வாசகர் கவிதைகள்



பரிசு!
பிரிந்து செல்லும்போது
எல்லோரும்
நினைவுப்பரிசு கொடுப்பார்கள்;
நீ மட்டும்தான்
உன் நினைவையே
பரிசாகக் கொடுத்தாய்.
 எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி.

ஈரம்!
வயல் எங்கும்
விளைந்து கிடக்கும்
கான்க்ரீட் கட்டிடங்களுக்கு
அடியில்
காய்ந்து கிடக்கின்றன...
ஏரோட்டியவனின்
வியர்வைத் துளிகள்!
 ப.உமாமகேஸ்வரி,
நெய்வேலி.

சர்வாதிகாரி!
கையில் பிரம்புடன்
ஹிட்லர் பற்றி
பாடம் நடத்தினார்
ஆசிரியர்;
ஆசிரியரைவிட
ஹிட்லர்
நல்லவனாகத் தெரிந்தான்
மாணவனுக்கு!
 இரா.கமலக்கண்ணன்,
சித்தோடு.

தேடுதல்
அன்று
ஐந்தடியில் கிடைத்தது;
இன்று
ஐநூறடியில் தேடுகிறோம்...
ஆச்சரியப்பட வேண்டாம்.
நாளை தண்ணீர்
தங்கம் ஆகலாம்!
 பெ.பாண்டியன்,
காரைக்குடி.

கசப்பு...
எறும்போ
சாறுபிழிந்த சக்கையில்
இனிப்பைத் தேடுகிறது;
மனிதனோ
வாழ்க்கை கசக்கிறது
என்கிறான்!
 சு.கலைச்செல்வன், குண்டுகுளம்.

மறுபிறவி!
உலகையே தலைகீழாக
மாற்ற நினைப்பவர்களை
வௌவாலாக
படைத்துவிடுகிறார்
கடவுள்.
 சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

கவலை
மழைக்குக்
குடை பிடித்தும்,
எவரும்
ஒதுங்காத கவலையில்
காளான்!
 என்.மதியழகன், பெண்ணாடம்.