சூடா ஒரு கப் டீ சாப்பிடுங்க...



‘பூ’ வாசத்துடன் நுழைந்த இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனுக்கு சினிமாவின் அடுத்தடுத்த வாசல்கள் திறந்துகொண்டிருப்பது அதிர்ஷ்டத்தினால் இல்லை என்பது அவருடன் பேச ஆரம்பித்த மூன்றாவது நிமிஷத்திலிருந்தே விளங்கிவிடுகிறது. மூன்று படப்பாடல்கள் காற்றில், மேலும் ஆறு படப்பாடல்கள் விரலசைவில்... என்றிருக்கும் குமரன் இப்போது இயக்குநரும்கூட. அவரே தயாரிக்கும் ‘தேநீர் விடுதி’யை தேனி, கம்பம், போடிநாயக்கனூரில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.

‘‘இத்தனை அவசரமாக இயக்குநராக வேண்டிய அவசியம்..?’’

‘‘இத்தனை லேட்டாவான்னு கேக்கறாங்க எனக்கு நெருக்கமானவங்க. கொஞ்சம் கடந்த காலத்துக்குப் போய் என் கதையைச் சொன்னேன்னா நீங்ககூட இதையே கேப்பீங்க...’’ என்று ஆரம்பித்த குமரன், டார்டாய்ஸ் சுருளை சுழலவிட்டு பிளாஷ்பேக் போனார்.

‘‘நான் இசை கற்றவனில்லைன்னும், பிலிம் இன்ஸ்டிடியூட்ல சினிமாட்டோகிராபி படிச்சவன்னும் சொன்னா நம்புவீங்களா..? அதுதான் நடந்தது. சின்ன வயசிலிருந்தே மனசுக்குள்ள ஓடிக்கிட்டிருந்த ரிதம், ‘இசையமைப்பாளனா முயற்சி செய்’னு என்னை வள்ளியூர்லேர்ந்து சென்னைக்கு அனுப்பி வச்சது. ஆனா ஸ்கூல் ஹெட் மாஸ்டராயிருந்த எங்கப்பா என்னை சினிமாவுக்கு விடறதாயில்லை. ரெண்டையும் ஒண்ணாக்க பிலிம் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்தேன். அப்பாவை சரிக்கட்ட படிப்பாச்சு. என் ஆர்வத்துக்கு சினிமாவுமாச்சு.

டிப்ளமோ வாங்கிட்டு வெளியே வந்தவனுக்கு சென்னை துறைமுகத்தில வேலை ரெடியா இருந்தது. எனக்குன்னே உருவாக்கப்பட்டதைப் போல ‘ஆடியோ விஷுவல் செக்ஷன்’னு ஒரு துறையை அறிமுகப்படுத்தியிருந்தாங்க. அங்கே இருக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்ல பெரும்பாலானவங்க படிப்பறிவில குறைஞ்சவங்க. அவங்களுக்கான பாதுகாப்பு விஷயங்களைப் பாடமா புரிய வைக்கறதைவிட, படமா எடுத்துக்காட்டினா நல்ல பலன் இருக்கும்னு ஒன்றரை கோடி ரூபாய்க்கு நவீன கருவிகள் வாங்கிக்கொடுத்திருந்தாங்க. நான்தான் அதுக்கு அதிகாரியா இருந்தேன். தொழிலாளர்களோட பணிகள், பாதுகாப்பு சம்பந்தமா 300 படங்கள் வரை எடுத்தேன். இசை, கேமரா, டைரக்ஷன், எடிட்டிங்னு அதில நல்ல பயிற்சி கிடைச்சது. பதினைஞ்சு வருஷம் அரசாங்க வேலைல இருந்து அப்பாவோட மனசை மகிழ்ச்சிப்படுத்தியது போதும். இனிமே என் முறைன்னு நான் சேர்த்து வச்சிருந்த பணம், பேங்க் லோன்னு போட்டு வீட்லயே ஸ்டுடியோ போட்டேன். இசை சம்பந்தமா நிறைய சாஃப்ட்வேர் வாங்கி ஏகப்பட்ட முயற்சிகள் செஞ்சு பார்த்தேன். அதில ஒரு சிடிதான் டைரக்டர் சசி கைக்குப் போய் சினிமாவுக்குள்ள ‘பூ’வைக் கொடுத்து என்னை வரவேற்றார்.

இசையமைப்பாளனா உக்காந்து ஏகப்பட்ட கதைகள் கேட்கிறதில உள்ளேர்ந்த ஒரு டைரக்டர் எழுந்து உக்காந்துட்டான். என்னோட எந்தக் கனவுக்கும் யாரையும் பலிகொடுக்காத என் வழக்கப்படியே, நானே பணத்தைத் திரட்டி ஒரு படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். வெறும் 45 நாள்ல எடுத்த முடிவு, இப்ப எண்பது சதவிகித படமா முடிஞ்சு நிக்குது. என் பயிற்சிகளினால ஷூட்டிங் ஸ்பாட்லயே எடிட்டிங்கையும் முடிக்கிறதால, சுடச்சுட படம் ரெடியாகிட்டே இருக்கு.

கலகலப்பும் என்கூடப்பிறந்த குணம். நான் இருக்க இடம் காமெடியில களைகட்டும். அந்த சென்ஸ் ஆஃப் ஹியூமரை வச்சே முழுக்கதையை ரெடி பண்ணினேன். ஆதித்தும் ‘இனிது இனிது’ல அறிமுகமான ரேஷ்மியும் என் கதைக்குப் பொருத்தமானவங்களா தெரிஞ்சாங்க. அண்ணன் சாப்பிடப்போகும் மதியவேளைல அவர் நடத்தற கடையைப் பார்த்துக்க வரும் ரேஷ்மிக்கும், எதிர்த்த டீக்கடைக்கு அந்நேரம் பார்த்து வரும் ஆதித்துக்கும் பத்திக்கிற காதல் நிறைவேற ஒரு பிரச்னை தடையா இருக்கு. பந்தல்போடற ஆதித்தும், அவர் அண்ணனும் தரைல வாழற ‘தண்ணி’ பார்ட்டிகள். ஆனா ரேஷ்மியோட அப்பா கொலகாரனைக்கூட மன்னிப்பார், குடிகாரனை மன்னிக்கவே மட்டார். போதாதா பிரச்னை. இதை ரெண்டரை மணிநேரம் சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கேன். சூடா ஒரு கப் டீ குடிக்கிற உற்சாகம் படம் முழுதும் இருக்கும்.

ஹீரோவோட அண்ணனா கூத்துப்பட்டறையிலேர்ந்து சுரேஷ் கொடுமுடிங்கிறவரையும், ஹீரோயினோட அப்பாவா என்கிட்ட இசையமைக்கக் கேட்டு கதை சொல்ல வந்திருந்த பிரபாகரையும் நடிக்க வச்சிருக்கேன். கதை சொல்ல வந்த பிரபாகர் என் படக் கேரக்டருக்குப் பொருத்தமா இருப்பார்னு அவரை ஃபிக்ஸ் பண்ணினா, ‘என் கதைக்கு நீங்க பொருத்தமா இருக்கீங்க. அடுத்து நடிக்க நீங்க ரெடியா இருங்க...’ன்னு என்னை ஃபிக்ஸ் பண்றார். அடுத்து என்னென்ன நடக்க இருக்கோ..?’’
 வேணுஜி