ஸ்டார் வித் கார்! ஒரு காலண்டர் கனவு...



இத்தனை நட்சத்திரங்களை ஒரு உச்ச இயக்குநரால்கூட ஒருங்கிணைத்திருக்க முடியுமா தெரியவில்லை. அதேபோல் ஒரு நிறுவனம் முயன்றால் மட்டுமே ஒன்றுசேர்க்க முடிகிற காரியமான பழம்பெருமை சொல்லும் 12 வின்டேஜ் மோட்டார் வாகனங்களை ஒன்றுசேர்த்ததும் அதே பெருமைக்குரிய நிகழ்வுதான். இந்த இரண்டு அரிய காரியங்களையும் ஒரே நோக்கத்துக்காக அனாயாசமாக முடித்துக் காட்டியிருக்கிறார் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத புகைப்படக்கலைஞர் ஜி.வெங்கட் ராம்.  அந்த நோக்கம் 2011ம் வருட காலண்டர் உருவாக்கம்.

விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, ஆர்யா, நாகார்ஜுனா, த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா, தமன்னா, ஜெனிலியா, ஸ்ருதி ஹாசன்  மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு துரத்தும் தயாரிப்பாளர்களுக்கே எளிதில் சிக்காத இந்த 12 நட்சத்திரங்கள் வெங்கட் ராமின் விரல் ‘க்ளிக்’குக்காக வரிசை கட்டி வந்தார்கள். ஒவ்வொரு ஸ்டாருடனும் ஒரு வின்டேஜ் வாகனத்தை வைத்து எடுத்த புகைப்படங்களுடன் புது வருடத்தை வரவேற்கிறார் அவர். கார்களையும் ஸ்டார்களையும் எதற்காக, எப்படி முடிச்சுப் போட்டார் வெங்கட்ராம்..?

‘‘கார்களுக்கும் ஸ்டார்களுக்கும் இருக்கிற அட்டாச்மென்ட் ஒருபக்கம். ஆனா இதோட நோக்கம், பழமையையும், புதுமையையும் முடிச்சுப் போடறதுதான். அரிய சேகரிப்புகள்ல மோட்டார் வாகனங்கள் பழமையோட பெருமை சொல்ற வடிவம். அதேபோல நவீனம்னா இந்த நிமிஷம் லைம் லைட்ல இருக்கிற ‘ஷோ பீப்பிள்’. இந்த ரெண்டு விஷயத்தையும் ஒண்ணா இணைக்கும்போது ஒரு அழகியல் கிடைக்கும். இந்த முயற்சி இன்னைக்கு நேத்துன்னு இல்லாம பல வருடங்களா எனக்குள்ள இருந்தது...’’ என்று உற்சாகமாகும் வெங்கட் ராம், அடிப்படையில் விளம்பரத்துறை சார்ந்த புகைப்படக்கலைஞர். சினிமாவின் வியாபாரப் பெருக்கத்துக்கு நவீன தொழில் நுட்பத்தின் அவசியம் உணரப்பட்ட நேரத்தில் சரியாக சினிமாவுக்குள் வந்தவர்.

வெங்கட் ராமின் புகைப்படங்களைத் தாங்கிய சினிமா அழைப்பிதழ்கள் படங்களுக்கு இணையாக பேசப்பட்டன. ‘பாய்ஸ்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘சச்சின்’, ‘காக்க காக்க’, ‘ஆயுத எழுத்து’, ‘கஜினி’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பருத்திவீரன்’, ‘அயன்’, ‘அசல்’, ‘வேலாயுதம்’ என தொடரும் அவரது தேவை, அவரை உச்ச நட்சத்திரங்களின் ‘டார்லிங்’ ஆக்கியது தனிக்கதை. அந்த நெருக்கமே அவரது காலண்டர் கனவுக்கான சாத்தியத்தையும் உண்டாக்கியிருக்கிறது. தொடர்ந்து பேசினார் நட்சத்திரங்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

‘‘எல்லாருமே பிஸியான நட்சத்திரங்கள். அதனாலேயே என் இந்த முயற்சி தள்ளிப் போய்க்கிட்டு இருந்தது. இருந்தாலும் தங்கள் பிஸியான ஷெட்யூல்ல எனக்காக வந்து போஸ் பண்ணிய நட்சத்திரங்களோட ஒத்துழைப்பு நெகிழ வச்சது. இன்னொரு பக்கம் வின்டேஜ் வாகனங்களுக்கான சேகரிப்பு. அந்த விஷயத்தில ஏவி.எம் தயாரிப்பாளர் எம்.எஸ். குகன் சாரோட ஒத்துழைப்புக்கு நன்றி சொல்லணும். அவரே வின்டேஜ் கார் லவ்வர்தான். அவரோட முயற்சியில செவர்லே இம்பாலா, எம்ஜிடிபி 1939, எம்ஜிடிபி 1956, ஸ்டுடிபேக்கர் ப்ரெஸிடென்ட், செவர்லே ட்ரக், செவர்லே ஈகிள் மாஸ்டர், ஆஸ்டின் சம்மி, ஜாகுவார் எஸ் டைப், டாட்ஜ் பிரதர், ஃபோர்டு கார்களோட பி.எஸ்.ஏ பேன்தம், தி ஃபேமஸ் ஜேம்ஸ் பைக்குகள்னு 1929லிருந்து 70 வரையிலான வாகனங்களை ஒன்றுசேர்க்க முடிஞ்சது.

பின்னி மில்லுல இதுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்தேன். நவம்பர் 10ம் தேதி ஆரம்பிச்சு டிசம்பர் 17ல ஷூட்டை முடிச்சேன். ஸ்டாரும், காரும் ரெடியாகி வந்த பல நாட்கள்ல அழையா விருந்தாளியா மழையும் வந்தது. மழையைப் பார்த்ததும் பல கார் உரிமையாளர்கள் கவலைப்பட ஆரம்பிச்சாங்க. ஏன்னா, பல லட்சம் செலவு செய்து பராமரிச்சு வச்சிருக்க வாகனங்கள் மேல மழைத்தண்ணி பட்டு பொலிவு குறையறதை யாருமே விரும்பலை. அந்தக் கஷ்டம் புரிஞ்சு, அவுட்டோர்ல எடுக்க இருந்த பல ஸ்டில்களை இண்டோர்ல ப்ளான் பண்ண வேண்டியிருந்தது. அதுவும் ஒரு அழகைத் தந்தது. அதோட அவுட்டோர்ல மழையும் நான் எதிர்பார்க்காத நல்ல ‘கிரீனை’த் தந்தது சந்தோஷமான அனுபவமாகி என் காலண்டர் கனவை முழுமையாக்க உதவிச்சு..!’’
 வேணுஜி