சுட்ட கதை! சுடாத நீதி!



அந்தப் பெண்மணி ஆபீஸில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து திடீரென போன். வேலைக்காரியின் குரலில் பதற்றம் தெரிந்தது. ''அம்மா, குழந்தைக்கு திடீர்னு மூச்சுத்திணறல் வந்து அழுதுக்கிட்டு இருக்கு. எனக்கு ஒண்ணும் புரியலை. உடனே வாங்க!’’

வேகமாக காரை ஓட்டியபடி வீட்டுக்குப் புறப்பட்டார் அந்தப் பெண். குழந்தைக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை வருகிறது. வேலையையும் விடமுடியாது; அதனால்தான் வீட்டோடு வேலைக்கு ஆள் வைத்தது. ‘ஏற்கனவே டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக்கொண்டு போகலாம்’ என காரை நிறுத்தி, ரோட்டோர மருந்துக்கடைக்கு ஓடினார். வாங்கிக்கொண்டு திரும்பும்போதுதான் ஒரு விஷயம் உறைத்தது. காரிலேயே சாவியை வைத்துவிட்டு இறங்கியிருக்கிறார். தானியங்கி கதவு மூடிக்கொண்டது. இப்போது சாவி இல்லாமல் கார் கதவைத் திறக்கமுடியாது.

‘கடவுளே, ஏன் இப்படி சோதிக்கிறாய்... என்னைக் காப்பாற்று!’ என்று கண்ணீர் மல்க வானை நோக்கி வேண்டினார் அந்தப் பெண். அப்போது அரதப்பழசான ஒரு கார் அருகே வந்து நிற்க, அதிலிருந்து அழுக்கான ஒரு ஆசாமி இறங்கினான். ‘‘என்ன பிரச்னை?’’ என்று கேட்டான். இவரும் சொன்னார்.

அந்த ஆசாமி கதவை லேசாக ஆட்டி ஏதோ செய்தான். உடனே கதவு திறந்துகொண்டது. அந்தப் பெண்மணி உற்சாகமாகிவிட்டாள். ‘‘சார்! நல்ல நேரத்துல வந்து ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க...’’ என்று அவனைப் புகழ்ந்துகொண்டே போனாள்.

அவன் கூச்சத்தோடு, ‘‘நான் யார் என்று தெரிந்தால் நீங்கள் இப்படிப் பேச மாட்டீர்கள் மேடம்! நான் கார் திருடன். ஜெயிலில் இருந்துவிட்டு இப்போதுதான் வெளியில் வந்திருக்கிறேன்’’ என்றான்.

அந்தப் பெண்மணியோ, ‘‘கடவுளே! உனக்கு நன்றி. தொழில்நுட்பம் தெரிந்த ஆளை சரியான நேரத்தில் அனுப்பினாய்’’ என்றாள்.
           நிதர்ஸனா