்த ஊருல ஒரு கடைக்காரருக்கு மிட்டாய் போடப் போயிட்டிருந்தேன். வழியில ஒருத்தன் மறிச்சான்ணே...
‘‘எல... பறக்கும் படைனு போட்டிருக்கீயே... எங்க பறந்து காட்டு!’’ன்னு ஆரம்பிச்சான்.
எனக்கு நெடி தாங்க முடியல. ‘‘ஹி... ஹி... அது வந்துண்ணே...’’ன்னு பம்பரைப் புடிச்சிக்கிட்டு பம்முறேன்.
‘‘சரி, நீ ஒத்தையிலதானே வர்றே... ஒரு பட்டாளமா வருது... பெறவு அது என்ன ‘படை’?’’ன்னு அடுத்த கேள்வி.
ஆகா, இவன் வார்த்தைக்கு வார்த்தை வௌக்கம் கேப்பான் போலருக்கேனு அப்பவே எனக்குள்ள அலாரம் அடிச்சுது... ஆனா, கெரகம் யாரை விட்டுது?
‘‘நான் தனியாள் இல்ல’’ன்னு என்னவோ பெரிய அஜித்து மாதிரி சொல்லி வச்சேன். அதாவது, இது பெரிய கம்பெனி... என்னய மாதிரி நிறைய ஆளுக இருக்காங்கங்கற அர்த்தத்துல சொல்ல வந்தேன்.

அவ்வளவுதான்ணே... ‘‘அப்ப ஒன்னைய அடிச்சா பெரிய படையே வருமா? வரச் சொல்லு... இப்ப இங்க வரச்சொல்லு’’ன்னு பயபுள்ள சங்கப் புடிச்சுக்கிட்டு சலம்ப ஆரம்பிச்சிட்டான்.
சைக்கிள அங்கயே விட்டுப்புட்டு செத்தோம் பெழச்சோம்னு ஓடியே வந்துட்டேன் வீட்டுக்கு.
எனக்கு அந்த ‘கம்பனிய’ வித்தானே... அந்தப் பயகிட்டயே அடுத்த நாளு இதச் சொன்னேன்...
‘‘ஓ அவனா? பாக்ஸையே கட்டிப் புடிச்சிக்கிட்டு கேள்வி கேட்டிருப்பானே..?’’
‘‘ஆமா!’’
‘‘அவன் சேர்த்திக்காரனுவ நாலு பேரு பார்த்துப் பார்த்து சிரிச்சிருப்பானுவளே...’’
‘‘ஆமாமா!’’
‘‘ ‘போயி உன் படைய கூட்டி வா’ன்னு எத்தி எத்தி மிதிச்சிருப்பானே..?’’
‘‘அட, ஆமாப்பா!’’
‘‘அதே பயதான் போன மாசம் என்னைய மடக்கி தொரத்திவுட்டான். அடுத்த நாளு, அந்த ஊரு கடக்காரருகிட்ட சொல்லி சைக்கிளயும் பாக்ஸையும் எடுத்துட்டேன். ஆனா, முட்டாயி, பிஸ்கட்டையெல்லாம் தின்னுப்புட்டானுவ. அடுத்த நாளு மொதலுக்கு என்ன செய்யனு கெடந்தப்பதான் நீ வந்து சைக்கிள வாங்கிக்கிட்ட. இப்ப ஒனக்கும் அதே நெலமதான். நாளைக்கு வண்டிய திருப்பி எடுத்துத் தாறேன்... எவனாச்சும் இளிச்சவாயன்கிட்ட தள்ளி உட்ரு’’ன்னான் அவன்.
என்னைய விட இளிச்சவாயனை நான் இன்னிக்கிவரைக்கும் தேடுறேன்ணே... கெடைக்கவேயில்ல!
அந்த முட்டாய் யாவாரத்த அத்தோட நிறுத்தியிருக்கலாம்... ஆனா, செய்யல. நாமதான் யாவாரக் காந்தமாச்சே... பெரிசா, இன்னும் பெரிசா யோசிக்கணும்லேனு ஒரு அகலக் கால் வச்சேன் பாருங்க... அதுலதான் டவுசர் கிழிஞ்சுது!

அதாவது, பூப்பூவா டிசைன் போட்ட ஒரு பிஸ்கட்ணே... தேன் முட்டாய், கமர்கட்டை விட கடைகள்ல அதுதான் சக்கை போடு போடுது. நேத்துதான் ரெண்டு பாக்கெட் போட்டிருப்பேன்... அடுத்த நாளே ‘‘எல, அந்த பிஸ்கட் கொண்டு வரலீயா... நல்லாப் போவுதுலே’’ம்பாங்க கடக்காரங்க. ஆனா, நான் மொத்தமா பிஸ்கட் வாங்குற எடத்துல அந்த பிஸ்கட்டை மட்டும் எண்ணி, ஒரு நாளைக்கு ரெண்டுதான் தருவானுவ. அவ்ளோ டிமாண்டு!
‘அட, இந்தா பெரிய டிமாண்டு இருக்குன்னா, அந்த பிஸ்கட்டை நாமளே தயார் பண்ணினா என்ன?’ன்னு அப்போ புடிச்சி ஒரு ஐடியா ஓடிட்டே இருந்துச்சு. இப்ப மறுபடியும் மொதல்ல இருந்து யாவாரத்தை ஆரம்பிக்க வேண்டிய நெலம வந்துருச்சா... இனி அடுத்த கட்டத்துக்குப் போவணும்னு பிஸ்கட் தயாரிப்புல எறங்கிட்டேன்.
இந்த மாதிரி பிஸ்கட்டை செய்யத் தெரிஞ்ச மாஸ்டரைத் தேடி, ஊரு விட்டு ஊரு... மாவட்டம் விட்டு மாவட்டம் அலைஞ்சேன்ணே. கடசீல ஒரு ஜவுளிக் கடையக் காட்டினாங்க. ‘பெரிய பேக்கரியெல்லாம் வச்சி ஓகோன்னு இருந்த மனுசன்... இப்ப எல்லாம் லாஸாயி இந்தக் கடையிலதான் துணி வெட்டிக்கிட்டிருக்காரு. சரியான கைவேலக்காரரு’ன்னு சொன்னாங்க.
அவர்ட்டயே போனேன்...

‘‘சரி, தம்பி... நல்லா பண்ணிரலாம். நமக்கு இந்த வேலையெல்லாம் ‘பிஸ்கோத்து’. நம்ம வீட்லயே அடுப்பெல்லாம் இருக்கு. ஒங்களை ஒரு பெரிய பேக்கரி அதிபரா ஆக்கிப்புடுறேன்’’னு பன் பட்டர் ஜாம் மாதிரி பேசினாருண்ணே.
அப்படியே, ‘‘ஒரு அம்பது கிலோ மைதா, அம்பது கிலோ சக்கர, அம்பது லிட்டர் டால்டா வாங்கிட்டு வாங்க’’ன்னாரு பாருங்க... அரண்டுட்டேன்.
‘‘இல்லீங்க, நமக்கு மொதல்ல ஒரு பத்து பாக்கெட் போட்டா போதும்... எப்படி ஓடுதுன்னு பாத்துக்கிட்டு...’’னு இழுத்தேன்.
‘‘ப்ச்... அதையெல்லாம் ஒரு சரக்குன்னு அடுப்புல வைக்கவே முடியாது தம்பி... அத்தனையும் தீஞ்சுரும். அட்லீஸ்ட் 10 கிலோவாச்சும் போட்டுத்தான் ஆவணும். நான் போடுற பிஸ்கட் ஓடாம எங்க போயிரப் போ வுது!’’ன்னாரு.

நானும் கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தேன். அவருக்கு 500 ரூவா கூலி கொடுத்த பெறவும் ஓரளவு லாபம் நின்னுச்சு. ‘வட்டிக்கு வாங்கியாச்சும் பேக்கரி அதிபர் ஆயிடுறதுடா’ன்னு எறங்கிட்டேன். எங்க வீட்டுலயே வச்சி மாவப் பிசைஞ்சு எடுத்துட்டுப் போயிரலாம்னு சொன்னாரு. பத்து கிலோ மைதாவுல சக்கரையப் போட்டு பெசையிறாரு பெசையிறாரு... ஒரு கட்டத்துல களைப்பாகி என்கிட்ட வந்து, ‘‘தம்பி... என் சம்பளத்துல ஒரு 200 குடுங்க’’ன்னாரு.

சரி, தாகம் போல... பெட்டிக்கடையில கலரு வாங்கிக் குடிச்சுட்டு வருவாருன்னு குடுத்து அனுப்பினேன்ணே. படுபாவி, அந்தால போனவன்தான். பெறவு வரவேயில்ல. விசாரிச்சிப் பாத்தா, அந்த மனுசன் சரியான தண்ணி வண்டிங்கறாங்க. பேக்கரிய பூரா குடிச்சித்தான் அழிச்சிருக்கான். ஜவுளிக்கடை வேலையை எல்லாம் விட்டுட்டு, ஒரேயடியா ஓடுறதுக்கு அவனுக்கு ஒரு 200 ரூவாதான் தேவையா இருந்திருக்கு. அத நான் குடுத்துப்புட்டேன். அவன் போடுற பிஸ்கட்டுதான் நல்லா ஓடும்னு நான் நெனெச்சேன்... அந்தாளே ஓடுவான்னு எதிர்பார்க்கல!
அன்னிக்கு முடிவெடுத்தேன்ணே... குடி நெஜமாவே குடியைக் கெடுக்கும்னு. அந்த மாவப் பூரி போட்டுக் கூட திங்க முடியாம பெசஞ்சு வச்சுட்டு போயிட்டான் பாருங்கண்ணே... அத நெனச்சாத்தான் இப்பவும் வயிறு எரியுது!
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்