இசையமைப்பாளர்களுக்கு நடிகன் என்ற அடையாளம் தேவையில்லை!





‘‘என்னங்க, ‘ஊதா கலர் ரிப்பன், யார் உனக்கு அப்பன்’ இந்தப் போடு போடுதுன்னுதானே கேட்கப்போறீங்க... அது அப்படித்தான்’’ - எப்போதைக்குமான இனிமையில் கன்னம் குழி விழ சிரிக்கிறார் டி.இமான். உச்சஸ்தாயியின் வேகமும், கீழ்ஸ்தாயியின் சுகமும் இசையில் மட்டுமல்ல... இமானின் இசை வாழ்க்கையிலும் உண்டு. எல்லா விரலுக்கும் சேர்த்து கையில் படம் வைத்திருக்கும் இமான், தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக். ‘‘ரீரெக்கார்டிங்குக்காக விஷாலோட, ‘பாண்டிய நாடு’ வந்திருச்சு. பாத்திட்டு வந்தேன். ம்...’’ என கேள்விக்குத் தயாராகி விட்ட பாவனையில் இமான்...
‘‘இவ்வளவு நாள் கழிச்சு இந்த வெற்றி எப்படி வந்தது?’’

‘‘ ‘தமிழன்’ல் வந்த அதே இமான். எந்த வித்தியாசமும் என்கிட்டே இல்லை. ஏதாவது சாதிக்கணும்ங்கிற அதே தவிப்புதான். இப்போ திரைமொழியே மாறிவிட்டது.
பீம்சிங், ஸ்ரீதர் காலத்தில் எல்லாம் கதை முக்கியம். கதையை ஒட்டிய பாடல்கள்தான் தேவைப்படும். முன்னாடி, ‘கட் பண்ணினா பாட்டு’ன்னு அடிக்கடி சொல்வாங்க. இப்ப சீனும், அடுத்து வருகிற பாட்டும் ஒண்ணா இருக்கணும். கொஞ்சம் பழசா இருந்தாலும் எழுந்திருச்சு போகத் தயங்க மாட்டாங்க. சூழலே நல்லாயிருக்கு. நல்ல பாடல் உருவாக டைம் வந்திருக்கு. எந்தக் கதையில் நம்ம வேலை நல்லபடியா இருக்கும்னு மட்டும்தான் பார்ப்பேன். நல்ல பாடல்களுக்கு நல்ல தளம் அமைச்சுக் கொடுக்கிறது மட்டும்தான் என் வேலை.’’
‘‘நினைச்ச இடத்தை இப்ப அடைஞ்சதுக்குக் காரணம் டைமா, திறமையா, அதிர்ஷ்டமா..?’’

‘‘காதல் முழு வீச்சில் இருக்கிற படமா இருந்தா பாட்டு நல்லாத் தெரியும். காதல்னு சொன்னாலே அது மியூசிக் சேர்ந்ததுதான். கொஞ்சுகிற பாடல்களை காதல் படங்களில் ஈஸியா சேர்க்கலாம். திகட்டத் திகட்ட பாடல்கள் காதலில்தான் பிறக்கும். அதற்காக மத்த படங்களை நான் குறை சொல்லலை. ‘கிரி’ படப்பாடல்கள், ‘அழகிய அசுரா’வெல்லாம் எனக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. நாங்க டைரக்டருக்குக் கட்டுப்பட்டவங்க. பாட்டுக்கு முதல் ஆடியன்ஸ் டைரக்டர்தான். எந்த இடத்தில் பாட்டு என்பது கூட முக்கியம். இயக்குநர்களுக்கு இசை ரசனை இருந்தால் அது கூடுதல் பலம்.’’
‘‘இளையராஜா, ரஹ்மான் மாதிரி பெரிய ஆளுமைகள் இப்ப இல்லையே, ஏன்?’’

‘‘முன்னாடி ஒருத்தர் இரண்டு பேர் இருந்தாங்க. இப்ப பார்த்தா நிறையப் பேர். ஒவ்வொருத்தருக்குமே தனி அடையாளம் தெரியுது. முன்னால் அதிகம் போட்டி இல்லாமல் நிறைய செய்து பார்த்தாங்க. இப்ப அவசர உலகம். ஆளுமைகள் அதிகம் இருக்கிறது அழகுதானே. அனுபவமும், செய்கிற வேலையும், சேர்ந்து சேர்ந்து நம்மளைக் கொண்டு போய் ஒரு இடத்தில் வைக்கும். மக்கள் மனசில் என்ன இடம் இருக்கோ, அதுதான் என் இடம். நல்லிசையும் மெல்லிசையும் விரும்பும் மக்கள் மனசில் நான் என்றைக்கும் இருக்கிறேன். சினிமா ஒரு கூட்டு முயற்சிங்கிறதை மறந்திடாதீங்க. அதில் என் பங்கு நிறைவா இருக்கணும்ங்கிறதுதான் என் முயற்சி.’’



‘‘இப்ப நிறையப் பேர் இசை உலகில். அவங்க இசையைக் கேட்க, அனுபவமா உணர வித்தியாசமா இருக்கா?’’
‘‘நான் மனசார மற்ற இசையமைப்பாளர்களைப் பாராட்டுவேன். நல்ல பாட்டு கேட்டுட்டா, உடனே போன் பண்ணிட்டுதான் மறுவேலை. யுவனோட விசிறி நான். அனிருத் இப்ப நல்லாயிருக்கு. ஜி.வி.பிரகாஷ்குமார் நல்லா பண்றார். இதை நேரில் பார்த்தாலும் சொல்வேன். மத்தவங்களைப் பாராட்டப் பழகினால்தான் நாம் வளருவோம். எனக்கு வளர்ந்துட்டே இருக்க ஆசை!’’
‘‘ ‘தமிழன்’ படத்திற்குப் பின்னாடி இத்தனை வருஷம் கழிச்சு விஜய்யோட ‘ஜில்லா’ எப்படியிருக்கு?’’

‘‘திடீர்னு விஜய் சார் கூப்பிட்டார். ‘ஜில்லா’வுக்காக மறுபடி சேர்வோமான்னு கேட்டார். நான் டேப் ரிக்கார்டரைத் தூக்கிட்டு அவர் ஆபீஸ்க்கு போயிட்டேன். ‘தமிழனி’ல் பார்த்த மாதிரியே வந்ததில் அவருக்கு சிரிப்பு பொங்கிடுச்சு. நான் இத்தனை காலமா விஜய் சார்கிட்ட, ‘உங்க படத்தில மறுபடி வேலை பார்க்கணும்’னு கேட்டதில்ல. அப்படிச் செய்வது இம்சை. காலம் எப்படியும் ஒருநாள் நம்மளை கொண்டு போய் ஒரு இடத்துல வைக்கும். அந்த இடத்தை நோக்கி உழைச்சா, எல்லா வாய்ப்புகளும் நம்மகிட்ட வரும். ரொம்பவும் ஆத்மார்த்தமா
நல்லவிதமான பாடல்கள் ‘ஜில்லா’வுக்கு போட்டுக்கிட்டே இருக்கேன். என்கிட்ட வச்ச நம்பிக்கையை என்னிக்கும் குறைய விடமாட்டேன்.’’



‘‘அனிருத் நடிக்கிறதுக்காக சட்டையைக் கழட்டிட்டு ‘ஜிம்’முக்குப் போயிட்டார். யுவனும் நடிக்கப் போறார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவா ஒப்பந்தமே ஆயிட்டார். நீங்க நடிக்கலையா பாஸ்?’’
‘‘சார், எனக்கு இசை ரொம்ப முக்கியமான விஷயம். எனக்கு அதைத் தவிர ஒண்ணும் தெரியாது. இசைங்கிறது பவித்திரமானது. இளையராஜா சார் நடிக்கப் போயிருந்தா சான்ஸ் கிடைக்காதா என்ன? ரஹ்மான் சார் இப்ப கண்ணசைச்சா நடிக்க முடியாதா? இளையராஜா, ரஹ்மான்னா அவங்க மாஸ்டர்ஸ்... பெரிய மியூசிக் டைரக்டர்ஸ் என்பதுதான் அடையாளம். அதுதான் அழகு. இசை என்ன வேடிக்கை சமாசாரமா? ‘போரடிக்குது... நடிக்கப் போறேன்... படம் தயாரிக்கப் போறேன்’னு சொல்றதுக்கு இசை அவ்வளவு சாதாரணமான பொறுப்பா என்ன..? என்னைப் பொறுத்தவரை, இசையமைப்பாளர்களுக்கு நடிகன் என்ற அடையாளம் தேவையில்லை. இசைதான் எனக்கு பேச்சு, மூச்சு, காதலி... எல்லாம்!’’
- நா.கதிர்வேலன்