டேபிள் மேட் டிசைனிங்கில் திறமை காட்டலாம்!



‘‘நான் படிச்சது எம்.ஏ. எகனாமிக்ஸ். இன்னிக்கு அது எனக்கு சோறு போடலை. விளையாட்டா கத்துக்கிட்ட தையலும் டிசைனிங்கும்தான் என்னை பிசியா வச்சிருக்கு. எனக்குத் தெரிந்த அந்தக் கலையை நாலு பேருக்கு தினம் சொல்லிக் கொடுக்கிறதுல எனக்கு சந்தோஷமும்கூட’’ என்கிறார் ப்ரியா ரங்கநாதன். எம்பிராய்டரிங்கில் எக்ஸ்பர்ட்டான இவர், டேபிள் மேட் டிசைன் செய்வதிலும், அவற்றில் எம்பிராய்டரி செய்வதிலும் தனி நிபுணத்துவம் பெற்றவர்.

‘‘பத்தாவது படிக்கிறப்ப, பொழுதுபோக்கா எம்பிராய்டரிங் கத்துக்கிட்டேன். பாவாடை, சட்டை, புடவைக்கெல்லாம் போட்டுக்கிட்டிருந்தேன். டேபிள் மேட் எம்பிராய்டரிங் பண்றதைக் கத்துக்கிட்டதும், அதுல என் கவனம் திரும்பினது. டேபிள் மேட், டெலிபோன் மேட், டி.வி கவர், சோபா கவர், ஃப்ரிட்ஜ் கவர்னு எல்லாத்துக்கும் இந்த முறைல பண்ணலாம்’’ என்கிற ப்ரியா, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கும் வழி காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘மேட்டி கிளாத்னு சொல்ற பிரத்யேக துணிலதான் இதையெல்லாம் போட முடியும். அது மீட்டர் கணக்குல கிடைக்கும். அது தவிர, சாதாரண தையல் ஊசி, மேட்டி கிளாத்துக்கான நூல்... ஆக மொத்தம் 100 முதல் 150 ரூபாய் முதலீடு போதும்.’’

என்ன ஸ்பெஷல்? எத்தனை அளவுகள்?

‘‘டேபிள் மேட், டெலிபோன் கவர், டி.வி., ஃப்ரிட்ஜ் கவர் இல்லாத வீடுகளே இன்னிக்கு இல்லை. பிளாஸ்டிக் ஷீட்ல ரெடிமேடா வாங்கறது, ரொம்ப நாளைக்குத் தாக்குப் பிடிக்காது. துவைச்சா கிழிஞ்சிடும். மேட்டி கிளாத்ல பண்றது எத்தனை வருஷமானாலும் அப்படியே இருக்கும். அடிக்கடி துவைச்சு உபயோகிக்கலாம். எம்பிராய்டரி பண்ணினதுனு சொன்னா நம்ப முடியாத அளவுக்கு போட்டோ ஒட்டின மாதிரி அவ்வளவு தத்ரூபமா இருக்கும். கற்பனைக்கேத்தபடி இதையே குழந்தைங்களுக்கான கர்ச்சீப், சின்ன டவல், வாசலுக்கான தோரணம், திரைச்சீலை, ஃப்ரேம் போட்டு மாட்டக்கூடிய சாமி படம்னு எப்படி வேணாலும் பண்ணிக்கலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘அன்பளிப்பா கொடுக்க நல்ல சாய்ஸ் இது. சின்ன சைஸ் மேட் பண்ண 50 ரூபாய் செலவாகும்னா, அதை 200 ரூபாய்க்கு தாராளமா விற்கலாம். அளவைப் பொறுத்து லாபம் வேறுபடும்.’’

பயிற்சி?
‘‘சாதாரண எம்பிராய்டரி மாதிரி இல்லை இது. கணக்குப் பார்த்து, எண்ணி எண்ணிப் போட வேண்டியது. ஒரே நாள் பயிற்சிக்கு மெட்டீரியல்களோட சேர்த்து கட்டணம் 200 ரூபாய். இதுக்கான டிசைனிங் புத்தகங்கள் கடைகள்ல கிடைக்குது. அடிப்படையைக் கத்துக்கிட்டு, புத்தகங்கள் உதவியோட நிறைய டிசைன்கள் போடலாம்.’’
ஆர்.வைதேகி