கண் எதிரே...



தங்கை சுதாவுக்கு சென்னையில் ஐ.டி. வேலை கிடைத்த செய்தியை கணவன் குமாரிடம் சொல்லியவாறே டிபன் வைத்தாள் கீதா.

போன் மணி அடித்தது. ஊரிலிருந்து கீதாவின் அப்பா... ‘‘நம்ம சுதா உங்க வீட்டிலிருந்தே வேலைக்கு போய்ட்டு வரட்டுமா? இல்ல... ஃபிரண்ட்ஸோட ரூம் பார்த்துக்க சொல்லவா? நீ மாப்பிள்ளைகிட்ட பேசிச் சொல்லுமா...’’

‘‘நாம் சொன்னா அவர் நிச்சயம் கேப்பார்ப்பா. அவ எங்க வீட்லேர்ந்தே வேலைக்கு போகட்டும்...’’

கீதா போன் பேசிக் கொண்டிருக்கும் போதே குமார் டைனிங் டேபிளில் இருந்து கூப்பிட்டுக் கொண்டிருந்தான்... ‘‘கீதா... அந்த மிளகாப்பொடி போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊத்தேன்...’’ 
‘‘ஏங்க... சட்னி நல்லாத்தானே பண்ணியிருக்கேன். அப்புறம் மிளகாய்ப்பொடி வேறயா?’’  புலம்பிக்கொண்டே பரிமாறினாள்.

‘‘அப்படின்னா நீ டைனிங் டேபிள்ல மிளகாய்ப்பொடியை வைக்கக் கூடாது. கண்ணுல படுற மாதிரி சாப்பிடுற பொருள் இருந்தா அதையும் சாப்பிடணும்தானே தோணும்!’’  விளக்கம் அளித்தான் குமார்.

கீதா உடனே அப்பாவிற்கு போன் செய்தாள்... ‘‘நம்ம சுதா தனியா அவங்க தோழிகளோடவே சேர்ந்து ரூம் பார்த்து இருக்கட்டும்பா... நான் அப்பப்ப போய் பார்த்துக்கிறேன்...’’
கே.தியாகராஜன்