‘பணத்துக்காக வேலை செய்யவில்லை’ என சொல்லமுடிகிற ஒரு புள்ளியை எட்டுங்கள். அதன்பின் வேலை இனிக்கும்!
- வால்ட் டிஸ்னி‘ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ என்ற வரிகளை நாம் அறிவோம். உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது கேள்விகளே. ஆனால், வாழ்க்கையில் எல்லா கேள்விகளுக்கும் உங்களுக்கு உடனே பதில் கிடைத்து விடாது. சில பதில்கள் உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் கிடைக்காமல், பிற்பாடு கிடைக்கலாம். கிடைக்கும் பதில்கள் கூட நமக்குப் புரியாமல் இருக்கலாம். சில கேள்விகளுக்கு கடைசி வரை பதிலே கிடைக்காமல் போகலாம். சந்தேகங்களுடனேயே நாம் வாழ வேண்டியுள்ளது.
அதே நேரத்தில் நம்மால் சந்தேகங்களுடனும், கேள்விகளுடனும் வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாது. பதில்கள் கிடைக்காத இடைவெளிகளையும், கிடைத்தும் புரியாத வெற்றிடங்களையும் நிரப்பிச் செல்ல நமக்கு பொருத்தமான ஆறுதல் மொழிகள் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள் தேவைப்படுகின்றன. இந்த மாற்று பதில்கள் சில நேரம் அபத்தமாக, நம்ப முடியாததாக இருந்தாலும், இவை இல்லை என்றால் நாம் நிம்மதி இழந்து, குழப்பத்தில் ஆழ்ந்து விடுவோம். வாழ்க்கையை அர்த்தமூட்டிக்கொள்ள மனித குலத்திற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை. அதுதான் ஆன்மிகம்!
ஆன்மிக உணர்வு ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்தே தீரும். அதற்காக குண்டலினி, சக்கரங்கள், முக்தி, மோட்சம்... இது போன்ற கேட்டகிரிக்குள் நுழையவேண்டும் என்ற அவசியமில்லை. குறைந்தபட்சம் நம்மை மீறி நமக்கான விஷயங்கள் நடக்கிறபோது, ‘ஏன், எப்படி..?’ என்று விழித்து, குழம்பினாலே போதும்... உங்களுக்குள்ளும் ஆன்மிகத்தின் வேர் இருப்பதாகத்தான் அர்த்தம்.
இதையும் தாண்டி, உங்களுக்கு ஆன்மிக அறிவு எவ்வளவு இருந்தாலும் அது பிரச்னையல்ல... அந்த அறிவை உங்கள் பணி இடத்தில் உபயோகித்து எப்படி நிம்மதி அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இந்த உலகில் உள்ள போட்டிகளும், பரபரப்புகளும், மன உளைச்சல்களும் உங்களைத் தாக்க வரும்போது உங்களைக் காக்க மாயக்கரங்கள் ஆன்மிகத்திடமிருந்துதான் வந்தாக வேண்டும். அந்தக் கைகள் தரும் கைக்குட்டையைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி இடத்தில் சில விஷயங்கள் நீங்கள் எவ்வளவோ முயற்சித்தும் நடக்காததற்கும், சில நிகழ்வுகள் நீங்கள் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் நடந்ததற்கும், கஷ்டமான விஷயங்கள் எளிதாக முடிந்ததற்கும், வெகு எளிதான விஷயங்கள் உங்களின் தலையைச் சுற்ற வைத்ததற்கும், கண் எதிரே திறமையற்றவர்களும் முயற்சி செய்யாதவர்களும் முன்னேறுவதற்கும் நீங்கள் ஆன்மிகப் புத்தகத்திலிருந்துதான் பதிலைப் பெற முடியும். உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் நடக்கிறபோது அது உங்களை மீறிய ஒரு சக்தியின் விருப்பம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
‘இல்லை, பணி இடத்தில் எல்லாமே ஒழுங்காகத்தான் நடக்கிறது; திட்டமிட்டவாறே அனைத்தும் போய்க் கொண்டிருக்கிறது’ என்பவர்களும் ஆன்மிகத்தின் துணை கொண்டு தங்கள் பணியை மென்மேலும் செதுக்கிக் கொள்ளலாம். அதற்கான வழிகள் இதோ...
உண்மையில் பணி இடத்தில் ஆன்மிக உணர்வு இருக்க வேண்டும் என்பதைத்தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்னும் கோட்பாடு உணர்த்துகிறது. இது நமக்கு உணர்த்துவது ஆயுத பூஜை கொண்டாட வேண்டும் என்பதையல்ல. தினமும் கடவுளை வணங்கி விட்டு வேலையைத் துவக்க வேண்டும், கற்பூரம் ஏற்றி கடையைச் சாத்த வேண்டும் என்பதையுமல்ல.
பின் எது பணி இட ஆன்மிகம்?
ஒரு செயலை நீங்கள் செய்கிறபோது இன்னும் சிறப்பாக அதைச் செய்ய முடியும் என்கிற நிலையில், அதை அரைகுறையாகச் செய்தீர்கள் என்றால், அந்த இடத்தில் நீங்கள் ஆன்மிக ரீதியாகத் தோற்று விடுகிறீர்கள்.
நீங்கள் அதை அரைகுறையாகச் செய்ததே போதுமானதுதான்... நீங்களாக வெளியே சொல்லாவிட்டால் அது யாருக்கும் தெரியவும் போவதில்லைதான். ஆனாலும், அந்தச் செயலை உங்கள் மனசாட்சி கண்காணித்துக் கொண்டிருக்கும் அல்லவா? இது, இந்தத் திறமையை, வாய்ப்பை, வேலையை உங்களுக்கு அளித்த ‘கடவுளுக்கு அல்லது இயற்கைக்கு நீங்கள் செய்யும் துரோகம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு எளிய உதாரணமாக, ஒருவர் டீக்கடையில் பணி புரிகிறார். அவர் டீ போடும்போது, டம்ளரை இன்னும் நன்றாகக் கழுவியிருக்கலாம், டீயை இன்னும் சிறப்பாகப் போட்டிருக்கலாம், அதை அலட்சியமாக தேநீர் சிந்தச் சிந்த வாடிக்கையாளருக்கு அளிக்காமல் இருந்திருக்கலாம்... என்ற உணர்வு இருந்தும் அவர் அதைச் செய்கிறார் என்றால் அவர் ஆன்மிகத்தில் பின்தங்கி விடுகிறார்.

என்னால் இந்தக் கட்டுரையை இன்னும் சிறப்பாக எழுத முடியும் என்கிறபோது, ஏதேதோ செய்து நான் சமாளிக்கிறேன் என்றால் நான் கடவுளை ஏமாற்றுகிறேன் என்று பொருள்.
இப்படி நமது வேலைக்கு ஆன்மிக உணர்வைக் கொடுத்து, அதை சேவையாக மாற்றத்தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
உங்களுக்கும், வேறொருவருக்கும் பணி இடத்தில் ஒரு பிரச்னை. தவறு உங்கள் பக்கம்தான். ஆனாலும் சூழ்நிலையாலும் உங்கள் வாதத் திறமையாலும் தப்பித்து விடுகிறீர்கள். அதனால் மற்றவர் பாதிக்கப்படுகிறார். உங்களுக்கு மனசாட்சி உறுத்துகிறது. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் ஈகோ தடுக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? கடவுளிடம் உருக்கமாகப் பிரார்த்தனை செய்து, உங்கள் நிலையை விளக்கி, மன்னிப்பு கேட்டுக்கொள்வீர்கள். இதுதான் பொதுவான சராசரி மனநிலை.
கடவுள் எங்கு இருந்தாலும் அவர் உங்கள் கண்ணிற்குத் தட்டுப்படப் போவதில்லை. ஆனால், கண்ணெதிரே உங்களால் பாதிக்கப்பட்டவர் இருக்கிறார். உங்களுக்கு வெகு அருகில் இருக்கும் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்காமல், கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ இருக்கும் கடவுளிடம் மன்னிப்பு கேட்பது எவ்விதத்தில் நியாயம்? ரத்தமும், சதையுமாக உங்கள் எதிரில் இருக்கும் ஒருவர், உங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங்களை மன்னிக்காமல், கடவுள் உங்களை மன்னிப்பார் என்றா நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்களின் அகந்தைக்கு பலியாகி விட்டு, கடவுளின் ஆசியைக் கதறக் கதறக் கேட்டால், அவர் தருவார் என்றா நினைக்கிறீர்கள்?
அப்போது நீங்கள் உங்கள் ஆத்மாவின் குரலைக் கேளுங்கள். அது கடவுளின் குரலாகவும் இருக்கும். இதை நீங்கள் செயல்படுத்தும்போது கடவுள் உங்களுடன் பணி இடத்தில் வாழ்வார். இதனால் உங்களின் ஆன்ம பலம் அதிகரிக்கும். உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான சக்தி வெளிப்படும். உங்கள் சொல் அம்பலத்தில் ஏறும். உங்கள் அண்மையை எல்லோரும் விரும்புவார்கள்.
பிரச்னைகள் உங்களைப் பார்த்து, ‘‘வரட்டுமா?’’ என அனுமதி பெற்று வரப்போவதில்லை. பூமி காற்று மண்டலத்தால் சூழப்பட்டிருப்பது போல் நீங்கள் எப்போதுமே பிரச்னைகளால் சூழப்பட்டிருக்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் மென் காற்று, புயல் காற்றாக மாறலாம். அதிலிருந்து தப்பிக்க நினைக்காமல் உள் அமைதியுடன், நம்பிக்கையுடன் அதை எதிர்கொண்டு வெற்றிகரமாக வெளியே வர உங்களுக்கு உதவுவது உங்களின் ஆன்மிக எண்ணங்களே.
பணி இடத்தில் உங்கள் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் செல்லும். ஆனால், அடிப்படையான அன்பு அதையும் தாண்டிச் செல்லும் என்பதும் பணி இட ஆன்மிகமே. சற்று நினைத்துப் பாருங்கள். அகந்தை கொண்ட ஒருவர் உங்களின் பணி இடத்தில் இருக்கிறார். அதனால் அவரைச் சகிப்பீர்கள். வேறு வழியின்றி போலி மரியாதை அளிப்பீர்கள். அவர் அந்தப் பணி இடத்திலிருந்து சென்று விட்ட பிறகு அவரை சந்திக்க நேர்ந்தால், அதே மரியாதையை அளிப்பீர்களா, என்ன? இவ்வளவு நாள் பணியில் இருந்தும் மனிதர்களைச் சம்பாதிக்காவிட்டால் அது ஒரு வாழ்க்கையா?
இவற்றை எல்லாம் உணருங்கள், ஆன்மிகப் பாதையில் நீங்கள் நிச்சயம் நிம்மதியையும், அமைதியையும் சந்திப்பீர்கள்.
(வேலை வரும்...)