குளிருது...வறளுது...மாறுது... கேள்வி பதில்கள்



எத்தனை முறை குளித்தாலும், என்ன க்ரீம் உபயோகித்தாலும், குளிர்காலத்தில் சருமம் வறண்டு, வெள்ளை வெள்ளையாக மாறுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. எப்படித்தான் பராமரிப்பது?
 ச.மாலதி, திருப்பத்தூர்.

பதில் சொல்கிறார்‘நேச்சுரல்ஸ்’ வீணா
குளிர்காலத்தில், வழக்கமான சருமப் பராமரிப்பிலிருந்து கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். குளிருக்கு இதமாக ஆவி பறக்கும் தண்ணீரில் குளிக்கவே விரும்புவோம். ஆனால் அப்படிக் குளிப்பது, சருமத்தின் ஈரப்பதத்தை முழுக்க நீக்கி, வறட்சியைத் தரும். வெதுவெதுப்பான தண்ணீரே இந்த நாட்களில் குளிக்க ஏற்றது. குளிப்பதற்கு முன், குளிர்ந்த தண்ணீரில் 2 நொடிகள் குளித்துவிட்டு, பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். குளித்த உடனேயே முகம் மற்றும் உடலில் மாயிச்சரைசர் தடவினால், சருமத்தின் ஈரப்பதம் பத்திரப்படுத்தப்படும். கை, கால்களில் வறட்சி அதிகமிருந்தால், க்ரீம் வடிவிலான மாயிச்சரைசர் தடவலாம்.

இந்த நாள்களில் சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் சேரும். ஓட்ஸ் அல்லது கடலை மாவை பாலில் கலந்து, சருமத்தில் தடவி, லேசாகத் தேய்த்து பிறகு குளிப்பது, இறந்த செல்களை அகற்றி, சருமத்துக்குப் புத்துணர்வு தரும். மாயிச்சரைசர் அடங்கிய சோப் அல்லது திரவ வடிவிலான லிக்யூட் சோப் ஏற்றது.உதடுகள் வறண்டு போகாமலிருக்க வாசலைன் அல்லது வைட்டமின் இ அடங்கிய லிப் பாம் தடவலாம்.

இளம் சருமத்துக்குத் தனி, முதிர்ந்த சருமத்துக்குத் தனி என சருமத்தின் தன்மைக்கேற்ற மாயிச்சரைசரை தேர்வு செய்ய வேண்டியது முக்கியம். பார்லர்களில் செய்யப்படுகிற மாயிச்சரைசிங் ஃபேஷியல், ட்ரை ஃப்ரூட் ஃபேஷியல், பாதாம் ஃபேஷியல் போன்றவை பனிக்கால சருமப் பராமரிப்புக்குப் பெரிதும் உதவும்.


மொபைல் போன் பேட்டரியை தினமும் முழுக்க சார்ஜ் செய்கிறேன். இருந்தாலும் மாலையில் வீடு திரும்புவதற்குள் மொத்தமும் தீர்ந்துபோகிறது. இன்னும் அதிக நேரம் பயன்படுத்த வழி உண்டா?
 ஆர்.ஜோதிநரசிம்மன், கோவில்பட்டி.

பதில் சொல்கின்றனர் நோகியா சர்வீஸ் மையத்தினர்

செட்டிங்ஸ் மெனுவுக்கு சென்று ‘கீபேட் சவுண்ட்’டை ‘ஆஃப்’ செய்துவிடுங்கள்.

கூடிய வரை வைப்ரேஷனை தவிர்த்து ரிங்டோனையே பயன்படுத்துங்கள். வைப்ரேஷன் நிலையில் இருந்தால் அதிக சக்தி தேவைப்படும்.

டிஸ்ப்ளே செட்டிங் சென்று பேக்லைட் நேரத்தை 5 நொடிகளுக்கும் குறைவாக மாற்றுங்கள்.

தேவையற்ற புரோக்ராம்களை டவுன்லோட் செய்து வைப்பதையும், பயன்படுத்துவதையும் தவிருங்கள்.

பேட்டரி அளவு குறைவாக இருக்கும்போது ப்ளூடூத், கேமரா, ஃப்ளாஷ் லைட், இணைய இணைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம். இவை அனைத்துமே அதிக சக்தி இழுக்கும்.

‘நிக்கல் மெட்டல் ஹைட்ரைட்’ பேட்டரியாக இருந்தால், அது முழுக்கத் தீர்ந்த பிறகு சார்ஜ் செய்வது நல்லது. முடியாதபட்சத்தில் 20 முறைக்கு ஒரு முறையாவது முழுக்கத் தீரச் செய்து, அதன்பின் சார்ஜ் செய்ய வேண்டும்.

லித்தியம் அயன் பேட்டரிகளை பாதியிலோ, முழுமையாகத் தீர்ந்த பிறகோ  எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் செய்யலாம்.

என் மகள் சென்னையில் இருக்கிறாள். அவளுக்கு நான் சமைக்கிற அசைவ உணவென்றால் கொள்ளை ப்ரியம். முதல் நாள் இரவு சமைத்து, ரயிலில் (10 மணி நேரப் பயணம்) எடுத்துச் சென்றால், கெட்டுப்போகாமல் இருக்குமா?
 ஆர்.மோகனா, திண்டுக்கல்.

பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் எஸ்.ஸ்டெல்லா
பொதுவாக உணவு கெடாமல் இருக்க 60 டிகிரி அல்லது அதற்கு அதிக வெப்பமோ, 5 டிகிரி அல்லது அதற்குக் குறைவான குளிர்ச்சியோ தேவை. 10 மணி நேரப் பயணம் என்பதால் உணவை ஃப்ரீசரில் உறையச்செய்து, அதை ஒரு இன்ஸுலேட்டட் பாத்திரத்தில் வைத்து எடுத்துச் செல்லலாம். ஆனால், அதை மைக்ரோவேவ்வில் சூடுபடுத்தினால் மட்டுமே சுவையில் அதிக மாற்றம் இல்லாமல் இருக்கும்.