கர்ணனின் கவசம்





‘‘வாட்... காஃபீன் மனிதன் ‘Back Up’ஆ...’’ அதிர்ச்சியுடன் கேட்டாள் தாரா.
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஆதித்யா மவுனமாக நின்றான். ‘‘உன்னதான்...’’ என்று அவனை
உலுக்கினாள்.
‘‘என்ன..?’’
‘‘காஃபீன் மனிதன் ‘Back Up’ ன்னு அவர் சொல்றாரே...’’ என்று சிரித்துக் கொண்டிருந்தவரைக் காட்டினாள். அவள் சுட்டிக் காட்டிய திசையைப் பார்க்காமலேயே ‘‘அவருதான் துரியோதனன்...’’ என்றான்.
‘‘ஐ ஸீ... ஓகே... நான் கேட்டதுக்கு பதில் சொல்...’’
‘‘அந்த விடை நமக்கு அவசியமில்ல...’’
‘‘அப்ப வேற எதுதான் அவசியம்னு நினைக்கற?’’

‘‘காமதேனு...’’
‘‘அதுதான் மறைஞ்சுடுச்சே...’’
‘‘இல்ல...’’
‘‘இல்லையா?’’
‘‘லுக் தாரா... மகாபாரதத்துல ஜராசந்தனை எப்படி பீமன் வீழ்த்தினான் தெரியுமா?’’
‘‘நாம காஃபீன் மனிதனை வீழ்த்தினா மாதிரி...’’
‘‘யெஸ், கிருஷ்ணர் செய்கை மூலம் அதை அவனுக்கு கத்துக் கொடுத்தார். ஆனா, உண்மைல ஜராசந்தன் மனுஷனில்ல...’’

‘‘தென்?’’
‘‘லாக்...’’
‘‘என்னது?’’
‘‘ஆமா தாரா... உண்மைல அவனொரு இரட்டை சாவி. ஒரு பூட்டை திறக்க இந்த இரண்டு சாவியையும் ஒரே நேரத்துல உள்ள நுழைச்சு க்ளாக்வைஸாவும், ஆன்டி க்ளாக்வைஸாவும் திருப்பணும்...’’
தாரா அவனை உற்றுப் பார்த்தாள். ‘‘கொஞ்சம் புரியும்படியா சொல்லு...’’
‘‘லியானார்டோ டாவின்சியோட புகழ்பெற்ற மனித ஓவியம் நினைவுல இருக்கா? நிர்வாணமா ஒருத்தன் இரண்டு கைகளையும் விரிச்சுக்கிட்டு இருப்பான். சரி பாதியா அவன் உடம்புல ஒரு கோட்டை வரைஞ்சிருப்பார்...’’
‘‘ம்... டாக்டர்ஸும் அதை தங்களோட க்ளினிக்குல மாட்டி வைச்சிருப்பாங்க... டான் பிரவுனோட புகழ்பெற்ற நாவலான ‘டாவின்ஸி கோட்’ இந்த ஓவியத்துலேந்துதான் ஆரம்பிக்கும்... மூளைலயும் வலது பக்கம், இடது பக்கம்னு இரண்டு பிரிவுகள் உண்டு. இரண்டும் சேர்ந்ததுதான் மனித உடல்... மனித மூளை... இதெல்லாம் எனக்கும் தெரியும். இதுக்கும் காஃபீன் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்..?’’ என்று படபடவென்று கேட்டுக் கொண்டே வந்த தாரா, சட்டென்று கண்கள் விரிய அவனைப் பார்த்தாள். ‘‘அதாவது காமதேனு அடைக்கப்பட்டிருக்கிற சிறையோட பூட்டைத் திறக்கிற சாவிகள் காஃபீன் மனிதன்னு சொல்றியா...’’
கேட்டவளை பெருமையுடன் பார்த்தான் ஆதித்யா. ‘‘கற்பூரம். சட்டுன்னு பத்திகிட்ட. அதேதான்...’’
‘‘ஆனா, ‘Back Up..?’’’

‘‘ஸோ வாட்? ஒரிஜினல்னு ஒண்ணு இருக்கும்போதுதானே   ‘Back Up’  பை ரெடி பண்ணுவாங்க?’’
‘‘ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா? நான் கேட்க வந்தது உண்மையான சாவிகள்... ஐ மீன்... காஃபீன் மனிதனை எப்படி கண்டுபிடிக்கறது?’’
‘‘சிம்பிள் அரித்மடிக்...’’
‘‘என்னது?’’
‘‘கணிதத்துல ரொம்ப குறைச்சலா மார்க் எடுத்தியா...’’ என்று நக்கலடித்தவனுக்கு பதில் சொல்ல வாயைத் திறந்தாள் தாரா. ஆனா, வார்த்தைகள் வெளிப்படவில்லை. காரணம், எப்படி மறைந்தார்களோ அப்படியே காமதேனுவும், காஃபீன் மனிதனும் மீண்டும் தோன்றினார்கள்.
‘‘நான் சொல்ல வந்தது இதுதான் தாரா...’’ என்ற ஆதித்யா, அவளைப் பார்த்தபடி விளக்க ஆரம்பித்தான்.

‘‘1 X1 = 1
11   X 11 = 121
111   X 111 = 12321
1111   X 1111 = 1234321
11111   X 11111 = 123454321
111111 X 111111 = 12345654321
1111111 X 1111111 = 1234567654321
11111111   X 11111111 = 123456787654321
111111111   X 111111111 = 12345678987654321

இந்த கணித சூத்திரம் உணர்த்தற உண்மைதான் உலகத்தோட அடிப்படை. பிரபஞ்சத்தோட ஒவ்வொரு பாதியும் மறு பாதியோட கண்ணாடி பிம்பம்தான். Back Up தான். இதைத்தான் மகாபாரதத்துல ஜராசந்தனும் உணர்த்தறான்... இதையேதான் இந்த ‘Back Up’ காஃபீன் மனிதனும் நமக்கு புரிய வைச்சுகிட்டு இருக்கான். ஒன்பது எண்கள்தான் ஈரேழு உலகங்கள்லயும் இருக்கு. இதனோட எல்லையற்ற கூட்டல், பெருக்கல்கள்தான் மற்ற எண்கள் எல்லாமே... அதனாலதான் ஒன்பது பேர் கொண்ட ரகசியக் குழுவை மௌரியப் பேரரசரான அசோக சக்கரவர்த்தி ராணுவ தளவாட உற்பத்திக்காக உருவாக்கினாரு... ஒன்பது கிரகங்கள்னு ஜோதிடம் சொல்ல வர்றதும் இதைத் தான்...’’

‘‘ரைட்... இப்ப நாம என்ன செய்யணும்?’’
‘‘காஃபீன் மனிதனை ஒரே நேரத்துல அட்டாக் பண்ணணும்... ஆனா, கைகோர்த்துக்கிட்டு செய்யக் கூடாது. தனித்தனியா தாக்கணும். இவனை சரி பாதியா நீ பிளந்துடு. ஒரு பாதிய எடுத்துகிட்டு மைக்ரோ நொடி கூட தாமதிக்காம காமதேனுவோட மடியை தொடு. மறு பாதியை தலைகீழா நான் பிடிச்சுகிட்டு அதே மடியோட இன்னொரு பகுதியை தொடறேன்...’’
‘‘அதாவது ஒரு சாவி காஃபீன் மனிதனோட தலைலயும் மறு சாவி அவனோட கால்லயும் இருக்கா..?’’
‘‘ஆமா...’’
‘‘டூப்ளிகேட்டா இருந்தாலும் சாவி, சாவிதான்... இல்லையா?’’

‘‘யெஸ்...’’
‘‘முழுசா புரிஞ்சுது...’’
‘‘ஓகே வேலையை ஆரம்பிக்கலாம்... ரெடி... ஒன்... டூ... த்ரீ...’’
இருவரும் ஒரே நேரத்தில் தனித்தனியாக காஃபீன் மனிதனை நோக்கிப் பாய்ந்தார்கள். தன் கைகளை ஜுவாலையாக்கி அவனை சரி பாதியாகப் பிளந்த தாரா, ஒரு பாதியைப் பிடித்துக் கொண்டே அவனுக்கு பின்புறம் இருந்த காமதேனுவை நோக்கிப் பறந்தாள். மறு பாதியை இமைக்கும் நேரத்தில் தலைகீழாகத் திருப்பிய ஆதித்யா, அதே காமதேனுவின் இன்னொரு பக்க மடியை அடைந்தான்.
இருவரும் சொல்லி வைத்தது போல் அந்தப் பசுவின் மடியை சாவியால் திறந்தார்கள். அடுத்த கணம் பால் பீய்ச்சியடித்தது. தன் மடியில் இருந்த குடுவையில் அதை ஆதித்யா ஏந்தினான்.
‘‘சாதிச்சுட்டாங்க ஆயி... அடுத்து கபாடபுரம்தான்...’’ என மகிழ்ச்சியுடன் தாராவின் அப்பா கைதட்ட -
சகுனி, துரியோதனன், ரவிதாசன், ஃபாஸ்ட், சூ யென், சங்கர், ஆனந்த், பாலா உள்ளிட்டவர்கள் அந்த இடத்தை விட்டு அதிர்ச்சியுடன் விலகினார்கள்.
ஆதி ஆயியான குந்தியின் பார்வை, தன் வம்சத்தைச் சேர்ந்த இப்பொழுதைய கொழுந்தான பாலாவின் மீதே நிலைத்திருந்தது.
அடுத்த நொடி ஐந்து பாகங்களாக குந்தி பிரிந்தாள். அந்த ஐந்து பாகங்களும் ஐந்து சாவிகளாக மாறின.

‘‘இதுதான் கபாடபுரத்துக்குள்ள நுழைவதற்கான வாசலா?’’ உயரமான மனிதனின் கேள்வியில் மகிழ்ச்சி தெரிந்தது. அவர்கள் ஒன்பது பேரும் இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
‘‘ஆமா...’’ தன் முன்னால் பிரமாண்டமாக எழுந்து நின்ற பூதத்தை உற்றுப் பார்த்தபடி குள்ள மனிதன் பதிலளித்தான்.
‘‘அப்புறம் ஏன் இங்கயே நிக்கணும்? வாங்க உள்ள போகலாம்...’’ என அஸ்வத்தாமன் ஏவிய பிரும்மாஸ்திரத்தை கையில் பிடித்தபடி தன் வலது காலை முன்னோக்கி வைத்தான் மத்திம மனிதன்.
‘‘இரு... இப்ப நாம நுழையக் கூடாது...’’ என்று தன் பார்வையைத் திருப்பாமல் பதிலளித்த குள்ள மனிதன், சிந்தனையில் ஆழ்ந்தான்.
பூலோகத்தில் இருந்த ஆயியிடமிருந்து இன்னும் தகவல் வரவில்லை. பிதாமகரான பீஷ்மரிடமிருந்து பெற வேண்டியதைப் பெற்றாயிற்று என்று டெலிபதியில் தகவல் அனுப்பி பல மணி நேரங்களாகிறது. நியாயமாகப் பார்த்தால் மறு நொடியே பதில் செய்தி வந்திருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ பூலோக ஆயி அமைதியாக இருக்கிறாள்...
‘‘திரும்பவும் வேணா செய்தி அனுப்பிப் பாரு...’’ - உயரமான மனிதன் மவுனத்தை கலைத்தான்.

‘‘அது தப்பு... ஆயி வழிகாட்டற வரைக்கும் நாம பொறுமையாதான் இருக்கணும்...’’
‘‘இங்கயேவா?’’ மத்திம மனிதன் இடைமறித்தான்.
‘‘ஆமா...’’
‘‘நாள் கணக்குல ஆச்சுன்னா?’’
‘‘மாதக்கணக்குல ஆனாலும் சரிதான்...’’
அதன் பிறகு யாரும் எதுவும் பேசவில்லை. நுழைவாயிலையே பார்த்தபடி நின்றார்கள். ஆழ்கடலில் இப்படி ஆக்சிஜன் சிலிண்டரை மாட்டாமல் நிற்கவும், நடமாடவும் முடியும் என்பது அவர்களுக்கு வியப்பளிக்கவில்லை. ஆயியின்துணையுடன் வைகுண்டத்துக்கே சென்று விட்டு வந்த பிறகு இது எம்மாத்திரம்?
சுற்றிலும் தண்ணீர். ஆழத்தையும், அகலத்தையும் அளவிட முடியவில்லை. பசுமையான புற்களின் மீது கட்டப்பட்ட கோட்டை, பூமியில் இருப்பது போலவே காட்சியளித்தது. என்ன... கருங்கல்லின் மேல் பசுமை போர்த்தியிருந்தது. அது மட்டும்தான் வித்தியாசம். கோட்டையின் அகலம் கண்களுக்கு எட்டிய தொலைவு வரை விரிந்திருந்தது. கோட்டைக்குள் என்ன இருக்கிறது... எப்படிப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்..? சென்றால்தான் தெரியும். செல்வதற்கு உத்தரவு வர வேண்டும்.
மரத்தாலான கதவுகள் அகலமாகத் திறந்திருந்தன. நுழைவு வாயிலில் மருந்துக்கும் காவலில்லை. ஆனால், பூதத்தின் கண்கள் மினுமினுத்தன. ஒருவேளை அதனுள்
காவலர்கள் இருந்தபடி கண்காணிக்கலாம். அவர்களாகத் தாக்குதல் தொடுக்காதவரை நாமும் அமைதியாக இருப்பதே சாலச் சிறந்தது.

காத்திருந்தார்கள். சட்டென்று பூதத்தின் உருவம் பூமியில் அவர்கள் பார்த்த ஆயியின் முகமாக மாறியது. கனவோ என்று நினைக்கவும் வழியில்லை. காரணம், தோன்றிய முகம் மறையவில்லை.
‘‘அசோகச் சக்கரவர்த்தியால் உருவாக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட ரகசியக் குழுவின் வம்சத்தைச் சேர்ந்தவர்களே... சொன்னபடி பிரும்மாஸ்திரத்துடன் வந்துவிட்டீர்கள். மகிழ்ச்சி. இன்னும் சற்று நேரத்தில் காமதேனுவின் மடியில் இருந்து கறக்கப்பட்ட பாலுடன் நம் நண்பர்கள் வருவார்கள். அவர்களுடன் நீங்கள் கோட்டைக்குள் நுழையலாம். கதவைத் தாண்டியதும் உங்களை வரவேற்க முதல் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த புலவர்கள் காத்திருப்பார்கள். அவர்களது வழிகாட்டுதலுடன் அரண்மனைக்கு வாருங்கள். உங்களை அங்கு சந்திக்கிறேன்... எனது ஆசி என்றும் உங்களுக்கு உண்டு...’’ என்று சொல்லிவிட்டு பூலோக ஆயியின் முகம் மறைந்தது.

ஒன்பது பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு தாங்கள் வந்த வழியைப் பார்த்தபடி திரும்பினார்கள். காமதேனுவின் பாலுடன் வரும் நண்பர்கள் யாராக இருக்கும்? மனதில் எழுந்த கேள்வியை ஒருவரும் வாய்விட்டுக் கேட்கவில்லை. வழிமேல் விழி வைத்து பாதையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சில நிமிடங்களுக்குப் பின் குள்ள மனிதனின் செவிகள் ஏறி இறங்கின. மற்றவர்களும் அந்த ஒலியைக் கேட்டார்கள். கும்பலாக யாரோ நடந்து வரும் சத்தம். கடலுக்குள் நண்பர்கள் இறங்கிவிட்டார்கள். ஒளி வேகத்தில் ஊடுருவினாலும் கோட்டையை அடைய இன்னும் பல நிமிடங்களாகும்.

மனதில் பூத்த பரபரப்பை அடக்கியபடி அசையாமல் ஒன்பது பேரும் நின்றார்கள். நிமிடங்கள் கரைய... மெல்ல சில் அவுட்டில் உருவங்கள் தெரிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து இருளும் ஒளியாக... உருவங்களின் அங்க அடையாளங்களும் துல்லியமாகத் தெரிய ஆரம்பித்தன.
‘‘சாரி... உங்களை ரொம்ப நேரம் காக்க வைச்சுட்டோம்...’’ என்றபடி வந்தவர்கள் ஒன்பது பேரையும் வணங்கினார்கள்.
பதில் மரியாதையை ஒன்பது பேரும் தெரியப்படுத்த, குள்ள மனிதன் தன் கைகளை நீட்டினான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகக் கொண்டு வந்திருந்த காமதேனுவின் பாலை அடையாளம் காட்டினார்கள்.

திருப்தியுடன் தலையசைத்த குள்ள மனிதன் முன்னால் செல்ல, மற்ற எட்டு பேரைத் தொடர்ந்து வந்தவர்களும் கோட்டைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தார்கள்.
காமதேனுவின் பாலைக் கொண்டு வந்தது ஆதித்யாவும், தாராவும் அல்ல.

ரவிதாசன் தலைமையில் ஃபாஸ்ட், சூ யென், ஆனந்த், சங்கர், பாலா ஆகியோர்தான் அந்தப் பாலை கபாடபுரத்துக்குக் கொண்டு வந்திருந்தார்கள்.
(தொடரும்)