நகை : கே.ஆனந்தன்





‘‘என்ன விமலா இது..? கல்யாணத்துக்குத்தானே போறோம். கொஞ்சம் சிம்பிளா வரக்கூடாதா? வீட்ல இருக்கற எல்லா நகைகளையும் எடுத்து மாட்டிக்கிட்டு இப்படி நகைக்கடை மாதிரியா வருவே?’’ - கணவன் கணேஷ் கேட்டான்.

‘‘சும்மா இருங்க... இது என் மாமா பையனோட கல்யாணம். எங்க சொந்தக்காரங்க எல்லாரும் வருவாங்க. அவங்க முன்னாடி சிம்பிளா போனா, ‘அடடா, விமலா கல்யாணம் முடிஞ்சு போன இடத்துல ரொம்ப கஷ்டப்படறா போல... கழுத்துல, காதுல ஒண்ணும் இல்லையே’ன்னு ரொம்பக் கேவலமா நினைப்பாங்க. நாம வசதியா, சந்தோஷமா இருக்கோம்னு எல்லாருக்கும் தெரிய வேண்டாமா? பேசாம நடங்க!’’ என்றவளிடம் எதுவும் பேசாமல் கிளம்பினான் கணேஷ்.

அடுத்த மாதம் இன்னொரு கல்யாணம். ரொம்ப சிம்பிளாக ஒரேயொரு செயினை மட்டும் போட்டுக்கொண்டு கிளம்பிய விமலாவைப் பார்த்து கணேஷுக்கு ஆச்சரியம்!
‘‘ஏன் இவ்வளவு சிம்பிள்?’’ அவளிடமே கேட்டான்.

‘‘இது உங்க சொந்தக்காரங்க கல்யாணம். எல்லா நகைகளையும் போட்டுக்கிட்டு போனா, நாம வசதியா இருக்கோம்னு முடிவு பண்ணிடுவாங்க. ஆளாளுக்கு வந்து ‘அம்பதாயிரம் கொடு, ஒரு லட்சம் கொடு’ன்னு கடன் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. உங்க சொந்தக்காரங்க பத்தி தெரியாதா? இங்க இப்படித்தான் போகணும்!’’ என்றாள் விமலா.
‘நகை அணிவதில் இவ்வளவு சூட்சுமமா?’ - மயக்கம் வந்தது கணேஷுக்கு.