கடிதம் எனப்படுவது



‘லெஸ் மிஸரபிள்ஸ்’ நாவலை எழுதிய உலகப்புகழ்பெற்ற பிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹ்யூகோ அதை எழுதிவிட்டு வெளியூர் போய்விட்டார். நாவலின் விற்பனை எப்படி எனத் தெரிந்துகொள்ள அவர் நூல் வெளியீட்டாளருக்கு எழுதிய கடிதம்தான் மிகச்சிறிய கடிதமாக இருக்க முடியும். கடிதத்தில் இருந்த செய்தி‘?’
அதற்கு வந்த பதில் ‘!’

முகவரி கண்டுபிடிக்க முடியாத கடிதங்கள் என்ன ஆகின்றன? முன்பெல்லாம் அவை டெட் லெட்டர் ஆபீஸ் என்னுமிடத்துக்கு அனுப்பப்பட்டு, பிரித்து படிக்கப்பட்டு, கூடுமானவரை ஏதேனும் க்ளூவை வைத்து உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டன. இப்போது அவை போகும் இடம் ரிட்டர்ன் லெட்டர் ஆபீஸ் எனப்படுகிறது.

பிரபலமானவர்களின் கடிதங்களை வைத்திருப்போர் அவற்றைப் புகழ்பெற்ற ஏல நிறுவனங்களிடம் ஒப்படைப்பதும், அந்நிறுவனங்கள் அவற்றை ஏலமிட்டு விற்பனை செய்வதும் வழக்கம். இந்துக்களும் முஸ்லிம் மக்களும் பரஸ்பரம் அன்போடும் இணக்கத்தோடும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மகாத்மா காந்தி எழுதிய 18 கடிதங்கள் இங்கிலாந்தில் 1998ல் ஏலத்துக்கு வந்தன. இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களே அவற்றை ஏலத்தில் எடுத்தனர்.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் தனது உறவினரான புஷ்ராட் என்பவருக்கு 1787ல் எழுதிய 4 பக்கக் கடிதம் இந்திய மதிப்பில் பதினாறு கோடியே ஒன்பது லட்சம் ரூபாய்க்கு நியூயார்க்கில் ஏலம் போனது. இதுவே இதுவரை உலகில் அதிகம் விலைக்கு ஏலம் போன கடிதம். இக்கடிதத்தை புஷ்ராடின் வழித்தோன்றல்கள் இருநூறு ஆண்டுகளைத் தாண்டியும் பாதுகாத்து வந்திருக்கின்றனர்.

அபூர்வமான கடிதங்களைத் தொகுத்து, ‘காணக் கிடைக்காத கடிதங்கள்’ என்ற நூலை பி.எல்.முத்தையா வெளியிட்டுள்ளார். பாரதியார் காந்திஜிக்கு எழுதிய கடிதம் போன்றவற்றை அந்நூலில் காணலாம். அக்கடிதம் இப்படி ஆரம்பிக்கிறது...

‘இந்தியா ஆபீஸ் பிராட்வே, மதராஸ்
18 அக்டோபர்1907.
அநேக நமஸ்காரம்,
ஒவ்வொரு காலத்துச் சோம்பர் மிகுதியாலும், ஒவ்வொரு காலத்தே முயற்சி மிகுதியாலும், தங்களைப் போன்ற பெரியோர்களுக்கு அடிக்கடி கடிதங்களெழுதிப் புனிதத்தன்மை பெறுவதற்கு அவகாசமில்லாதவனாக இருக்கின்றேன்...’
 அமெரிக்காவை கிண்டலாக அங்கிள் சாம் என்று அழைப்பார்கள். அந்த ‘அங்கிள் சாம்’ அவர்களுக்கு, சதத் ஹசன் மண்டோ என்ற புகழ்பெற்ற கதாசிரியர் 1951 & 1954 காலகட்டத்தில் எழுதிய கடிதங்கள் அரசியல் நோக்கர்களால் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டன.கடிதங்களைக் கொண்டே நாவல் எழுதும் உத்தி எபிஸ்டோலரி எனப்பட்டது. லத்தீன் வார்த்தையான எபிஸ்டோலா என்பதற்குக் கடிதம் என்று பொருள். கடிதங்கள் நிஜவாழ்வைப் பிரதிபலிப்பதாக அமைவதால் நாவலின் நம்பகத்தன்மை கூடுகிறது. இவ்வகையில் முதல் முயற்சியாக, டியகோ டி ஸான் பெட்ரோ என்ற ஸ்பானிஷ் நாவலாசிரியர் எழுதிய ‘ப்ரிஸன் ஆஃப் லவ்’ என்ற நாவலைச் சொல்வார்கள்.

1945ல் வெளிவந்த லவ் லெட்டர்ஸ் என்னும் திரைப்படம் ஏராளமான விருதுகளைக் குவித்தது. வில்லியம் டையடர்ல் என்பவரால் இயக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நண்பனின் சார்பில் நண்பனின் காதலிக்காக ஒருவன் எழுதும் கடிதங்கள் முக்கியமான இடத்தைப் பெறும்.தமிழ்த் திரைப்படங்களிலும் கடிதங்கள் அதிக அளவில் பங்கு பெற்றிருக்கின்றன. பழைய திரைப்படங்களில் சில கதாபாத்திரங்கள் கடிதங்களைப் படிப்பதைக் காண்பிப்பார்கள். அக்கடிதத்தில் எழுதியவர் முகம் பேசுவதைப் போலக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
சில பாடல்கள் கவிதை வடிவிலேயே இருக்கும்... ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் வரும், ‘அன்புள்ள மான்விழியே! ஆசையில் ஓர் கடிதம்’ ஓர் உதாரணம். ‘சாந்தி’ திரைப்படத்தில் விஜயகுமாரி, ‘செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்’ எனக் கடிதத்திலே பாடலாகப் பாடி அனுப்புவார். ‘ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது’ எனத் தபால்காரர் கதாபாத்திரம் பாடுவதாகக் ‘கௌரி கல்யாணம்’ படத்தில் காட்சி அமைத்திருப்பார்கள்.

‘நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்’ என்று ‘பேசும் தெய்வம்’ படத்தில் ஒரு பாடலில் கடிதம் இடம்பெறும்.

‘ராணித்தேனீ’ படத்தில் ஏவிஎம் ராஜனின் புதல்வி மகாலட்சுமி கதாநாயகி. காதல் கடிதம் எழுதத் தெரியாமல் பல காகிதங்களைக் கசக்கிப்போட்டு விட்டு, ‘என்ன சொல்லி நான் எழுத? என் மன்னவனின் மனம் குளிர?’ என்று பாடுவதாகக் காட்சி இருக்கும். ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனின் உள்ளங்கையில், காதலி எழுதிய மிகச்சிறிய கடிதத்தை ஜெராக்ஸ் எடுப்பதைப் போலக் காட்சி இருக்கும்.

அலுவலக நடைமுறைகளைக் கிண்டலடிக்கும் ஜோக் இது. ஓர் அலுவலகத்தில் தேவையற்ற கடிதங்கள் முப்பதாண்டுகளாகச் சேர்ந்திருந்ததாம். இளந்தாரியான ஓர் அலுவலர் தேவையற்று இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கடிதங்களை அழிப்பதற்கு உயரதிகாரிகளுடன் பல கடிதப் போக்குவரத்துகள் நடத்தி, ஓராண்டு மல்லுக்கட்டி ஒரு வழியாக அனுமதியும் பெற்றுவிட்டார். அனுமதிக் கடிதம் இவ்வாறு அறிவுறுத்தியது...

‘உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்தத் தேவையற்ற கடிதங்களை அழித்து விடவும். அழிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு கடிதத்திலும் மூன்று நகல்கள் எடுத்து வைத்துக்கொண்டு பிறகு அழிக்கவும்.’

அண்டை மாநில முன்னாள் முதல்வர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு கிசுகிசு நிலவுகிறது. அவரது ஒப்புதல் கேட்டு வரும் மிக முக்கிய கடிதங்களுக்கான குறிப்புகளுடன் கோப்பு அவருக்குச் செல்லுமாம். எடுத்த எடுப்பில் ழிளிஜி கிறிறிஸிளிக்ஷிணிஞி (ஏற்றுக்கொள்ளப்படவில்லை) என்று திருப்பியனுப்பி விடுவாராம். பின்னர் அவர் திருப்தியடையும் வண்ணம் காரியங்கள் நடந்தேறினால் அதே கடிதத்தினை வரவழைத்து, தான் முன்னர் எழுதிய ழிளிஜி கிறிறிஸிளிக்ஷிணிஞி ல் உள்ள ழிளிஜி என்பதுடன் ஒரு ணி சேர்த்து ழிளிஜிணி கிறிறிஸிளிக்ஷிணிஞி என்று மாற்றி விடுவாராம்! (குறிப்புகளை ‘நோட்’ என்பார்கள்.)

பத்திரிகைகளுக்குத் தொடர்ந்து வாசகர் கடிதம் அனுப்புவதைச் சிலர் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த சுபாஷ் அகர்வால் பல்வேறு பத்திரிகைகளின் வாசகர் கடிதம் பகுதிக்கு 31.1.2006 வரை 3,699 கடிதங்கள் எழுதியும் அவரது மனைவி மது அகர்வால் 2004ம் ஆண்டில் 447 கடிதங்களை எழுதியும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கின்றனர். அயன்புரம் சத்தியநாராயணன் பெயரை ஏறக்குறைய எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளின் வாசகர் கடிதத்திலும் பார்க்கலாம்.

கோவை புலியகுளத்திலுள்ள அந்தோணியார் ஆலயத்தில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வேண்டுதல் கடிதங்களையும், அவை நிறைவேறிய பின்னர் நன்றி தெரிவித்துக் கடிதங்களையும் அந்தோணியாருக்குச் சமர்ப்பிப்பது வழக்கம்.

சமீபத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்த ஒரு துணுக்கை லேசாக மாற்றிக் கீழே கொடுத்திருக்கிறேன்.

80 வயதுப் பாட்டிக்கும் 25 வயதுப் பேத்திக்கும் நடைபெற்ற உரையாடல்:
பேத்தி: தாத்தாவுக்கும் உனக்கும் கல்யாணம் எப்படி ஆச்சு?
பாட்டி: அதுவா? அப்ப எனக்கு 25 வயசிருக்கும். லண்டன்ல இருந்தேன். ஜேம்ஸ், பாரீஸ்ல இருந்தார். என் மேல ரொம்ப பிரியம் அவருக்கு. வாரத்துக்குக் குறைந்தது 3 காதல் கடிதமாவது போடுவார்.
பேத்தி (இடைமறித்து): அதில மயங்கி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாக்கும்?
பாட்டி: இல்லை. அந்த லெட்டர்களைக் கொண்டுவந்து கொடுத்துக்கிட்டிருந்த போஸ்ட்மேனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.(அடுத்து...)

லதானந்த்