பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்



அம்மாவோட இறுதிச்சடங்குக்கு உதவினது மட்டுமில்லே... தியாகராஜன் செஞ்ச இன்னொரு பெரிய உதவியையும் மறக்கவே முடியாது. நான் பி.ஏ. முடிச்சிட்டு எம்.ஏ. சேர்ந்த நேரத்தில வீட்டுச்சூழ்நிலை வழக்கத்தைவிட மோசமாச்சு. உறவுகள்ல கூட யாரும் உதவி செய்ற நிலைமையில இல்லே. ‘படிச்சது போதும், ஏதாவது வேலைக்குப் போயி சம்பாதிக்கிற வழியைப்பாரு’ன்னு அறிவுரை சொல்றாங்களே ஒழிய, ‘இந்தாடா பாப்பையா’ன்னு குடுத்து உதவ யாருமில்லே. பாவம், அவங்க நிலைமை எப்படியோ...

படிப்புதான் நம்ம வாழ்க்கையை மாத்தும்ங்கிறதில நான் ரொம்பவே தெளிவா இருந்தேன். பகுதி நேரமா ஏதாவது வேலை செய்யலாம்னு யோசிச்சேன். இன்னொரு இடத்துல வேலை செஞ்சுக்கிட்டு நம்ம நேரத்துக்கு கல்லூரிக்குப் போக, வர முடியாதே. சில நண்பர்கள் உதவியோட எங்க வீட்டிலயே ஒரு இரவுப்பள்ளியை ஆரம்பிச்சேன். நிறைய குழந்தைங்க படிக்க வந்தாங்க. ஆனா, எல்லாருமே என்னைய மாதிரி வறுமை சூழ்ந்த குடும்பத்துப் பிள்ளைங்க. அதனால, யார்கிட்டயும் கண்டிப்பு காட்டி பணம் வாங்க என் இயல்பு ஏத்துக்கலே. குடுத்தா வாங்கிக்குவேன். இல்லைன்னா கேட்கமாட்டேன். அப்படி வாங்குற பணம் கல்லூரிக்குப் போக வர்ற செலவுக்குக்கூட போதலே... 

எம்.ஏ. ரெண்டாவது வருஷம் படிச்சிக்கிட்டிருந்த நேரம்... தேர்வுக்கட்டணம் கட்டணும். எப்பவும் போலவே கையில பணமில்லே... எங்க அய்யாவோட உடன்பிறந்த அண்ணன் மகன் ஒருத்தர் இருந்தாரு. எனக்கு அண்ணன் முறை. பெயரைச் சொல்ல விரும்பலே. பெரியம்மா இறந்து போனதால, பெரியப்பா ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சித்தி கொடுமையோ, வேற என்ன காரணமோ அண்ணன் வீட்டை விட்டு வெளியில வந்திட்டாரு. எங்க அய்யாதான் அவரைக் கூட்டியாந்து, ஹார்வி மில்லுல வேலைக்கு சேத்துவிட்டு, கல்யாணமும் கட்டி வச்சிருக்காரு. அண்ணன், ரொம்ப சிக்கனக்காரரு. அப்போ ரொம்ப நல்ல நிலைமையில இருந்தாரு. வட்டிக்கு வேற குடுத்து வாங்குனாரு. ‘அவன்கிட்ட கடனா கேட்டுப் பாருய்யா’ன்னு அய்யா சொன்னாரு.

சின்ன வயசுல நடந்த ஒரு சம்பவம்... கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துச்சு. எங்களுக்கு துணி எடுத்துத்தர வீட்டுல காசு இல்லே. எங்களை கையில புடிச்சுக்கிட்டு நேரா இந்த அண்ணன் வீட்டுக்குப் போச்சு அம்மா. ‘அய்யா தம்பி, பண்டிகைக்கு புள்ளைகளுக்கு துணி எடுக்கக்கூட காசில்லய்யா, புள்ளைக ஏங்கிப் போயிருங்க... ஒரு பத்து ரூவா கடனா குடுய்யா, சம்பளம் வாங்குனதும் தாரேன்’னு அம்மா கேட்டுச்சு. உடனே அண்ணன், ‘வீட்டுல இருக்கிற ஏதாவது பாத்திரத்தை எடுத்துக்கிட்டு வா. அதை அடகா வச்சுக்கிட்டு பணம் தர்றேன், சும்மாவெல்லாம் நம்பித் தரமுடியாது’ன்னு சொல்லிட்டாரு. அம்மாவுக்கு பயங்கர ஆத்திரம். ‘நான் தூக்கி வளர்த்த பய நீ. என்னையவே நம்பாம அடமானம் கேக்குறியே. உன் பணமே வேண்டாம்டா’ன்னு சொல்லிட்டு காதுல கிடந்த செவப்புக் கம்மலைக் கழட்டி வேறொரு இடத்தில அடகுவச்சு துணி வாங்கித் தந்துச்சு.

அப்படிப்பட்டவருகிட்ட போயி அய்யா கேக்கச் சொல்றாரேன்னு எனக்கு யோசனை. சரி, வேற வழியில்லேன்னு நினைச்சப்போ, ஏதோ வேலையா அண்ணனே எங்க வீட்டுக்கு வந்தாரு. நான் தயங்கித் தயங்கி, ‘அண்ணே, எம்.ஏ தேர்வு நெருங்கிருச்சு. ஃபீஸ் கட்டணும். கொஞ்சம் பணம் தேவைப்படுது. வேலைக்கிப் போனதும் முதல் மாசத் சம்பளத்தை வாங்கி தந்துடுறேன்’னு கேட்டேன். அண்ணன் முகம் மாறிப்போச்சு... ‘பணம்தானே... தர்றேன்டா’ன்னு சொல்லிட்டு விர்ர்ருன்னு எழுந்திருச்சுப் போனவர்தான்... இன்னைய வரைக்கும் வந்து சேரலே!

அவமானம் ஒருபக்கம்... ஆத்திரம் ஒருபக்கம்... போனாப்போகுதுன்னு படிப்பைத் தூக்கி எறிஞ்சிட்டு எங்காவது வேலைக்கிப் போயிரலாமான்னு கூட யோசிச்சேன். திடீர்னு தியாகராஜன் நினைவுக்கு வந்தான். அப்போ அவன் சென்னையில செகரட்ரியேட்ல வேலை செஞ்சான். அவனுக்கு ஒரு கடிதம் போட்டேன். ‘பரீட்சை நெருங்கிருச்சுடா, ஃபீஸ் கட்ட பணமில்லே, என்ன செய்யிறதுன்னு தெரியலே, அங்கே ஏதாவது வேலை கிடைச்சா எழுது, வந்துர்றேன்’னு வருத்தத்தோட அந்தக் கடிதத்தை எழுதியிருந்தேன். அடுத்த நாலைஞ்சு நாள்ல தந்தி மணிஆர்டர்ல 150 ரூபாயை அனுப்பிவச்சான் தியாகராஜன். கூடவே ஒரு கடிதம்... ‘உன் கடிதம் கிடைச்சப்போ கையில பணமில்லே.. என்கிட்ட இருந்த சைக்கிளை உடனடியா வித்துட்டேன். அந்தப் பணம்தான் இது... நீ நல்லாப் படிக்கணும். தேர்வு எழுதணும்... பெரிய ஆளா வரணும்... அதுபோதும் எனக்கு’ன்னு எழுதியிருந்தான். இதை எழுதுறபோதே, என் கண்ணுல இருந்து வழிஞ்சு விழுகிற கண்ணீர்த்துளி காகிதத்தை நனைக்குது. இப்படிப்பட்ட ஒரு நண்பனை நான் கடவுள்னு சொல்லாம வேற என்னய்யா சொல்றது!

மும்பையில, ஒரு பெரிய நிறுவனத்துல நல்ல பொறுப்புல இருந்த தியாகராஜன் அண்மையில இறந்துட்டான். என் முன்னேற்றத்தைப் பார்த்து சந்தோஷப்பட்ட சொற்ப மனிதர்கள்ல அவனும் ஒருத்தன். என் வாழ்க்கையில ஒளியேத்தி வச்சவன். அவனோட இழப்பு தனிப்பட்ட முறையில எனக்குப் பேரிழப்பு.

நான் நாலாவது ஃபார்ம் படிக்கிறபோது, வாசுதேவன்னு ஒரு நண்பன் கிடைச்சான். இவனைப் பத்தி நிறைய சொல்ல வேண்டியிருக்கு. இவன் பண்ணின காரியத்தை இப்ப நினைச்சாலும் என்னை மறந்து சிரிப்பேன். ரொம்ப வேடிக்கையான ஆளு. ஜமீன் வீட்டுப் பிள்ளை. பெரிய வசதிக்காரப் பய. படிப்பில பிடிப்பே இல்லே. என்ன காரணமோ தெரியலே... என்மேல அவனுக்கு ஒரு விருப்பம். என்னைய ‘அண்ணே... அண்ணே’ன்னு சுத்திச் சுத்தி வருவான்.

அம்மாவுக்கு வந்த ஆஸ்துமா இருக்கே... கொஞ்சம் கொஞ்சமா ஆளைக் கொல்லக்கூடிய நோய் அது. வேளாவேளைக்கு மருந்து சாப்பிட்டாகணும். இல்லேன்னா உயிரைப் புடிச்சு இழுக்கும். மருந்து வாங்க மட்டும் மாசம் 30 ரூபா தேவைப்படும். எங்க குடும்பத்தோட ஒட்டுமொத்த வருமானமே அந்த 30 ரூபாய்க்குள்ளதான் இருக்கும். அப்புறம் எப்பிடி அம்மாவுக்கு மருந்து வாங்குறது? காலையில நான் பள்ளிக்கூடம் கிளம்புற நேரத்தில, என் காலப் புடிச்சிக்கிட்டு அம்மா கதறி அழும்... ‘அடேய், அய்யா... மூச்சு விடமுடியலடா’ன்னு. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியாது. நானும் அழுவேன்.

பள்ளிக்கூடத்துல என் முகத்தை வச்சே என் பிரச்னையை புரிஞ்சுக்குவான் வாசுதேவன். ‘என்ன அண்ணே... அம்மாவுக்கு மருந்து வாங்கணுமா’ன்னு கேப்பான். எனக்கு உதவின்னு கேக்க வெக்கமா இருக்கும். ‘அட வாண்ணே’ன்னு கூட்டிக்கிட்டுப் போயி மருந்து வாங்கித் தருவான். இதுமாதிரி பலமுறை அம்மாவோட உயிரை மீட்டுக் குடுத்திருக்கான் வாசுதேவன். ஒருமுறை அவன் கையில பணமில்லே... போட்டிருந்த மோதிரத்தை கழட்டி அடகுவச்சு மருந்து வாங்கித் தந்தான்.

அவன் அடிக்கடி ஃபெயிலாகி ஃபெயிலாகி படிச்சான். தட்டுத்தடுமாறி எஸ்எஸ்எல்சியை தொடும்போது நான் கல்லூரிக்குப் போயிட்டேன். அவன் எஸ்.எஸ்.எல்.சிலயும் ஃபெயிலாகி மதுரையில ஒரு தனிப்பயிற்சிக் கல்லூரியில சேந்து படிச்சான். அங்கே, சும்மாயில்லாம ஒரு பொண்ணை காதலிக்க ஆரம்பிச்சுட்டான். அந்தப் பொண்ணும் அஞ்சாம் ஃபார்ம் ஃபெயிலாகி டியூஷன் படிக்க வந்த புள்ளைதான். ‘கட்டுனா இவனைத்தான் கட்டுவேன்’னு நின்னுருக்கு. ‘எனக்கும் அவளுக்கும் நீதாண்ணே வந்து கல்யாணம் பண்ணி வைக்கணும்’னு இவன் வந்து என்கிட்டே நிக்கிறான். ‘டேய்... அவசரப்பட்டு வாழ்க்கையைக் கெடுத்துக்காதடா. கல்யாணத்துக்கு இது சரியான வயசில்லடா. உன் குடும்பத்துக்குன்னு பெரிய மரியாதை இருக்கு. பொறுமையா இரு’ன்னு எவ்வளவோ சொல்லிப் பாக்குறேன். எதையும் கேக்குற நிலைமையில அவன் இல்லே. அழறான்... ‘நீயெல்லாம் நண்பனாடாÕன்னு திட்டுறான். ‘நீ உதவி செஞ்சே ஆகணும்’னு மல்லுக்கு நிக்குறான்.

காதல் ஒரு மனுஷனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கும்னு அப்போதான் நேரா பாத்தேன். அவ எனக்குன்னே பொறந்தவ, போன ஜென்மத்து பந்தம், அவ இல்லேன்னா எனக்கு வாழ்க்கையே இல்லைÕன்னு அவன் புலம்புன புலம்பல் இருக்கே... நினைச்சாலே வியப்பா இருக்கு. ஒரு நோட்டைத் தூக்கி என்கிட்ட வீசுனான். அதுல பாத்தா, அந்த புள்ளை நோட்டு பூராவும் இவன் பேரையே எழுதி வச்சிருக்கு. ‘பாத்தியா.. அவளுக்கு எம்மேல உள்ள காதலை... கட்டிக்க முடியாதுன்னு சொன்னா செத்துருவாடா. ஆபத்து சமயத்தில உதவுறவன்தாண்டா நல்ல நண்பன். நீயல்லாம் நண்பனா? வாழ்ந்தா ரெண்டு பேரும் சேந்து வாழுவோம். இல்லேன்னா சேந்தே செத்துருவோம்’னு அடம் புடிக்கறான்.

நானும் எவ்வளவோ சொல்லிப்பாக்குறேன். ரெண்டு வருஷம் பொறுமையா இருடா. பெறகு பாக்கலாம்’னு தள்ளிவிட்டுப் பாக்குறேன். ம்ஹும்... எதுவும் எடுபடலே. ஒருநாளு வெளியில தெரியாம ரெண்டு பேரும் ஊரைவிட்டு கிளம்பி இருக்காங்க. எனக்கு இந்தச் சம்பவம் எதுவும் தெரியாது. பள்ளிக்கூடம் விட்டு நேரா வீட்டுக்குப் போறேன். வீட்டு வாசல்ல, என்னை எதிர்பார்த்துக்கிட்டு ஆவேசமா உக்காந்திருக்கு எங்க அம்மா..! அடுத்த வாரம் சந்திப்போமா!
சாலமன் பாப்பையா