வெங்காயம்!



ஜம்பதாவது சதமடித்த சச்சினின் புகழையும் விலையேற்றத்தில் முதல்முறையாக செஞ்சுரி போட்டு மிஞ்சி விட்டது வெங்காயம். 'கார் டயர் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என்கிற ரீதியில் தங்கத்துக்கு அடுத்து வெங்காயத்துக்குத்தான் இப்போது கிராக்கி. ஆம்லெட்டில் வெங்காயம் இல்லை என தகராறு செய்யும் குடிமகன்களை அடிக்கிற அளவுக்கு சில ஹோட்டல்களில் பிரச்னை. இல்லத்தரசிகளை மட்டுமின்றி பக்கோடா கடை முதல் பார்க் ஷெரட்டன் ஹோட்டல் வரை கொஞ்சமாக உரிக்க வைத்து அதிகமாகவே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த விலையேற்றத்தை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் மக்கள்?

‘‘உரித்துப் பார்த்தால் வெங்காயத்துக்குள் ஒண்ணும் இருக்காது. அதேபோல இன்னும் சில வாரங்களில் இந்தப் பிரச்னை இல்லாமலேயே போய்விடும், இது தற்காலிக கஷ்டம்தான்’’ என நம்பிக்கையோடு பேசுகிறார்கள் வெங்காய பிசினஸில் இருக்கும் வியாபாரிகள்.

‘‘விலையேற்றத்தால எங்களுக்கு லாபமே இல்லாம போச்சு. இப்ப தினமும் ஆயிரம் ரூபாய் நஷ்டம். அதேநேரத்துல வெங்காயத்தைப் பயன்படுத்தாம எதையும் சமைக்க முடியல. இந்த விலையேற்றம் நிரந்தரமில்லைங்கிறதால, சாப்பாடு அயிட்டங்களோட ரேட்டை உடனே ஏத்திடவும் முடியாது. வெஜிடபிள் சாப்பாடு செய்ய ஒரு கிலோ அரிசிக்கு அரைக் கிலோ வெங்காயம் தேவைப்படும். அதை பத்து பேர் சாப்பிடலாம். பதினைஞ்சு ரூபாய்க்குதான் விற்கிறோம். அதே போல ஒரு ஆனியன் தோசைக்கு ஒரு வெங்காயம் பயன்படுத்தணும். ஆனியன் தோசையோட விலை பதினைஞ்சு ரூபாய். ஒரு வெங்காயம் பத்து ரூபாய் அளவுக்கு விற்கும்போது முப்பது ரூபாய் விலை வச்சாதான் லாபம் கிடைக்கும். அதனால விலை சீராகும் வரை எங்க ஹோட்டல்ல வெங்காய அயிட்டங்களை வேற வழியே இல்லாம நிறுத்தி வச்சிருக்கோம்’’ என்கிறார் சிறிய ரக ஹோட்டலை நடத்தி வரும் கார்த்திகேயன்.

வெங்காயம் இல்லாதசமையல்!

வெங்காயம், முருங்கைக்காய் போன்ற காஸ்ட்லி காய்கறிகள் இல்லாமலும் சுவையாக சமைக்கும் முறையைச் சொல்லித் தருகிறார் சமையல்கலைராணி மல்லிகா பத்ரிநாத்...
 சேமியா உப்புமா, ரவா உப்புமா வகைகளில் வெங்காயத்துக்குப் பதிலாக முட்டைக்கோஸைப் பயன்படுத்தலாம். சுவையில் பெரிய வித்தியாசம் இருக்காது.
 சாம்பார் வகைகளில் கேரட், முள்ளங்கி, கத்தரிக்காய்களோடு முட்டைக்கோஸை சேர்த்துக்கொள்ளலாம்.
 
பொரியல் வகைகளில் காய்கறிகளோடு மசாலாவில் சீரகத்தை மட்டும் சேர்த்தால் போதுமானது.

 சமோசா, வெஜிடபிள் போண்டா வகைகளில் உருளைக்கிழங்கோடு முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி பயன்படுத்தலாம்.
 நார்த் இந்தியன் உணவுகளில் வெங்காயத்துக்குப் பதிலாக தனியா பவுடர், சீரகப்பவுடர், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய், இஞ்சி, தக்காளியை அதிகம் பயன்படுத்தலாம். அல்லது சீசனுக்குத் தகுந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.
வெங்காயத்தின் ருசி ஒரு வகை என்றால் நாம் சேர்க்கும் காய்கறிகளின் ருசி தூக்கலாக இருக்கும். வெங்காய விலையை ஒப்பிடும்போது சீசனுக்குத் தகுந்த காய்கறிகளைப் பயன்படுத்துவதுதான் உத்தமமானது.

சென்னை ரத்னா கஃபே ஹோட்டல் உரிமையாளர் ராஜேந்திர குப்தாவின் அணுகுமுறை வேறு மாதிரியாக இருக்கிறது. ‘‘60 வருஷமா ஹோட்டலை நடத்திட்டு வர்றோம். எங்களுக்குன்னு ஒரு தரம் இருக்கு. நஷ்டம் ஏற்பட்டாலும் கௌரவத்துக்காகவே ஹோட்டல் நடத்துறவங்கள்ல நாங்களும் ஒருத்தர். அந்த நற்பெயரை தற்காலிக நஷ்டத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது.  வெங்காய சாம்பார்னா சென்னை மக்கள் எங்க கடையைத்தான் அடையாளம் காட்டுவாங்க. அப்படித் தேடி வர்றவங்கள திருப்திப்படுத்தினால் மட்டுமே
கஸ்டமர்களை தக்க வைக்க முடியும். அதே நேரத்துல வெங்காயத்துக்குப் பதிலாக வேற பொருளைப் பயன்படுத்தினாலும் பாரம்பரிய ருசி கெட்டுப்போயிடும். அதனாலதான் நாங்க விலையை ஏத்தியோ, மாற்றுப்பொருள் பயன்படுத்தியோ காம்ரமைஸ் பண்றத விரும்பல’’ என்கிற ராஜேந்திர குப்தா நடத்துகிற ரத்னா கஃபே ஹோட்டல் ஆனியன் ஊத்தப்பமும், ஆனியன் தோசையும் மிகப்பிரபலம்.

காய்கறி விற்கும் அஞ்சலக்கோ வெங்காயம் விற்பனையாகவில்லை என்கிற கவலை. ‘‘விலை கம்மியா இருந்தா ஜாஸ்தியா வாங்குவாங்க. இப்ப விலை ஜாஸ்தியா இருக்குறதால கம்மியா வாங்குறாங்க. முன்னல்லாம் நாளைக்கு ரெண்டு, மூணு மூட்டை வெங்காயம் வித்து காலியாகிடும். இப்ப 1 மூட்டையை விற்கிறதுக்கே மூணு நாளாகிடுது. ஒரு மூட்டை வெங்காயம் கால் சவரன் தங்க ரேட்டுக்கு வித்தா மக்கள் எப்படி வாங்குவாங்க? வெங்காயம் மட்டுமில்லாம, எல்லா காய்கறி ரேட்டும் எக்குத்தப்பா ஏறிடுச்சு. எங்களுக்கும் வருமானம் இல்லாமப் போச்சு. காய்கறி வாங்க வர்ற சிலர் ரேட்டைக்கேட்டு வாங்காமலே போயிடுறாங்க’’ என்கிறார் அஞ்சலை சோகமாக.

கஷ்டமானசமாச்சாரம்!

வெங்காயத்தைத் தாண்டி செஞ்சுரி அடித்து, அதே விலையில் நீடிக்கிறது முருங்கைக்காய். நடிகர் & இயக்குனர் பாக்கியராஜ்தான் முருங்கைக்காய் என்றதும் ஞாபகத்துக்கு வருவார். அவரிடம் பேசினோம்... ‘‘பொதுவா விலைவாசி ஏற்றம்னாலே மக்களுக்குக் கஷ்டம்தான். கிராமங்கள்ல வீட்டுக்கொரு முருங்கை மரம் வளர்ப்பாங்க.  காயை அக்கம்பக்கத்து வீட்டுக்காரவங்களுக்கு சும்மாவே கொடுப்பாங்க. சிட்டியில இருக்குறவங்களுக்குத்தான் முருங்கைக்காய் இப்ப கஷ்டமான ‘சமாச்சாரம்’ ஆகிடுச்சு.’’

‘‘தங்க விலையேற்றத்தை பெரிய விஷயமே இல்லைன்னு ஆக்கிடுச்சு வெங்காய ரேட்டு. முக்கால்வாசி சமையல் வெங்காயம் இல்லாம நடக்காது. ஆனா, இப்ப அதை மருந்துப்பொருள் மாதிரி பயன்படுத்திட்டு இருக்கோம். வெங்காயத்தோட அருமை தெரியாம இருந்தவங்க இப்ப உணர்ந்திருப்பாங்க...’’ எனச் சொல்லி விட்டு காய்கறிக்கடைகளை வெறித்துப் பார்த்தபடி நடையைக் கட்டுகிறார் இல்லத்தரசியான ராஜேஸ்வரி.

பக்கோடா கடைகளுக்கும் காயத்தை உண்டாக்கியிருக்கிறது வெங்காயம். ‘‘வெங்காயத்தைக் கம்மி பண்ணி பக்கோடா செஞ்சா, மாவு அதிகமாகி டேஸ்ட் குறைஞ்சிடும். அதான் நூறு கிராம் பக்கோடாவுக்கு ரெண்டு ரூபாயை ஏத்திட்டோம். விற்பனை கம்மியாயிடுச்சு. ஆனாலும், விரும்பிச் சாப்பிடுறவங்க வாங்கிட்டுத்தான் இருக்காங்க. விலையேற்றத்துக்கு அரசாங்கத்தையோ, விவசாயிகளையோ குறை சொல்ல முடியாது. இது மழையால ஏற்பட்ட பாதிப்புதான். இந்தியாவிலேயே வெங்காயம் அதிகமா விளையுற மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர்ல இருந்து போன வாரம்தான் திரும்பினேன். அங்கே தோட்டமெல்லாம் அழுகிப்போனதைப் பார்த்தேன். இறக்குமதி செஞ்சா ரெண்டு மூணு நாள்ல கூட சரியாயிடும். அதிகபட்சம் வாரக்கணக்கில்தான் இந்த சிக்கல் இருக்கும்’’ என நம்பிக்கையாய்ப் பேசுகிறார் பக்கோடா கடை
உரிமையாளரான ராமமூர்த்தி. 

என்ன சம்பந்தம்?

‘வெங்காயம்’ என்ற படத்தில் சத்யராஜ் நடிக்கிறார். வெங்காய விலை விவகாரம் பற்றி அவரிடம் கேட்டோம்... ‘‘ஐயய்யோ... இது விவகாரமான மேட்டரா இருக்கே!’’ என்று பதறிய அவர், ‘‘பெரியார் மேல பற்றுள்ளவர் சங்ககிரி. ‘வெங்காயம்’னு ஒரு படத்தை அவர் இயக்குறார். அந்தப் படத்துல எழுச்சிமிக்க, பகுத்தறிவுள்ள ஒரு பாடலை சுப.வீரபாண்டியன் எழுதியிருக்கார். நான் நடிகர் சத்யராஜாவே அந்த ஒரு பாட்டுல மட்டும் நடிச்சிட்டு வந்திருக்கேன். ‘வெங்காயத்துக்கும்’ எனக்கும் இப்ப இருக்குற சம்பந்தம் இது மட்டுந்தாணுங்கோ’’ என்றார்.

இறக்குமதி சலுகை, வரத்து அதிகரிப்பு என வெங்காய விலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தாலும், பீதி மட்டும் இன்னும் குறையவில்லை.
 ஆர்.எம்.திரவியராஜ்