கனவுக் கன்னி 2011



தங்கம், பெட்ரோலை தொடர்ந்து வெங்காயமும் விலையேறிப் போன வயிற்றெரிச்சலில் மக்கள் தவிக்க, இளசுகளின் கவலையெல்லாம் வேறு... அரசியல் சிம்மாசனத்தில் அடுத்து யார் என்பதற்கு இணையாக, கோலிவுட்டின் அடுத்த கனவுக்கன்னி யார் என்கிற தலைவெடிக்கிற கேள்வி அவர்களுக்கு! இந்த ஆண்டு மக்கள் மனதில் யாருக்கு அந்த சிம்மாசனம்?

அதற்காகவே ஐந்து மெட்ரோ நகரங்களில் எடுக்கப்பட்டது இந்த வாக்கெடுப்பு. ஆச்சர்யம்... ஸ்ரேயா, ஜெனிலியா, நயன்தாரா எல்லாம் செல்லங்கள் லிஸ்ட்டில் இல்லை. பாலிவுட்டுக்கு போய் விட்டதால் அசினை மறந்திருக்கிறார்கள். அங்கிருந்து வந்த ஐஸ்வர்யாராயையும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். இளமைப் பட்டாளத்தின் ஆதரவு ஓஹோ என்று இருப்பது தமன்னாவுக்கு! பையன்கள் என்றில்லை... பெண்களும் கிறங்குகிறார்கள் தமன்னா பெயருக்கு. அடுத்து அனுஷ்கா.

சென்னை:

சஞ்ஜனா: முதல் படத்துலயே மனசைக் களவாண்டுட்டுப் போன 'களவாணி’ ஓவியாதாங்க நம்ம ட்ரீம்கேர்ள். நடிச்சது ஒரு படமா இருக்கலாம். ஆனா ஓவர்நைட்ல அத்தனை பேரையும் தூக்கம் இழக்க வச்சிட்டாங்கல்ல...

ஸ்ரீகாந்த்: தமிழ்நாட்டு மருமகளாகப் போகிற தமன்னாவுக்குத்தான் என் ஓட்டு. புதுசு புதுசா எத்தனை நடிகைகள் வந்தாலும், தமன்னாவை யாராலயும் ஓரங்கட்ட முடியாது.

சிவரஞ்சனி: சந்தேகமே இல்லாம அனுஷ்காதாங்க. ‘அருந்ததி’யா மிரட்டும்போதும் சரி, ‘சிங்க’த்துல சிணுங்கும்

போதும் சரி... ஸோ ஸ்வீட்! அது தெரிஞ்சுதான் ஸ்வீட்டின்னு பேர் வச்சிருக்காங்க போல!

சாவித்ரி: பர்சனல் விஷயங்களை எல்லாம் ஒதுக்கிட்டுப் பார்த்தா, நயன்தாராதான் நம்பர் ஒன். ‘யாரடி நீ மோகினி’ மாதிரி ஹோம்லி கேரக்டரோ, ‘பில்லா’ மாதிரி கிளாமரோ... எல்லாத்துக்கும் பொருந்திப் போகிற முகம் அவங்களுக்கு.

யுவஸ்ரீ: த்ரிஷா மாதிரி ஒரு நடிகை இனிமே பிறந்தாத்தான் உண்டு. எந்த டிரஸ்லயும், எந்த கேரக்டர்லயும் அவங்களை ரசிக்க முடியும்.

சுஜிதா: நம்பர் ஒன் எலக்ஷன்ல எந்த நடிகைக்கும் டெபாசிட்கூட கிடைக்காது. பின்னே... அமலா பாலை எதிர்த்து நிற்க இங்க யாருக்காச்சும் தில்லு இருக்குமா?

அஜய்: தமிழ் சினிமால ஜோதிகா விட்டுட்டுப் போன இடம் ரொம்ப நாளா காலியா இருந்தது. தமன்னா வந்து அந்தக் குறையைப் போக்கிட்டாங்க. அவங்களைப் பெத்தாங்களா இல்லைனா செஞ்சாங்களானு கேட்கணும்.

சேலம்:
ஹேமலதா: தமன்னாதான் இந்த ஆண்டு ட்ரீம் கேர்ள். எந்த ஹீரோவோட நடிச்சாலும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிறது. மாடர்ன் டிரஸ் நச்சுனு இருக்கு. டான்சும் சூப்பர்.

சரண்யாதேவி: என் கனவுக் கன்னி ஸ்ரேயா. அவங்க ஸ்ட்ரக்சர் அழகு. டான்ஸ்ல ஸ்பீட். பாரம்பரிய உடைக்கும் பக்குவமாக பொருந்தும் ரகம்.

ஷாம்லி: என் ஓட்டு தமன்னாவுக்கு. சைல்டு பேஸ். யாருக்கும் அவரைப் புடிக்கும். எந்தக் கேரக்டருக்கும் வளைஞ்சு கொடுக்கும் இயல்பு. தோள்ல கை போட்டுப் பேச நினைக்கிற ஃபிரண்ட் மாதிரி  இருக்கங்க. 

பெனாசிர்: நான் அனுஷ்காவுக்கு கொடி பிடிக்கறேன். ஹைட், எந்த உடைக்கும் பொருந்தும் ஸ்ட்ரக்சர், கூடவே நடிப்பு, டான்ஸ்னு அனுஷ்கிட்ட இருக்கும் பிளஸ் பாயின்ட்ஸ் பட்டியல் போட்டா நீண்டுக்கிட்டே போகும்.

தேவி கார்த்திகா: என் ஓட்டு அனுஷ்காவுக்கே. தமிழ் நெஞ்சங்களில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிற அத்தனை தகுதியும் அனுஷ்காவுக்கு மட்டுமே உண்டு.

கோவை
அருண்: கனவுக்கன்னின்னா அது ஜெனிலியாதான். ஜாலியான பொண்ணு. நடிப்பிலும் சுட்டி, மாலிவுட், கோலிவுட், பாலிவுட்னு பின்றாங்க. ஹீரோக்கள் எல்லோரோடயும் நடிக்கிற மாதிரியான ஸ்டைல் பேஸ். 

நிரஞ்சன்: டான்ஸ், காஸ்ட்யூம் எல்லாத்துக்கும் சிக்குன்னு பொருந்தற ரகம். எவ்வளவு ஃபேன்சியா டிரஸ் பண்ணினாலும் கண்களை உறுத்தாத அழகு. அனுஷ்கா தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருக்கும் சொக்கத் தங்கம். தங்கத்துக்குத்தான் எப்பவும் சிம்மாசனம்.

சிஷெல்பா: அனுஷ்காவோட பலமே க்யூட்டான நடிப்புதான். யூத் லுக். எந்த டிரஸ்ஸிலும் அவ்ளோ அழகு. இந்த வருஷம் அனுஷ்தான் கனவுக்கன்னி.

பிரியங்கா: அழகு, நடிப்பு, திறமைன்னு லிஸ்ட் போட்டால் அதில் முதல் இடம் அசினுக்குத்தான். பாலிவுட் பக்கம் போயிருந்தாலும் ‘காவலன்’ல மறுபடியும் செகண்ட் ரவுண்ட் அடிக்கப் போறாங்க.

மதுரை 
வெண்ணிலா: அனுஷ்காவுக்குத்தான் அந்த இடம். நடிப்பு, நடனம், அழகு எல்லாமே ஸ்பெஷல்.

இதயராணி: த்ரிஷா. அழகாக இருக்காங்க. நடிப்புலயும் பின்றாங்க. தேவதைகளுக்குத்தானே கனவுக்கன்னி பட்டம் சரியா வரும்!

விஜயலெட்சுமி: த்ரிஷாதான் என் சாய்ஸ். நல்ல உயரம்; செம அழகு; நடிப்புலயும் மனசைக் கிள்றாங்க.

ஷீபா: அனுஷ்கா. நல்ல உயரம். எல்லா கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கக்கூடியவர். மேக்கப் இல்லாமலே அழகாக தோன்றக்கூடியவர்.

அபிராமி: அனுஷ்கா. எல்லா கேரக்டருக்கும் பொருத்தமாக இருப்பாங்க. நல்ல நடிகை.

பூபதி: தமன்னா. நடிப்புலயும் அழகுலயும் தனி ரகம். அவங்கதான் என் கனவுக்கன்னி.

சிஞ்சு: தமன்னா. எதார்த்தமா நடிப்பாங்க; குழந்தை மாதிரி முகம். ட்ரீம் கேர்ள் தகுதி அவங்களுக்குத்தான் இருக்கு.

உதயகுமார்: த்ரிஷா. அழகா இருக்காங்க. நல்லா நடிக்கவும் செய்யறாங்க. இது ரெண்டும்தானே கனவுக்கன்னிக்கு தகுதிகள்!

பாலமுருகன்: தமன்னா. சுறுசுறுப்பான நடிப்பு. வெகுளித்தனமான முகம்னு பின்னிப் பெடலெடுக்கறாங்க.

பாபு: தமன்னா. இயல்பா துறுதுறுன்னு நடிக்கறாங்க. க்யூட்டாவும் இருக்காங்க. அவங்களை மிஞ்ச யாராவது பொறந்து வரணும். 

சத்யநாராயணன்: தமன்னா. நல்லா நடிக்கறாங்க. நிறைய படங்கள்ல வர்றாங்க. எந்தப் பிரச்னையிலும் சிக்கினதில்ல.

திருச்சி:

மகேந்திரன்: அமலா பால்தான் 2011ம் ஆண்டு கனவுக் கன்னி. குழந்தை முகம், யதார்த்தமான நடிப்பு... அடுத்த சில ஆண்டுகளுக்கு அமலாதாங்க பசங்களின் மனம் கவர்ந்த நாயகி.   

ராகினி: என்னுடைய சாய்ஸ் தமன்னா. கல்லூரி மாணவர்களின் விருப்பமாக இருக்கிறார். நல்ல உடைகளில் கவனம் செலுத்துகிறார். டான்ஸ் அருமையாக செய்கிறார். இயல்பாக நடிக்கிறார். 

சர்மிளா: எப்போதும் இளமையாக இருக்கும் ஐஸ்வர்யாதான் 2011லும் கனவுக் கன்னி. வசீகரிக்கும் கண்கள், இயல்பான நடிப்பு, நளினமான நடனம். எல்லாவற்றையும் விட வயது ஏற ஏற, கூடும் இளமை என ஐஸ்சின் பெருமை அதிகம். ஸோ, எவர்கிரீன் கனவுக் கன்னி ஐஸ்தான்.

மலர்மன்னன்: ஸ்ருதிகமல்தாங்க.  ‘ஏழாவது அறிவு’ ரிலீஸ் ஆகட்டும்... மற்றவங்களை பின்னுக்கு தள்ளி விட்டு, ஒரு ரவுண்ட் வருவார் பாருங்க... 

கார்த்திக்: அனுஷ்காதாங்க 2011 கனவுக் கன்னி. அசர வைக்கும் உயரம். பரவசம் கொள்ளச் செய்யும் முகம். நடனம், நடிப்பு, கிளாமர் என பின்னி எடுக்குறாங்க. காலேஜ் பசங்க அனுஷ்கா படத்தைத்தான் ஆசையா வச்சுருக்காங்க...

ஜூலி: அமலா பால். நடிப்பு என்று தெரியாத அளவுக்கு இயல்பாக இருக்கும் முகபாவனை, ரசிக்க வைக்கும் முகம் ஆகியவற்றால் என் ஓட்டு அமலாவுக்கு தாங்க.

யூனுஸ்: அசின்தாங்க நம்ம கனவுக் கன்னி. அசின் வர்றப்ப தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தம் அதிகமா கேட்கிறது. அவர்தான் 2011ன் கனவுக் கன்னி என்பதில் மாற்றமே இல்லை.

ஸ்ரீதேவி: சின்னப் பசங்க முதல் இளைஞர்கள் வரை தமன்னாவை ரசிக்கிறாங்க. நல்ல முகபாவனை, அழகான டிரஸ்சிங், நடனம் என எல்லாமே சூப்பர்ங்க. தமன்னாவை விட்டா வேற யாருக்கு ‘கனவுக்கன்னி’ வாய்ப்பு கிடைக்கப் போகுது?

 ஆர்.வைதேகி, ஸ்ரீதேவி,
ஆர்.ஜெயலெட்சுமி,
ஜோ.மகேஸ்வரன்