இளைய தலைமுறையை தாக்கும் சர்க்கரை நோய்! தமிழகத்தை அதிரவைக்கும் நிஜம்






அதிக சோர்வு 

அதிகமான நா வறட்சி
அடிக்கடி நோய்த் தொற்று
பார்வை மங்குதல்
எடை குறைதல்
இதெல்லாம் இருந்தா உஷாராகுங்க!

தமிழகத்தில் இப்போது பத்தில் ஒருவர் சர்க்கரை நோயாளி! இதற்கே அதிர்ந்து போனால் எப்படி?

ஒவ்வொரு 25 பேரிலும் 2 பேர்களுக்கு சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு ‘ஆன் தி வே’யில் இருக்கிறது. அந்த இருவரில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும் என்றால்?
இப்படித்தான் சொல்கிறது லேட்டஸ்ட் ஆய்வறிக்கை. ‘தி மெட்ராஸ் டயபடீஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ (எம்.டிஆர்.எஃப்), ‘இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்’சின் (ஐ.சி.எம்.ஆர்) ஆதரவோடு, இந்தியா முழுவதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளது. முதல்கட்ட ஆய்வில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் சண்டிகர் என நான்கு பகுதிகள். இதில் தமிழகத்தின் ஆய்வு முடிவுகள் மட்டுமே இப்போதைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே 42 லட்சம் மக்களுக்கு நீரிழிவு இருப்பதும், இன்னும் 30 லட்சம் மக்கள் நீரிழிவு பாதிப்புக்கு முந்தைய கட்டத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்தக் கணக்குப்படி பார்த்தால், தமிழகத்தில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு! இதுதவிர 25ல் இருவருக்கு எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு வரும் அபாயம் இருப்பதாக அதிர வைக்கிறது அந்த ஆய்வு!

ஆய்வுக் குழு தலைவியும் எம்.டி.ஆர்.எஃப் பின் இயக்குனர் மற்றும் நீரிழிவு மருத்துவ நிபுணருமான ஆர்.எம். அஞ்சனாவை சந்தித்தோம்.

‘‘நீரிழிவால பாதிக்கப்பட்டவங்களைப் பத்தி பல இடங்கள்ல, பலவிதமான புள்ளிவிவரங்கள், ஆய்வுகள் எடுக்கப்பட்டிருக்கு. சிலது வெறுமனே நகர மக்களை மட்டுமே வச்சோ, கிராம மக்களை மட்டுமே வச்சோ நடத்தப்பட்டிருக்கலாம். மாநில ரீதியா, மாவட்ட ரீதியா கிடைக்கிற தகவல்களை வச்சு, அதை ஒட்டுமொத்த நாட்டுக்குமானதா கணக்கு பண்ண முடியாது.
நாளுக்கு நாள் பெருகிட்டிருக்கிற நீரிழிவு பாதிப்பைப் பத்தி, முழுமையான ஒரு ஆய்வை செய்யணும்னு தோணவே, ஐ.சி.எம்.ஆரை அணுகினோம். எந்த மாநிலத்தையும் மிஸ் பண்ணக் கூடாதுனு கேட்டுக்கிட்டாங்க. அதன்படி இந்தியால உள்ள அத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்லயும் இந்த ஆய்வை மேற்கொள்ளப் போறோம். இதில் தமிழ்நாட்டுல ஆய்வு இரண்டு கட்டங்கள் முடிஞ்சதால, அந்த ரிசல்ட்டை மட்டும் வெளியிட்டிருக்கோம். மாவட்ட ரீதியா பிரிச்சு, 20 வயசுக்கு மேற்பட்ட 4 ஆயிரம் மக்களை வச்சுப் பண்ணின இந்த ஆய்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பொருத்தமானதா இருக்கும்’’ என்கிற டாக்டர் அஞ்சனா, தமிழகப் புள்ளிவிவரம் கவலையளிப்பதைக் குறிப்பிடுகிறார்.

‘‘ஏற்கனவே பாதிக்கப்பட்ட 42 லட்சம் பேரைவிட, எந்த நேரமும் பாதிப்புக்கு உள்ளாகலாம்ங்கிற அபாய கட்டத்துல உள்ள 30 லட்சம் பேர்தான் கவலைக்குரியவங்க. ஏன்னா இது அவங்க விழிச்சுக்க வேண்டிய சரியான நேரம். வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சினு சில விஷயங்கள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சா, அவங்களை ஏற்கனவே நீரிழிவோட வாழ்ந்துக்கிட்டிருக்கற 42 லட்சம் பேர்கூட இணைய விடாம தடுக்கலாம்’’  எச்சரிக்கிற அஞ்சனா, சில ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவுக்கு இன்று இளவயது நீரிழிவுக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் அடிக்கோடிட்டு சுட்டிக் காட்டுகிறார்.

‘‘மாறிப்போன வாழ்க்கை முறை, கொழுப்பு நிறைஞ்ச சாப்பாடு, உடற்பயிற்சியே இல்லாம எப்போதும் டி.வி அல்லது கம்ப்யூட்டர் முன்னாடி கழிகிற பொழுது... இதெல்லாம்தான் இளவயசுக் காரங்களோட நீரிழிவுக்கான காரணங்கள். டீன் ஏஜ்ல உள்ளவங்கள்ல 6&ல ஒருத்தருக்கு பருமன்! நீரிழிவு, பருமன், ஹைப்பர் டென்ஷன்னு எல்லாமே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையதுங்கிற விழிப்புணர்வு நிறைய பேருக்கு இல்லை. நீரிழிவை, விதியோடவும் தலையெழுத்தோடவும் சம்பந்தப்படுத்திப் பேசற மடத்தனமும் மூடநம்பிக்கையும் இன்னமும் இருக்கிறதுதான் வேதனையா இருக்கு’’ என்கிறார்.

நீரிழிவு வந்தவர்களுக்கும், வராதவர்களுக்குமான ஆலோசனைகளைப் பட்டியலிடுகிறார் அவர்...

‘‘வந்தவங்களுக்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும்தான் முதல் சிகிச்சை. சர்க்கரை அளவை அதிகரிக்கிற மாதிரியான உணவுகளைத் தவிர்க்கணும். உடற்பயிற்சியைப் பத்தி ஆளாளுக்கு ஒரு குழப்பம் இருக்கு. வீட்டு வேலை செய்யறதைவிடவா பெரிய எக்சர்சைஸ்னு கேட்கற பெண்களை நிறைய பார்க்கறேன். பாத்திரம் தேய்க்கிறதும், சமைக்கிறதும், பெருக்குறதும் உடற்பயிற்சி ஆகாது. உடற்பயிற்சிங்கிறது தொடர்ச்சியா 30 நிமிடங்கள் பண்ண வேண்டியது. தொப்பை மற்றும் இடுப்புப் பகுதிகள்ல கொழுப்பு சேர விடாமப் பார்த்துக்க வேண்டியது ரொம்ப முக்கியம். முறையான சோதனை, தேவையான மருந்துகள் மூலம் இவங்க ஆரோக்யமான வாழ்க்கையை வாழலாம்.

நீரிழிவுக்கான முந்தைய கட்டத்துல உள்ளவங்களுக்கும் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும்தான் முதல் அட்வைஸ். அவங்க குறைக்கிற ஒவ்வொரு கிலோ எடையுமே முக்கியம்தான். நீரிழிவுக்கு முந்தைய நிலைல உள்ளவங்களுக்கு இன்னிக்கு மருந்துகள் இருக்கு. ஆனா, அது ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட உடல்நிலையைப் பரிசோதிச்சுப் பார்த்து கொடுக்கப்பட வேண்டியது.சுருக்கமா சொன்னா நீரிழிவை குணப்படுத்தத்தான் முடியாதே தவிர, கட்டுப்பாட்டுல வச்சுக்கிறதும், வராம தடுக்கிறதும் ஒவ்வொருத்தர் கைலயும்தான் இருக்கு’’ & எச்சரித்து முடிக்கிறார் அஞ்சனா.

 ஆர்.வைதேகி