‘டு லெட்’ திருடர்கள்!



கன்னக் கோல் வைப்பது, பூட்டை உடைத்துத் திருடுவது, தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பைக்கில் வந்து செயின் பறிப்பது... இதெல்லாம் ஓல்டு. திருட்டில்
லேட்டஸ்ட்  ‘டு லெட்’ திருட்டு!

‘டு லெட்’ போர்டு மாட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு வந்து, வாடகைக்கு வீடு தேடுவதுபோல நோட்டம் பார்ப்பது; பசையுள்ள பார்ட்டி பக்கத்தில் இருப்பது தெரிந்தால், அட்வான்ஸ் கொடுத்து குடிவந்து, அந்த வீட்டில் பழகி, வேளை பார்த்து லபக்கிக்கொண்டு செல்வதுதான் இது. அரவமில்லாத சென்னையின் புறநகர் பகுதிகள் ‘டு லெட்’ திருடர்களால் கதிகலங்கிக் கிடக்கின்றன.துரைப்பாக்கம், கண்ணகி நகரில் குடியிருக்கும் முட்டைக்கடை தங்கராஜ் மனைவி மாரிச்செல்விக்கு நேர்ந்த கொடுமையை அவரே சொல்லக் கேளுங்கள்...

‘‘நாங்க குடியிருக்கிறது நாலு போர்ஷன் உள்ள வீடு. கீழே மூணு போர்ஷனும் ஃபுல்லா இருந்துச்சு. மேல்தளத்தில் உள்ள ஒரு வீடு காலி. ஹவுஸ் ஓனர் பெருங்குடியில இருக்காரு. வாடகை வாங்க மட்டும்தான் வருவாரு. மேல உள்ள வீட்டுக்காக Ôடு லெட்’ போர்டு மாட்டி வச்சிருந்தாரு.

ஒருநாள், ஒரு அம்மாவும் பெரியவரும் வீடு வாடகைக்கு கிடைக்குமான்னு கேட்டு வந்தாங்க. சின்னசேலம் பகுதியில இருந்து வர்றதாவும், திருவான்மியூர்ல பொம்மைகள் செஞ்சு விக்கிறதாவும் சொன்னாங்க. பாக்க குடும்பப்பாங்கா இருந்தாங்க. ‘மேல உள்ள வீடுதான். போய்ப் பாருங்க’ன்னு சொன்னேன். பாத்துட்டுப் போனவங்க, அன்னைக்கு நைட்டே குடிவந்திட்டாங்க. மறுநாள் மேலே போயி பாத்தப்போ, அந்த அம்மா, அவங்க வீட்டுக்காரர் தவிர 3 ஆம்பிளைங்க இருந்தாங்க. 3 பேரையும் தன்னோட பிள்ளைங்கன்னு சொன்னாங்க.

மதியம் கீழே இறங்கிவந்த அந்த அம்மா, ‘வீட்டுக்காரர் எத்தனை மணிக்கு வேலைக்குப் போவாரு, உன் கல்யாணத்துக்கு எத்தனை பவுனு நகை போட்டாங்க’ன்னு எல்லாம் விசாரிச்சாங்க. கழுத்தில 9 பவுன் தாலிச்சரடு போட்டிருந்தேன். அதப்பத்தியும் கேட்டாங்க. பக்கத்துல குடியிருக்காங்களேன்னு முகத்தை முறிச்சுக்காம எல்லாத்துக்கும் பதில் சொன்னேன்.
தினமும் வந்து, ‘காபி குடிக்க வா, சாப்பாடு சாப்பிட வா’ன்னு தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கும். நான் போறதேயில்லே.

குடிவந்து நாலாவது நாள்... சாயங்காலம் 5 மணி இருக்கும். வீட்டைப் பூட்டிட்டு கடைக்கு கிளம்புனேன். வேகமா வந்த அந்த அம்மா, ‘வாம்மா... ஒரு காபி சாப்பிடலாம்’னு கூப்பிட்டுச்சு. ‘இல்லம்மா... வெளியில போறேன்’னு சொல்லிட்டு நடந்தேன். திடீர்னு, சந்துல ஒளிஞ்சிருந்த மூணு பசங்களும் என் கையை முறுக்கி, வாயில பிளாஸ்திரியை ஒட்டி அவங்க வீட்டுக்குத் தூக்கிட்டுப் போனாங்க. கத்த முயற்சி செஞ்சேன். அப்போ அந்த அம்மா, சினிமாவில வர்ற வில்லி மாதிரி காபியைக் குடிச்சுக்கிட்டே, ‘ரொம்ப கத்துறா... வாயிலயே குத்துங்கடா’ன்னு சொல்லிட்டு சிரிச்சுச்சு. அந்த பசங்க அடிச்சிக்கிட்டே தாலிச்சரடை பறிச்சாங்க. காதுல கிடந்த தோட்டை இழுத்ததால, காது கிழிஞ்சு ரத்தம் கொட்டுச்சு... அதோட மயங்கிட்டேன்... விழிச்சுப் பாத்தப்போ ரத்த வெள்ளத்தில கிடந்தேன்’’

நடுக்கம் குறையாமல் விவரிக்கிறார் மாரிச்செல்வி. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாரிச்செல்வி இப்போதுதான் சற்று தேறியிருக்கிறார். வேலை முடிந்ததும் சாவகாசமாக ஒவ்வொருவராக வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதைவிடக் கொடுமை... மாரிச்செல்வியின் இரண்டு புறமும் உள்ள வீடுகளில் இருந்த யாருக்கும் இந்த சம்பவம் தெரியவில்லை.

இந்த ‘டு லெட்’ திருட்டு பற்றி போலீஸ் தரப்பில் பேசினோம். ‘‘வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்றதா அவ்வப்போது வழக்குகள் பதிவாகும். இப்படி குடியிருந்து கொள்ளையடிச்ச சம்பவம் சென்னைக்குப் புதுசு. கிடைத்த தடயங்களின் அடிப்படையில் விசாரணை நடந்துக்கிட்டிருக்கு. விரைவில் அந்த கும்பல் பிடிபடும். வீட்டு உரிமையாளர்களும் குடியிருக்கிற பெண்களும் எச்சரிக்கையா இருக்கணும். சந்தேகம் எழுந்தா, உடனே எங்களுக்குச் சொல்லணும்’’ என்றார்கள்.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்றே தெரியவில்லை..!

ஹவுஸ் ஓனர்கள் கவனத்துக்கு...

 வீடு பார்க்க வருபவர்களை இரவு நேரத்தில் அனுமதிக்காதீர்கள். ஆண்கள் இல்லாத நேரத்தில் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.
 வாடகை அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக அடையாளம் தெரியாத ஆட்களுக்கு வாடகைக்கு விடாதீர்கள். குடிவருபவர்கள் வேலை செய்யும் இடம், சொந்த ஊர், முகவரி, உறவினர்கள் பற்றிய தகவல்களை கேட்டுப்பெற உங்களுக்கு உரிமை உண்டு.
 கண்டிப்பாக ரேஷன் கார்டு அல்லது ஐடி நகல் வாங்கி வையுங்கள்.
 வீட்டில் குடியிருப்பவர்களை வாரம் ஒருமுறையாவது சந்தித்துப் பேசுங்கள்.
 குடியிருப்பவர்கள் பற்றி புகார் வந்தால் உடனடியாக வீட்டைக்
காலி செய்வதோடு, காவல்துறைக்கும் தகவல் தெரிவியுங்கள்.

பெண்கள் கவனத்துக்கு...

 அருகில் குடியிருப்பவர்கள் பற்றி ஓரளவுக்காவது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
 செயல்பாடுகளில் சந்தேகம் இருந்தால் ஹவுஸ் ஓனருக்கு தெரிவியுங்கள்.
 புதிதாக அறிமுகமாகும் யாரிடமும் சம்பளம், நகைகள், குடும்ப விஷயங்கள் உள்பட முக்கிய தகவல்களை பேசாதீர்கள்.
 வெ.நீலகண்டன்