ட்வைன் பிராவோ...
டி.ஆர் பாணியில் சொல்வதென்றால் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் தங்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பவுலிங் சிங்கம். கிரிக்கெட் பற்றி கொஞ்சமாய் தெரிந்தவர்களுக்குக்கூட பிராவோவின் ஆட்டம் பிரபலம். கிரிக்கெட் ஆட்டமில்லை... விக்கெட் எடுக்கும், கேட்ச் பிடிக்கும் வேளைகளில் மைதானத்தில் இவர் ஆடும் அந்த ஆட்டத்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அடிமை.
எதற்காக இத்தனை பில்டப்?
இதுவரை கிரிக்கெட் கிரவுண்டில் ஆடிக் கொண்டிருந்தவரை தமிழ் சினிமாவில் ஆட வைத்து அழகு பார்த்துள்ளது கோடம்பாக்கம். யெஸ்... ‘முரண்’ படத்தை இயக்கிய ராஜன் மாதவ் அடுத்ததாக இயக்கிவரும் ‘உலா’ படத்தில் ஒரு பாடலைப் பாடி ஆடியுள்ளார் பிராவோ. பார் செட்டப் பின்னணியில் பிராவோ ஆடிக்கொண்டிருந்த ஏவி.எம்
ஃபுளோருக்குள் என்ட்ரி கொடுத்தோம். பட்டு வேட்டி, பளீரென அடிக்கும் கலரில் ராமராஜன் ஸ்டைல் சட்டை, கழுத்தில் கட்டிய கர்ச்சீப் என பக்கா லோக்கலாக மாறி படு ஸ்பீடாக ஆடிக் கொண்டிருந்தார். அன்றைக்கு அவரது பர்த் டே. வாழ்த்து சொன்ன சக டான்ஸர்களிடம், ‘‘மச்சான்... கலக்குறோம்’’ என்று பிராவோ தமிழ் பேச, செட்டில் பறக்கிறது விசில். பிரேக்கில் பிராவோவை ஓரம் கட்டிப் பேசினோம்.

தமிழ் சினிமா நடனத்தை அப்படியே பிக்கப் பண்ணிக்கிட்டீங்களே... எப்படி பாஸ்?
‘‘ட்ரினிடாட் நாடுதான் என் தாய் மண். கலை, கலாசாரத்துக்குப் பேர் போனது. தமிழ்நாடும் அப்படித்தான் இருக்கு. எங்க ஊர் டான்ஸ் மாதிரிதான் இந்த டான்ஸ் ஆடுறதும் ஈஸியா இருக்கு. நானே பாடி ஆடுறதுல சந்தோஷம். விளம்பரப் படங்கள்ல ஆடியிருக்கேன். ரெண்டு ஆல்பங்களும் பண்ணியிருக்கேன். பட், இந்த அனுபவம் எனக்குப் புதுசா இருக்கு. முதல்முறையா சினிமாவுல நடிக்கறேன்!
உங்க ஊர் டாஸ்மாக் கடை இப்படித்தான் இருக்குமா? வித்தியாசமா இருக்கு. நிறைய ஜனங்களோட இது வேற மாதிரி இருக்கும் இல்லையா?
கிட்டத்தட்ட சென்னை எனது இரண்டாவது தாய் வீடு மாதிரி ஆகிப் போச்சு. தமிழ் பேச முடியாதது ஒண்ணுதான் குறை. தமிழ்ப் படங்களில் தொடர்ந்து ஆடுவேனா என்று சொல்ல முடியாது... பார்ப்போம்! முரளி விஜய்யும் அஸ்வினும் நான் இந்தப் படத்துல நடிக்கறதைப் பத்தி சொன்னதும் ஷாக் ஆகிட்டாங்க. இதுவரைக்கும் நான் தமிழ்ப் படங்களை பார்த்ததில்லை. இந்த ஊர்ல ரஜினி, கமல்னு பெரிய ஸ்டார்கள் இருக்காங்களாமே? இந்தியாவில் எனக்குப் பிடிச்ச ஸ்டார் ஷாருக் கான்தான்!’’
கிரிக்கெட் பிளேயர்கள் என்றாலே, நடிகைகள் நட்பாக இருப்பார்களே... உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?
‘‘எனக்கு எந்த நடிகையையும் இங்க தெரியாது. ஷாருக் கானை மட்டும்தான் தெரியும். அவர் நடிச்ச ‘மை நேம் இஸ் கான்’ படம் பார்த்திருக்கேன். அந்தப் பாட்டு வந்தா டான்ஸ் ஆடுவேன்... அவ்வளவுதான்!’’
அடுத்து ஹீரோதானா?
‘‘நான் கிரிக்கெட்டைத்தான் அதிகம் நேசிக்கிறேன். கலைத்துறையும் எனக்குப் பிடிக்கும். ஆனால் முழுநேரமாக அதில் ஈடுபடுவதில் இப்போதைக்கு எனக்கு ஆர்வம் இல்லை. இப்போ எனக்கு முப்பது வயசு ஆகுது. இன்னும் அஞ்சு வருஷம் கிரிக்கெட்டில் இருப்பேன்னு நினைக்கிறேன். அதுக்குப் பிறகு வேண்டுமானால் சினிமா வில் நடிப்பது பற்றி யோசிக்கலாம். அப்படியே நடிக்க முடிவு எடுத்தால் தமிழ்ப் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறேன். சென்னையில் பல நாட்கள் தங்கி பரிச்சயமாகிவிட்டேன். எங்கள் ஊருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏதோ ஒரு கனெக்ஷன் இருப்பதாக உணர்கிறேன்’’ என்றவரை ‘ஷாட் ரெடி’ என்று அழைத்துப் போனார் அசிஸ்டென்ட்.
பிராவோவை ஆட வைக்கும் ஐடியா பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...

‘‘ ‘சித்திரம் பேசுதடி’ படத்தை தயாரித்த ஸ்ரீகாந்த்தான் ‘உலா’வையும் தயாரிக்கிறார். அவர்தான் இந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க புதுசா எதாவது செய்யவேண்டும் என்று யோசித்து, பிராவோவை ஆட வைக்கும் முயற்சியை எடுத்தார். பிராவோவை தொடர்புகொண்டு கான்செப்ட்டை சொன்னோம். ‘தீமையை நன்மை ஜெயிப்பதே கான்செப்ட்’ என்றதும் ‘நானும் அப்படியான நம்பிக்கை கொண்டவன்தான். அதனால் கண்டிப்பாக நடிக்கிறேன்’ என்றவர், கானா பாலா, நவீன் மாதவ் ஆகியோருடன் சேர்ந்து பாடியிருக்கிறார். ‘காதலா, போதையா’ என்ற வாக்குவாதம்தான் பாடலின் கான்செப்ட். காதலை ஆதரித்து பிராவோ பாடி ஆடும் பாட்டைத்தான் படமாக்கியிருக்கோம். விதார்த், அஜ்மல், அசோக் என படத்தில் மூன்று ஹீரோக்கள் இருக்கிறார்கள். இப்போது பிராவோவும் ஒரு ஹீரோவாக சேர்ந்து விட்டார்’’ என்றார்.
‘வாரா வாரம் எல்லா நாளும் ஓடிப்போயிடும் இந்த பூமியில காதல்தாண்டா நிலைத்து நிற்கும்’ என்ற வரிகளுக்கு ஆடிவிட்டு வந்த பிராவோ, தன் கேர்ள் ஃபிரண்டின் காதில் ஏதோ கிசுகிசுப்பாகப் பேச ஆரம்பிக்க, அவர்களைத் தொந்தரவு செய்யாமல் நகர்ந்தோம்.
- அமலன்
படங்கள்: புதூர் சரவணன்