ராசி கோயில்கள்



இருபத்தேழு நட்சத்திரங்களிலேயே விளையாட்டுத்தனம் நிரம்பிய நட்சத்திரம் இதுதான். எத்தனை வயதானாலும் இளமையாகத் தோற்றமளிக்க விரும்புவீர்கள். அலங்காரப் பிரியர்கள். திட்டமிடும் கிரகமான புதனே ரேவதியை ஆட்சி செய்கிறது. எழுந்துவிட்டால் வேலையை படபடவென்று முடிப்பீர்கள். இல்லையெனில் அப்படியே கிடப்பீர்கள். எதிர்பார்த்த மாதிரி குடும்பம் அமையாது சில காலம் கஷ்டப்படுவீர்கள். ‘நமக்கு அமைஞ்சது அவ்ளோதான்’ என்று அப்புறம் தேற்றிக் கொள்வீர்கள். புதனின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் சமயோசித புத்தி அதிகமாக இருக்கும். எப்போதும் குழுவோடு எங்கேயாவது சென்றபடி இருப்பீர்கள். எதற்கும் பாராட்டை எதிர்பார்ப்பீர்கள்; கிடைக்காவிட்டால் சோர்ந்துவிடுவீர்கள். மிதமிஞ்சிய கற்பனைத்திறன் உண்டு. இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவீர்கள். கோபப்பட்டாலும் குழந்தைத்தனம் கூடவே இருப்பதால் உங்களைக் கணிக்க முடியாமல் பலரும் திண்டாடுவார்கள். எது மார்க்கெட்டுக்கு புதியதாக வருகிறதோ அதை உடனே வாங்கி உபயோகிப்பீர்கள்.

 ரேவதி நட்சத்திரக்காரர்களின் முக்கிய பலவீனமே அலட்சியம்தான். ‘நம்மை மீறி என்ன ஆகிடப்போகுது. கடைசி நேரத்துல பார்த்துக்கலாம்’ என்றிருப்பீர்கள். பேரன், பேத்தி எடுத்தாலும் அவர்களின் ரசனைக்குத் தகுந்தவாறு பேசுவீர்கள். பொதுவாகவே 21 வயது வரை சளித் தொந்தரவு இருக்கும். நீங்கள் தைரியசாலிதான். ஆனால், நோயுற்றால் பதறிப் போவீர்கள். உறவினர்களை காட்டிலும் அன்னியர்களிடம்தான் அதிகம் பழகுவீர்கள். எவருக்கும் அவ்வளவு எளிதில் உதவியும், உபத்திரவமும் செய்யாத சுயநலவாதிகளாக இருப்பீர்கள். தன்னிடமிருக்கும் பொருளை அவ்வளவு எளிதாக யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். ரேஷன் கார்டில் தன் பெயரோடு இருப்பவர்களைத் தவிர்த்து, வேறு யாருக்கு எது செய்ய வேண்டுமென்றாலும் பலமுறை யோசித்துத்தான் செய்வீர்கள். அப்படிச் செய்தாலும் அதற்கு கணக்கு வைத்திருப்பீர்கள்.  

கார்த்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, உத்திரம், விசாகம், அவிட்டம், உத்திராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் நீங்கள் உயர்வீர்கள். அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, கேட்டை, மூலம், பூராடம், ரேவதி, போன்ற நட்சத்திரக்காரர்களால் செலவு வரும். செல்வகுமார், நிரஞ்சன், சந்திரசேகர், விஜயன், ஜெகன், அர்ஜுனன், கங்காதரன் போன்றோர் ஓடி வந்து உதவுவார்கள். மூர்த்தி, கஜேந்திரன், சூர்ய நாராயணன், வாசுதேவன், பார்த்திபன், பத்மநாபன் போன்ற பெயருள்ளவர்கள் யோசிக்க வைப்பார்கள். இவை ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரவலான பலன்கள். ஜாதகத்தில் நீங்கள் பிறந்த நட்சத்திரம் சொல்லும்போதே எந்தப் பாதம் என்றும் கூடவே குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் எந்தப் பாதம் என்று தெரிந்துகொண்டு படியுங்கள்.

முதல் பாதத்தை தனுசு குரு ஆட்சி செய்கிறார். ராசியாதிபதியாக மீனகுருவும், நட்சத்திர அதிபதியாக புதனும் வருகிறார்கள். இரண்டு குருவின் சக்தி ஒன்றாக வருவதால் தலைமைப் பண்பு மிக்கவர்களாக விளங்குவீர்கள். ஏறக்குறைய 14 வயது வரையிலும் புதன் தசை நடக்கும். புதன் நரம்புகளுக்கு உரியவனாக இருப்பதால் இந்த தசை நடக்கும்போது குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறு வந்து நீங்கும். செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கு உண்பீர்கள். ஏதேனும் கற்றுக் கொண்டே இருப்பீர்கள். தாயார் நோய்வாய்ப்பட்டு குணமடைவார். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை வேறு விஷயங்களோடு தொடர்புபடுத்திப் பேசுவதில் வல்லவர்கள். குழந்தையின் மழலைத்தனம் 14 வயதுவரை இருக்கும். 15லிருந்து 21 வயதுவரை கேது தசை நடைபெறும். நட்சத்திர நாயகனான புதனுக்கு பகைக்கோளாக இருப்பதால் நெருங்கிய வட்டத்தை விட்டுப் பிரிந்து விடுதி வாழ்க்கை வாழ்வீர்கள். ஆனால், பிரிவிலும் நல்ல எதிர்காலம் தெரிவதை உணர்வீர்கள்.

22 வயதிலிருந்து 41 வரை சுக்கிர தசை நடைபெறும். சாதாரணமாக சுக்கிர தசை எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொட்டித் தரும். ஆனால், உங்களுக்கு சுமாராகத்தான் இருக்கும். சுக்கிரனுக்கு குரு பகைக் கோளாக இருப்பதால் எதிர்பார்த்த சுக பலன்கள் தாமதமாகவோ, அலைய வைத்தோ கிடைக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் சொத்து வாங்க முடியாத நிலைமை இருக்கும். ஆனால் திருமணம், குழந்தை போன்ற விஷயங்களில் எந்தக் குறைவும் இருக்காது. 42லிருந்து 47 வயது வரையிலான சூரிய தசையில், சுக்கிர தசையில் கிடைக்காமல் போன நற்பலன்கள் ஒவ்வொன்றாகக் கிடைக்கும். ஏனெனில், சூரியனும், குருவும் நல்ல நண்பர்கள். செய்கின்ற தொழிலை விரிவுபடுத்த இது நல்ல காலகட்டமாகும். உங்கள் பெயர் பரவலாக வெளியில் தெரியும். 48லிருந்து 57 வயது வரை சந்திர தசையில் சிறுநீரகப் பிரச்னைகள் வந்து நீங்கும். மற்றபடிக்கு சாதாரணமாகத்தான் நகரும். 58லிருந்து 64 வயது வரை செவ்வாய் தசை நடைபெறும்போது திடீரென்று முன்னேற்றம் இருக்கும்.

உங்கள் ராசியாதிபதியான குருவுக்கு நட்பாக செவ்வாய் இருப்பதால் சந்திர தசையின் இன்னல்களிலிருந்து வெளிவருவீர்கள். இரண்டாம் பாதத்தின் அதிபதியாக மகரச் சனி வருகிறார். புதனும், சனியும் சேர்ந்து அமர்க்களமாக ஆளப்போகிறார்கள். இதில் பிறந்தவர்கள் தளராத மனமும், தடுமாறாத சிந்தனையும் கொண்டிருப்பீர்கள். கொஞ்சம் முன் கோபிகளாக இருப்பீர்கள். பள்ளிப் படிப்பை முடிப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். குடும்பத்தினரிடம்கூட விஷயங்களைச் சொல்லாமல் மனதுக்குள் மறைத்து வைத்திருப்பீர்கள். பத்து வயது வரைதான் புதன் தசை நடைபெறும். ஒவ்வாமை, வீசிங் போன்ற தொந்தரவுகள் இருக்கும். 11லிருந்து 17 வயது வரை நடைபெறும் கேது தசையில் எதிலும் ஒரு தடங்கல் இருக்கும். அடங்காதவர் என்று பெயரெடுப்பீர்கள். படிப்பதில் நாட்டமில்லாது கவனச் சிதறல்கள் அதிகமாக இருக்கும். தனிமையிலேயே இருப்பீர்கள். பலர் தாழ்வு மனப்பான்மையினால் யாருடனும் பேசாது இருப்பீர்கள்.
18லிருந்து 37 வயது வரை சுக்கிர தசை நடைபெறும் போது தெளிவான வாழ்க்கை தொடரும். விஸ்காம், ஆட்டோ மொபைல் துறையில் சாதிப்பீர்கள். கேது தசை கொடுத்த மோசமான அனுபவங்களிலிருந்து வெளி வருவீர்கள். கொஞ்சம் அமைதியா இருப்போம் என்று முடிவெடுத்து வேலை பார்ப்பீர்கள். சிறிய வயதில் நிறைய பணம் பார்ப்பீர்கள். இந்த சமயத்தில் பணத்தை ஜாக்கிரதையாக சேமியுங்கள். இல்லையெனில் பின் நாட்களில் சிரமப்படுவீர்கள்.

 சனி இப்போது சுக்கிரனோடு கைகோர்ப்பதால் எதிலும் ஒரு அழகியல் வெளிப்படும். இந்த வயதில் சொந்த தொழில் தொடங்குங்கள். நன்றாக வரும். இதற்குப் பிறகு வரும் 38லிருந்து 43 வயது வரையிலும் சூரிய தசை கொஞ்சம் சவாலாக இருக்கும். எவ்வளவு பணமிருந்தாலும் கௌரவமும், உயர்பதவியும்தான் முக்கியம் என்று எண்ணுவீர்கள். தந்தைக்கு கண்டம் வந்து நீங்கும். இதற்குப்பிறகு வரும் 44லிருந்து 53 வயது வரையிலான சந்திர தசையில் இன்னும் நன்றாக இருக்கும். உங்களின் சொந்த ஜாதகத்தில் உள்ள சந்திரன், குரு பார்வை பெற்றிருந்தால் விபரீத ராஜயோகம் ஏற்படும். இன்னொரு சுக்கிர தசை வந்துவிட்டது போன்ற நற்பலன்கள் தொடரும். செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் சனி மற்றும் புதன் சேர்க்கையோ, பார்வையோ பெறாமல் இருந்தால் நன்று. இல்லையெனில் ரத்த அழுத்தம், ஹிரண்யா பிரச்னையால் அவதிப்படுவீர்கள். 54லிருந்து 71 வயது வரை ராகு தசை வரும்போது மனதில் நிம்மதி பெருகும். ஏனெனில், ஒருவிதத்தில் ராகுவிற்கு சனி குருவாக வருகிறார். 

மூன்றாம் பாதத்தை கும்பச் சனி ஆளுகிறார். இதில் பிறந்தவர்கள் பணம், பகட்டு வாழ்க்கைக்கு அடிமையாக மாட்டீர்கள். ஆரவாரமில்லாது எந்த வேலையையும் முடிப்பீர்கள். எதிரியையும் மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவர்கள். அதனால் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று தெரியாமல் தடுமாறுவீர்கள். ஏறக்குறைய 7 வயது வரை புதன் தசை நடைபெறும். குழந்தைகளுக்குரிய துறுதுறுப்புடன் கூடிய முதிர்ச்சியும் கலந்திருக்கும். பெற்றோருக்கு இனிமையான காலமாக அமையும். 8லிருந்து 14 வயது வரை கேது தசை நடைபெறும்போது கொஞ்சம் சுமாராக காலம் நகரும். அடுத்ததாக 15லிருந்து 34 வயது வரை சுக்கிர தசை வரும்போது கிடுகிடுவென வாழ்க்கையே மாறிப்போகும். முதல் இரண்டு பாதங்களை விட சுக்கிர தசை உங்களுக்கு கூடுதலாகவே செல்வ வளத்தைத் தரும். மத்திம வயதுக்குள்ளாகவே நிறைய பணம் வருவதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அள்ளிவீசி செலவு செய்யாமல் குடும்பத்திற்குத் தேவையானதைச் செய்து விட்டு அமைதியாக இருக்க வேண்டும். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டீரியர் டெக்கரேஷன் என்று பல துறைகளைப் பிடித்து பரபரவென மேலேறுவீர்கள். 35லிருந்து 41 வயது வரை சூரிய தசை நடைபெறும்.

கொஞ்சம் தொழிலில் சறுக்கல் ஏற்பட்டு நிமிரும். ஏனெனில் சனி உங்களின் பாதத்திற்கு அதிபதியாக வருவதாலும், சூரியனுக்கு சனி பகைக்கோளாக இருப்பதாலும் ஏதேனும் தொந்தரவுகள் இருக்கும். 42லிருந்து 51 வயது வரை நடக்கும் சந்திர தசையில் பிரச்னைகள் குறையும். சனியும், சந்திரனும் கொஞ்சம் அனுசரித்துப் போவதால் எல்லாப் பிரச்னைகளும் கட்டுக்குள் இருக்கும். 52லிருந்து 57 வயது வரை வரும் செவ்வாய் தசையானது மன உளைச்சலை ஏற்படுத்தும். பொதுவாகவே ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு செவ்வாய் தசை அவ்வளவு நற்பலன்கள் தராது. இந்த ஏழு வருடங்கள் எப்போது நகரும் என்று படுத்தியெடுக்கும். அதற்குப் பிறகு 58லிருந்து 75 வயது வரை நடக்கும் ராகு தசை யோகங்கள் நிறைந்ததாக இருக்கும்.
நான்காம் பாதத்தை மீன குருவோடு, நட்சத்திர அதிபதியான புதனும், ராசியாதிபதியான மீன குருவும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்கள். கிட்டத்தட்ட ஒன்றாம் பாதத்தின் பலன்கள் அப்படியே நடக்கும். முதல் பாதத்தின் அதிபதியாக தனுசு குரு ஆட்சி செய்தார். இதில் மீன குரு ஆள்வார்; அவ்வளவுதான். இதனால் எப்போதும் நியாயத்திற்காக போராடியபடி இருப்பீர்கள். குடும்பப் பாசத்தை பகிங்கரமாக காட்டத் தெரியாது. அன்பாக பரிமாறினால் பழைய சாதத்தைக்கூட பசியாற உண்பீர்கள்.

மூன்று வயது வரை நடக்கும் புதன் தசையின்போது பாலாரிஷ்டம் என்று சொல்லப் படும் ஏதாவது நோய்கள் வந்து நீங்கியபடி இருக்கும். 4லிருந்து 10 வயது வரை நடைபெறும் கேது தசையில் படிப்பை விடுத்து விளையாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். மீன குரு இந்தப் பாதத்திற்கு அதிபதியாக வருவதால் மதம் சார்ந்த வாழ்க்கை அமையும். இளம்வயதிலேயே, அதாவது 11லிருந்து சுக்கிர தசை தொடங்கி 30 வயது வரை இருப்பதால் அழகும் ஆரோக்கியமும் கூடும். கலைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இந்த சுக்கிர தசை பெற்றோரின் செல்வ நிலையை உயர்த்துவதாக அமையும். 26, 28, 29 வயதில் பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். 31லிருந்து 36 வயது வரை இருக்கும் சூரிய தசையில்தான் உண்மையான வாழ்க்கையே உங்களுக்குத் தொடங்கும். சமூகத்தில் ஏதேனும் உயர்ந்த பதவியில் அமர வேண்டுமென உழைப்பீர்கள். பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்கள். கௌரவத் தலைவராக நிறைய சங்கங்கள் உங்களை பொறுப்பில் உட்கார வைக்கும். சுக்கிர தசையில் தந்தையார் சம்பாதித்ததெல்லாம் இப்போது பன்மடங்கு பெருகும். 37லிருந்து 46 வயது வரை நடைபெறும் சந்திர தசையில் உங்கள் வளர்ச்சியை விட பிள்ளைகளின் புகழ் ஓங்கும். 47லிருந்து 53 வயது வரை செவ்வாய் தசை நடக்கும்போது ராஜ மரியாதையோடு வலம் வருவீர்கள். நட்சத்திர அதிபதியான புதனுக்கு செவ்வாய் கொஞ்சம் ஆகாத கிரகமாக இருந்தாலும், குருவினுடைய நெருங்கிய நட்பால் புகழ் பெறுவீர்கள். 54லிருந்து 70 வயது வரை நடக்கும் ராகு தசையும் ஏற்றம் மிகுந்ததாகவே இருக்கும்.

ரேவதி நட்சத்திரத்தின் அதிபதியாக புதன் வருகிறார். அதனால் எப்போதுமே பெருமாள் வழிபாடு மிகவும் நல்லது. மேலும், ரேவதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களையும் தனுசு குரு, மகரச் சனி, கும்பச் சனி, மீன குரு என்று ஆட்சி செய்கிறார்கள். குருவும், சனியும் சேர்ந்த ஆதிக்கமாக அமைகிறது. எனவே பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ள பெருமாளை வழிபடும்போது, குரு  சனி சேர்ந்த அமைப்பு கொஞ்சம் சமனப்படுகிறது. அதன் தீவிரமும் வேகமும் தணிக்கப்படுகிறது. உள்ளத்தில் குதூகலம் பெருகுகிறது. எனவே, பட்டாபிஷேகக் கோலத்தில் ஸ்ரீராமர் அருள்பாலிக்கும் கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்திற்கு சென்று வாருங்கள். இக்கோயில் கும்பகோணம் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளது.

மாற்றம் தரும் மந்திரம்

இந்த ஸ்லோகத்தை விடியற் காலையில் எழுந்து சொல்வது ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
ப்ராதர்வதாமி வசஸா ரகுநாதநாம
வாக்தோஷகாரி ஸகலம் கலுஷம் நிஹத்ய
யத் பார்வதீ ஸ்வபதினா ஸஹ போக்துகாமா
ப்ரீத்யா ஸஹஸ்ர ஹரிநாமஸமம் ஜஜாப

(முற்றும்)
முனைவர் கே.பி.வித்யாதரன்