திருமணம் : எஸ்.செல்வசுந்தரி

காலையில் திருமணம். முதல் நாள் இரவே திவ்யாவுக்கு பதற்றம். எந்தப் பிரச்னையும் இல்லாமல் இது நல்லபடியாக முடிய வேண்டும்; முகத்தில் விரக்தியையோ சோகத்தையோ காட்டிவிடக் கூடாது என முடிவெடுத்துக்கொண்டாள். மறுநாள் காலை...
அரக்கு வண்ணப்பட்டில், தங்க சரிகை மினுமினுக்க... வைர நகைகள் ஜொலிஜொலிக்க... தேவதையாய் மின்னினாள் திவ்யா. எல்லா கண்களும் அவளையே மொய்த்தன. அந்தப் பெரிய கல்யாண மண்டபம் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தது. நாதஸ்வரம் முழங்க, ஐயர் மந்திரம் சொல்ல, மக்கள் அட்சதை தூவ, வெட்கப்பட்டு அமர்ந்திருந்த திவ்யா கழுத்தில் தாலி ஏறியது. ‘அப்பாடா!’ என நிம்மதிப் பெருமூச்சோடு மாலையில் திவ்யா தன் வீட்டுக்குள் நுழைந்தாள்... ‘‘நானும் மண்டபத்துக்கு வர ஆசைப்பட்டேன்... கூட்டிப் போக மாட்டேன்னுட்டியே!’’ என வருத்தப்பட்டுக் கொண்டாள் திவ்யாவின் அம்மா. ‘‘அடப் போம்மா... ஆக்ஸிடென்ட்ல என்னோட சுரேன் போன பிறகு, வாழ்க்கையை நடத்தணுமேன்னுதான் இப்படி டி.வி சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். அதிலும் முதன்முதல் கல்யாண சீன். சரியா வரணுமேன்னு பதறிட்டேன். இன்னும் எத்தனை தடவை இப்படி என் கழுத்துல தாலி ஏறப்போகுதோ, எத்தனை தடவை இந்தக் கொடுமையை அனுபவிக்கப் போறேனோ!’’ - கண்ணீரோடு சொல்லிக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தாள் திவ்யா.
|